Saturday, December 6

கும்கி 2- திரைவிமர்சனம்

பிரபு சாலமன் இயக்கத்தில் மதி , அர்ஜூன் தாஸ் ,ஷ்ரிதா ராவ், ஆண்ட்ரூஸ், ஹரிஷ் பெராடி மற்றும் பலர் நடித்துள்ள படம் கும்கி 2.

மதி என்னும் சிறுவன் மலைப்பாங்கான கிராமத்தில் வாழ்ந்து வருகின்றான் ஒரு சமயம் பள்ளத்தில் மாட்டிக் கொண்ட குட்டி யானை ஒன்றைக் காப்பாற்றும் மதி அதன் மீது மிகவும் பாசம் கொண்டவனாக உள்ளான் யானையும் மதியும் ஒருவர் மீது ஒருவர் பாசமும் நேசமும் கொண்டு வளர்ந்து வருகிறார்கள், இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு சமயம் அந்த யானை காணாமல் போய்விடுகிறது, காணாமல் போன பாசத்திற்குரிய தன் யானையை தேடி மதி அலைகிறான் .அதன் பின் தன்னுடைய ஆசிரியரின் அறிவுரைப்படி கல்லூரியில் படிக்க வேறு ஊருக்கு செல்கின்றான், சில வருடங்களுக்கு பிறகு தன்னுடைய ஊருக்கு வரும் மதிக்கு தன்னுடைய யானையைப் பற்றிய ஒரு தகவல் தெரிய வருகிறது ,அதன்படி மீண்டும் தனது யானையை தேடி செல்கிறான்.மதிக்கு அவனது பிரியமான யானை மீண்டும் கிடைத்ததா? இடைப்பட்ட காலத்தில் அந்த யானைக்கு என்ன நடந்தது ?அது காணாமல் போனதற்கான காரணம் என்ன ?இவைகளை பற்றி சொல்வதுதான் கும்கி 2 படத்தின் மீதி கதை .

இந்த படத்தில் கதையின் நாயகனாக பூமி என்னும் கதாபாத்திரத்தில் நடிகர் மதி புதுமுகமாக அறிமுகமாகி இருக்கிறார். தான் வளர்க்கும் யானை மீது பாசமும். நேசமும் கொண்ட கதாபாத்திரத்தில் ,அது பிரிந்து பிறகு தவிக்கும் காட்சிகளிலும் ,அதனை காப்பாற்ற துடிக்கும் காட்சிகளிலும் மதி நன்கு நடித்து அறிமுகப்படம் என்று தெரியாத வகையில் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார் .மற்றும் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் வனத்துறை அதிகாரியாக நடித்துள்ள அர்ஜுன் தாஸ் மேலும் ஷ்ரிதா ராவ், ஆண்ட்ரூஸ், ஆகாஷ், ஹரிஷ் பெராடி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் கிடைத்த கதாபாத்திரங்களில் குறைவின்றி நிறைவாக நடித்துள்ளார்கள்

இயற்கையோடு இயைந்த மலைப்பாங்கான பகுதிகளை கண்களுக்கு இனிமையான வகையில் சிறப்புற காட்சிப்படுத்தி உள்ளார் ஒளிப்பதிவாளர் சுகுமார். நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்கள் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் ரசிக்கும்படி உள்ளன .அவரது பின்னணி இசை கதையுடனும், காட்சிகளுடன் இணக்கமாக பயணித்து உள்ளது.

யானைக்கும் ,கதையின் நாயகனுக்கும் உள்ள பாசப்பிணைப்பினை யதார்த்தமான காட்சி அமைப்புகளுடன் அழகிய இயற்கை சூழல் அமைவிடத்தில் சிறப்பாக படமாக்கி உள்ளார் இயக்குனர் பிரபு சாலமன். குழந்தைகளுடன் பெரியவர்களும் சேர்ந்து பார்த்து ரசிக்கக்கூடிய படமாக கொடுத்திருப்பதற்கு இயக்குனரை பாராட்டலாம்.

Spread the love