யார் இந்த முத்து ?என்று கேள்விக்கணையுடன் துவங்கி, புலன் விசாரணையில் ஏராளமான கிளைக் கதைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக பயணிக்கும் இணையத்தொடர்.
ஒரு அமைதியான, மக்கள் அதிகம் வராத பகுதியில், ஒரு மனிதரின் வெட்டப்பட்ட தலை கிடைக்கிறது. இந்த சம்பவம் அந்த பகுதியின் காவல்நிலையத்தி லிருந்து சம்பவ இடத்துக்கு வரும் போலீசார், தலையை கைப்பற்றி உடலை தேட ஆரம்பிக்கிறார்கள். ஆனால் உடல் எங்கும் கிடைக்கவில்லை.அதே நேரத்தில், அந்த இடத்தில் ஒரு கடிதமும் பணமும் கிடைக்கிறது. அந்த கடிதத்தில், “என் தலையை அடக்கம் செய்து, இந்த பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று எழுதப்பட்டு உள்ளது கொலை செய்யப்பட்டுள்ள நபர் யாராக இருக்கும் ? தலை கிடைத்து விட்டது உடல் எங்கே? அவன் நல்லவனா? கெட்டவனா? கொலைகாரனா ?கொள்ளைக்காரனா? என காவல்துறை விசாரணையை தொடங்கும் போது, அந்த வெட்டப்பட்ட தலைக்கு சொந்தக்காரர் முத்து (விஜய் சேதுபதி) என்பது தெரிய வருகிறது. ஆனால், “இந்த முத்து யார்?” என்ற கேள்விக்கான பதில் எளிதாக கிடைக்கவில்லை.அந்த முத்துவை பற்றி அறிந்துக் கொள்ளும் ஆவலை தூண்டும் வகையில், அடுத்தடுத்த அத்தியாயங்கள் தொடர்ந்து பயணிக்கிறது.பல முகங்கள் கொண்ட அந்த முத்து அவர் பல இடங்களில், பல வேலைகளை செய்பவராக அறியப்படும் அவர் கைக்கடிகாரங்களை சரி செய்பவர் யானையை அடக்கும் பாகன் ,ஆதரவற்றோர் இல்ல மேலாளர்,லாரி ஓட்டுநர் ,பெண்கள் குழுவை பாதுகாக்கும் நபர் என ஒவ்வொரு அத்தியாத்திலும் முத்துவின் ஒவ்வொரு புதிய முகம் வெளிவருகிறது. நடிகர் விஜய் சேதுபதி முத்து என்னும் கதாபாத்திரத்தில், பல பரிமாணிங்களில் தன்னுடைய இயல்பான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் முத்துகுமார், மற்றும் சிங்கம் புலி, வடிவேல் முருகன், பார்வதி, பாலாஜி சக்திவேல், ரிஷா ஜேக்கப், மிலிந்த் சோமன், அபி நக்ஷத்ரா, இர்ஷாத் அலி, சுதேவ் நாயர், அரிஸ்டோ சுரேஷ், சுனிதா சந்திரன், ஆர்.அமரேந்திரன், சாதனா என தொடரின் ஏனைய கதாபாத்திரங்களில் நடித்திருப் பவர்களும் தாங்கள் ஏற்றுள்ள கதாபாத்திரங்களின் தன்மைக்கு உரிய வகையில் நன்கு நடித்துள்ளார்கள் .
ராஜேஷ் முருகேசன் பின்னணி இசை இந்த தொடருக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது .ஒளிப்பதிவாளர்கள் மது.என் மற்றும் என்.சண்முகசுந்தரத்தின் ஒளிப்பதிவு ,கதை பல இடங்கள், பல காலகட்டங்களில் நகரும்படி அமைக்கப்பட்டு இருந்தாலும், நேர்த்தியான பின்புலத்தினை காட்சி வடிவில் நன்கு கொடுத்துள்ளது .இயக்கத்தோடு படதொகுப்பாளராகவும் பணி செய்துள்ள பி.அஜித் குமார் ,ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் ஒரு எதிர்பார்ப்பை வைத்து, அடுத்து வரும் அத்தியாயங்களில் என்ன நடக்கும் என்று தொடர்ந்து காண வேண்டிய ஆவலை ஏற்படுத்தும் வண்ணம் சிறப்பான பணியினை செய்துள்ளார்
ஒரு புதிர் போல அமைக்கப்பட்டுள்ள முத்துவின் வாழ்க்கையில் மர்மமும் மனிதமும் கலந்த ஒரு வித்தியாசமான திரை அனுபவத்தை தமிழ் வெப்சீரிஸ் ரசிகர்களுக்கு தரும் வகையில் இயக்குனர் மணிகண்டன் இந்த படைப்பினை உருவாக்கியுள்ளார்.
மொத்தத்தில், இந்த ‘காட்டான்’ வேகமும் எதிர்பார்ப்பும் நிறைந்த விறுவிறுப்பான தொடர்.
