Friday, July 10

‘லக்‌ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’-திரைப்பட விமர்சனம்

“ஒரு கொலை… ஒரு தீர்ப்பு… ஒரு தூக்குத் தண்டனை… ஆனால், சட்டத்தின் இறுதி தீர்ப்பு உண்மையில் நீதியை நிலைநாட்டுகிறதா? இல்லை, இன்னொரு உயிரைப் பறிக்கும் வன்முறையா? இந்தக் கேள்விக்கான பதிலை திரை மொழியில் சொல்லுகிறது ‘லக்‌ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’.”

படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் வாழ்க்கையில் விரக்தியுடன் சுற்றித் திரியும் இளைஞன் வெற்றி. தனது நண்பன் மாறனுடன் சேர்ந்து சிறுசிறு திருட்டுகளை செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். ஆனால், எதிர்பாராத ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறது. அந்தச் சம்பவம் அவரை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி, இறுதியில் மரண தண்டனை கைதியாக மாற்றுகிறது.
வெற்றி உண்மையில் செய்த குற்றம் என்ன? அவர் உண்மையிலேயே குற்றவாளியா? அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதா? என்ற கேள்விகளுக்கான பதில்களை திரைக்கதையில் மீதி கதை யாக சொல்கிறது ‘லக்‌ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’.

கதையில் அறிவுமதி என்னும் மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெற்றி, சாதாரண இளைஞனின் இயல்பான உடல்மொழி, உணர்வுப்பூர்வமான நடிப்பு என தனது கதாபாத்திரத்தை மிகவும் நம்பகத்தன்மையுடன் சுமந்திருக்கிறார். கதையின் நாயகியாக பிரிகிடா சாகா நடித்துள்ளார் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் குறைவில்லாத நடிப்பை அவர் வெளிப்படுத்தி உள்ளார் ,மேலும் வெற்றியின் நண்பராக மாறனும் வெற்றியின் அம்மா கதாபாத்திரத்தில் லிசிஆண்டனி மற்றும் கவிதா பாரதி, சுப்பிரமணிய சிவா, அருவி மதன் ரங்கராஜ் பாண்டே போன்ற ஏனைய கதாபாத்திரங்களில் நடித்திருந்தவர்களும் தங்களுடைய பங்கிற்கு கதாபாத்திரங்களுக்கு தகுந்தபடியான நடிப்பினை நன்கு வழங்கி இருக்கிறார்கள்.

இயக்குனரின் எண்ண ஓட்டத்திற்கு இணக்கமான காட்சிகளை ஒளிப்பதிவாளர் எம் .வி பன்னீர்செல்வம் படம் முழுவதும் தன்னுடைய நேர்த்தியான கோணங்கள் மூலம் பதிவாக்கியுள்ளார்.கதை நிகழ் காலகட்டத்தை நம்பகத்தன்மையுடன் திரையில் கொண்டு வந்திருக்கிறார். சிறைச்சாலையின் இருள், நீதிமன்றத்தின் அழுத்தம், கிராமப்புற வாழ்க்கையின் எளிமை என ஒவ்வொரு காட்சியிலும் யதார்த்தம் தெரிகிறது.மேலும் குறிப்பிட்டுச் செல்லக் கூடியது தர்புகா சிவாவின் இசை.இவரது இசையில் படத்தில் பாடல்களும், பின்னணி இசையும் நன்கு அமைந்துள்ளன.


இயக்குநர் தயாள் பத்மநாபன், ஒரு கொலை வழக்கை மட்டும் சொல்லாமல், “குற்றவாளிகளை உருவாக்குவது யார்? வறுமையா? சமுதாயமா? , “மரண தண்டனை உண்மையில் நீதியா?”, “தண்டனை வழங்குபவர்களும் மனவேதனையை அனுபவிக்கிறார்களா?” போன்ற பல முக்கியமான கேள்விகளை படத்தின் மூலம் பார்வையாளர்களிடம் முன்வைக்கிறார்.கதைகேற்ற திரைக்கதை, அழுத்தமான வசனங்கள் மற்றும் சரியான நடிகர் தேர்வு மூலம் தனது கருத்தை நன்கு பதிவு செய்துள்ளார் .

ஒரு கொலை வழக்கின் மர்மத்தை விட, மரண தண்டனை குறித்த பெரிய கேள்வியை மனதில் விதைக்கும் படமாக ‘லக்‌ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ தனித்து நிற்கிறது. மொத்தத்தில் அனைத்து திரை ரசிகர்களுக்கும் பார்க்க தகுந்த படம்.

Spread the love