**மூன்று தலைமுறை… ஒரே கனவு… கானாவுக்கான புதிய பயணம்!**
கானா இசையை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற மூன்று தலைமுறையின் கனவுப் பயணத்தை காதல், நகைச்சுவை, இசை என கலகலப்பான பொழுதுபோக்கு பாணியில் சொல்லும் படம்தான் ‘மீசையை முறுக்கு 2’.
கானா பாடல்களுக்கு உலகளவில் ஒரு தனி இடத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார் கதையின் நாயகன். ஆனால் அவரது முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அவர் கண்ட கனவை அவரது மகனும் தொடர்கிறார்; அவராலும் அதை நிறைவேற்ற முடியவில்லை.அதன்பின் மூன்றாவது தலைமுறையாக வரும் பேரன், தனது தாத்தா மற்றும் தந்தையின் கனவை கையில் எடுத்துக்கொள்கிறார். இந்த முறை அந்த கனவு வெற்றியாக மாறுகிறதா? கானா இசை, உலகம் முழுவதும் சென்றடைகிறதா? என்பதுதான் படத்தின் மையக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் ஹிப் ஹாப் ஆதி, தனக்கே உரித்தான இயல்பான பாணியில் கதாபாத்திரத்தை கையாண்டிருக்கிறார். நகைச்சுவை, காதல், இசை என கதாபாத்திரத்தின் அனைத்து பரிமாணங்களையும் தனது வழக்கமான ஸ்டைலில் வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது ரசிகர்களை மட்டுமின்றி, கமர்ஷியல் படங்களை ரசிக்கும் ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் அவரது நடிப்பு அமைந்துள்ளது.
சைத்ரா ஆர்ச்சார், கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் என மூன்று நாயகிகள் படத்தில் வலம் வருகிறார்கள். மூவருக்கும் தனித்தனி கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டிருப்பதுடன், அவரவர் பங்கிற்கு அழகாகவும் இயல்பாகவும் நடித்திருக்கிறார்கள்.
கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், யோகி பாபு, விஜய் வரதராஜ் உள்ளிட்டோர் பல்வேறு கதாபாத்திரங்களில் பயணித்து படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறார்கள். குறிப்பாக நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகள் கலந்த காட்சிகளில் இவர்களது பங்களிப்பு தனி கவனம் பெறுகிறது.
சிறப்பான கேமரா கோணங்கள், வண்ணமயமான ஒளியமைப்பு மூலம் காட்சிகளை ரசிக்கும்படி பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்பிரமணியம். படத்திற்கு இசையமைத்ததோடு இயக்குநர் பொறுப்பையும் ஏற்றிருக்கும் ஹிப் ஹாப் ஆதி, இளம் ரசிகர்களை கவரும் வகையில் பாடல்களை உருவாக்கியிருப்பதுடன், கதையின் சூழலுக்கு ஏற்ற பின்னணி இசையையும் வழங்கியிருக்கிறார்.கானா இசையை மையமாக வைத்திருப்பதால் பாடல்கள் படத்தின் கதையோட்டத்துடன் பயணிப்பது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. இசை சார்ந்த காட்சிகளும், மேடை நிகழ்ச்சிகளும் படத்திற்கு உற்சாகத்தை கூட்டுகின்றன.இயக்குநராக ஹிப் ஹாப் ஆதி, கனவு – காதல் – இசை – நகைச்சுவை என இளைஞர்களுக்குப் பிடித்த அம்சங்களை ஒன்றாக கலந்து ஒரு முழுமையான பொழுதுபோக்கு படத்தை உருவாக்கியிருக்கிறார்.
மொத்தத்தில் ‘மீசையை முறுக்கு 2’ – தலைமுறைகளை தாண்டியும் ஒரு கனவு எப்படி உயிருடன் இருக்கிறது என்பதை சொல்லும் இளமைத் துள்ளல் நிறைந்த பொழுதுபோக்கு படம். கானா இசை, காதல், நகைச்சுவை மற்றும் ஹிப் ஹாப் ஆதியின் இசை என கமர்ஷியல் ரசிகர்களுக்கு தேவையான அம்சங்களை கலந்து கொடுத்திருக்கிறது.
