Sunday, June 14

ஹபீபி – திரைப்பட விமர்சனம்

கைத்தறியின் ஓசைக்கும், காதலின் மௌனத்திற்கும் நடுவே சிக்கித் தவிக்கும் ஒரு தலைமுறையின் கதை!

ஒரு காலத்தில் ஊரின் அடையாளமாக இருந்த கைத்தறி இன்று தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள போராடிக் கொண்டிருக்கிறது. அந்த போராட்டத்தின் மையத்தில் வாழும் ஒரு குடும்பத்தின் வாழ்வியல் பயணத்தை உணர்வுபூர்வமாக பதிவு செய்கிறது *ஹபீபி*.

கடையநல்லூரை பின்னணியாகக் கொண்டு நகரும் கதையில், கைத்தறி நெசவையே தனது உயிராக நேசிக்கும் மூத்த நெசவாளர் முகமது யூசுப் வாழ்கிறார். அவருக்கு தறி என்பது வெறும் தொழில் அல்ல; அது அவரது பாரம்பரியம், அடையாளம், வாழ்க்கை. ஆனால் காலத்தின் வேகம் பாரம்பரிய தொழில்களை பின்னுக்குத் தள்ளத் தொடங்குகிறது. மின் விசைத்தறிகளின் வளர்ச்சி, சந்தை மாற்றங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவை கைத்தறி குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்குகின்றன.

குடும்பத்தின் பொருளாதார சுமையை குறைக்க யூசுப்பின் தம்பி வளைகுடா நாட்டிற்கு வேலைக்குச் செல்கிறார். வெளிநாட்டுப் பணம் குடும்பத்திற்கு ஓரளவு நிம்மதியை கொடுத்தாலும், தன் மண்ணையும் தொழிலையும் விட்டு பிரிவதை யூசுப் மனதார ஏற்க முடியவில்லை.இந்த சூழலில், அடுத்ததாக குடும்பத்தின் நம்பிக்கையாக இருக்கும் யூசுப் கானின் மகன் அபுதாஹிரையும் வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற அழுத்தம் அதிகரிக்கிறது. குடும்பத்தின் எதிர்காலம் ஒரு பக்கம், தனது கனவுகளும் காதலும் மறுபக்கம் என இரு பாதைகளுக்கு நடுவே நிற்கிறான் அபுதாஹிர்.அவனது இதயத்தில் மௌனமாக மலர்ந்திருக்கும் காதல் நிலோபர் நிஷா. வார்த்தைகளால் வெளிப்படாத அந்த நேசம், பிரிவின் பயத்தால் இன்னும் கனமாகிறது. வாழ்க்கைக்காக வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம், காதலை விட்டுப் பிரிய வேண்டிய வேதனை, குடும்ப பொறுப்பு என அபுதாஹிரின் உள்ளத்தில் பெரும் போராட்டமே எழுகிறது அதன் பின் நடந்தது என்ன? என்பதுதான் படத்தின் மீதி கதை .

கைத்தறி நூல்களின் வாசனையோடு வாழ்ந்த ஒரு தலைமுறையின் வலியை திரையில் உயிர்ப்பிக்கும் முகமது யூசுப் என்ற கதாபாத்திரத்தில் கஸ்தூரி ராஜா சிறப்பாக நடித்துள்ளார். தொழிலை நேசிக்கும் ஒரு கலைஞனின் பெருமிதம், காலத்தின் மாற்றத்தால் அதே தொழில் அழிவின் விளிம்பில் நிற்கும் போது ஏற்படும் இயலாமை, குடும்பத்தின் எதிர்காலம் குறித்த கவலை, மகனின் வாழ்க்கையை எண்ணி மனம் உடையும் ஒரு தந்தையின் வேதனை என ஒவ்வொரு உணர்வையும் மிக இயல்பாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அபுதாஹிராக அறிமுகமாகும் ஈஷா, சிறுவயது குறும்புகள் இன்னும் முகத்தில் மிஞ்சியிருக்கும் ஒரு இளைஞனாக தொடங்கும் அவரது பயணம், வாழ்க்கையின் பாரத்தை சுமக்க வேண்டிய கட்டாயத்தில் முதிர்ச்சி அடையும் மனிதனாக மாறுகிறது. காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் தருணங்களிலும், குடும்பத்திற்காக கனவுகளை தியாகம் செய்ய வேண்டிய சூழலிலும் தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.

மாளவிகா மனோஜ் ஏற்றிருக்கும் நிலோபர் நிஷா கதாபாத்திரம், படம் முழுவதும் வார்த்தைகளால் அல்லாமல் , பார்வைகளால் உணர்வுகளை கடத்கின்றது , பட இறுதியில் பேசும் சில வரிகளின் மூலம் பிரிவின் வலியையும், காத்திருப்பின் வேதனையையும் ஆழமாக பதிய வைக்கும் கதாபாத்திரத்தில் அவரின் நடிப்பு நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தனஸ்ரீ, அனுஸ்ரேயா ராஜன், ஜெயஸ்ரீ பினுராஜ், அருள் குமார், ரேகா குமணன், போன்ற ஏனைய நடிகர்களும் அவரவர் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார்கள்

ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி கதை நிகழ் கால கட்டத்தினை அப்படியே ரசிகர்களின் கண் முன்னே அழகுற காட்சிப்பதிவு செய்து உள்ளார் .

சாம் சி.எஸ் இசையின் பின்னணி இசை, படக்கதையின் தன்மை மாறாத வண்ணம் ,கதாபாத்திரங்களின் உணர்வுகளோடு பயணிக்கிறது . பாடல்கள் பார்க்கவும் கேட்கவும் ரசிக்கும்படி உள்ளன .

கலை இயக்குநர் அப்புனி சஜனின் பணி படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகிறது. வீடுகள், தெருக்கள், தொழில்சூழல், வழிபாட்டு தலங்கள் என அனைத்தையும் நேர்த்தியாக அமைத்து .உள்ளார்

கைத்தறி நெசவுத்தொழிலை பின்புலமாக கொண்ட இஸ்லாமிய குடும்பம் ஒன்றின் ,வாழ்வியலில் உலவும் இயல்பான கதாபாத்திரங்களைக் கொண்டும்,அந்த குடும்ப உறவுகளுக்கு இடையே எழும் உணர்ச்சிப் போராட்டங்களையும் தன் எழுத்தின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் வி.எஸ் .முகமது அமீன்

ஒரு குடும்பத்தின் கதையைத் தாண்டி, ஒரு சமூகத்தின் நினைவுகளைப் பதிவு செய்யும் படைப்பாக இந்த படத்தினை இயக்குனர் மீரா கதிரவன் உருவாக்கியுள்ளார் . பிழைப்பிற்காக சொந்த மண்ணை விட்டு பிரியும் மனிதர்களின் வலியும், அதனால் அவர்களின் உறவுகளில் ஏற்படும் ஆழமான தாக்கமும் எப்படிப்பட்டது என்பதை திரை மொழியில் இயக்குனர் உருவாக்கியுள்ளது பாராட்டக்கூடியது .

மொத்தத்தில் இந்த “ஹபீபி” படம் கைத்தறி தொழிலின் வீழ்ச்சியைப் பற்றிய படம் மட்டுமல்ல; பிழைப்பிற்காக தங்கள் கனவுகளையும், காதலையும், குடும்பத்தையும் விட்டுச் செல்லும் ஒரு தலைமுறையின் மௌனக் கண்ணீரைப் பதிவு செய்திருக்கும் படைப்பு.,

Spread the love