Wednesday, July 8

“கல்விக்காக மலைகளை கடந்த ‘அருள்வான்’ படக்குழு… நெகிழ்ச்சியில் அருள்நிதி!”

“கமர்ஷியல் திரைக்குள் சமூகப் பொறுப்பு… ஜூலை 17-ல் வருகிறது ‘அருள்வான்’!”

90 Pictures Productions Private Limited சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள ‘அருள்வான்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை நகரில் உற்சாகமாக நடைபெற்றது.

அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், பேபி கிருத்திகா, காளி வெங்கட், ஜான் விஜய், வி.டி.வி. கணேஷ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை எம். சுகுமார் கவனித்துள்ள நிலையில், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

கல்வியின் அடிப்படை உரிமையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அருள்வான்’, வரும் ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் காளி வெங்கட், “இந்தப் படத்தின் படப்பிடிப்பு எங்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். மலைகள், பள்ளத்தாக்குகள், சாலை வசதி இல்லாத பகுதிகளில் படமாக்கப்பட்டது. ஆனால் இப்படம் பேசும் கல்வி குறித்த கருத்துதான் அனைவரையும் நிச்சயம் சிந்திக்க வைக்கும்” என்றார்.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலன் பேசுகையில், “வர்த்தக ரீதியில் மட்டுமல்லாமல், மனதைத் தொடும் திரைப்படங்களையும் வெளியிடுவது எங்களுக்கு பெருமை. ‘அருள்வான்’ அப்படிப்பட்ட ஒரு படம். கல்வி மறுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை வலிமையாக பதிவு செய்திருக்கிறது. இயக்குநர் கணேஷ் விநாயகனும், ஒளிப்பதிவாளர் சுகுமாரும் மீண்டும் இணைந்து அற்புதமான படைப்பை கொடுத்துள்ளனர். அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட அனைவரின் நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது. சமூகத்திற்கு தேவையான கருத்தை பேசும் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்,” என்றார்.

நடிகை பேபி கிருத்திகா பேசுகையில், “‘அருள்வான்’ மூலம் பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளியான ‘அல்லிப்பூவே’ பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. கடினமான சூழலில் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் உழைத்து உருவாக்கிய இந்தப் படத்திற்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு அளிக்க வேண்டும்,” என்றார்.

நடிகை ரம்யா பாண்டியன், “இந்தக் கதையை கேட்டவுடன் இதில் நான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். நம் நாட்டிலேயே கல்வி வசதிகள் இல்லாமல் வாழும் மக்களின் வாழ்க்கையை இப்படம் உண்மையாக பதிவு செய்கிறது” என்று கூறினார்.

இயக்குநர் கணேஷ் விநாயகன், “‘அருள்வான்’ சாதாரண படம் அல்ல; வலி, போராட்டம், நம்பிக்கை ஆகியவற்றை பேசும் திரைப்படம். இந்தக் கதையை நம்பி மிகப்பெரிய அளவில் தயாரித்த தயாரிப்பாளருக்கு நன்றி” என்றார்.

நடிகர் அருள்நிதி, “குழந்தைகளின் கல்வி உரிமையை வலியுறுத்தும் இந்தக் கதையில் முத்துவேல் என்ற மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படம் அனைவரையும் சென்றடையும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என தெரிவித்தார்.

ஆரவ், “இதுபோன்ற கதாபாத்திரம் மீண்டும் கிடைக்குமா என்ற சந்தேகத்திலேயே இந்தப் படத்தை ஒப்புக்கொண்டேன். சமூகத்திற்கு தேவையான கருத்தை சொல்லும் திரைப்படத்தில் நடித்ததில் பெருமை” என்று பகிர்ந்துகொண்டார்.

சமூகப் பொறுப்பும், உணர்வுப்பூர்வமான கதையும், பிரம்மாண்டமான காட்சியமைப்பும் இணைந்துள்ள ‘அருள்வான்’ திரைப்படம், ஜூலை 17 முதல் ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளது.

Spread the love