Saturday, April 25

கண்ணப்பா- திரை விமர்சனம்


தற்போதைய காளகஸ்தியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக இருந்த காட்டுப் பகுதியில் ,அதன் தலைவராக(சரத்குமார் ) இருப்பவரின் மகன் திண்ணன் ( விஷ்ணு மஞ்சு) ,இளம் வயதில் தனது நண்பன் நரபலி கொடுக்கப்பட்டதை நேரில் பார்த்ததிலிருந்து திண்ணன் கடவுள் மீது நம்பிக்கையே இல்லாமல் இருக்கிறார், இந்த சூழ்நிலையில் திண்ணன் வசிக்கும் பகுதியில் இருக்கும் வாயு லிங்கத்தை கைப்பற்ற அர் பித் ரங்கா திட்டமிட, அந்த முயற்சியினை முறியடிக்க ஊர் மக்கள் ஒன்றாக இணைந்து முயல்கிறார்கள். இந்த சமயத்தில் ஒரு பிரச்சினையினால் தன் மகனை ஊரிலிருந்து விலக்கி வைக்கிறார் சரத்குமார். வாயு லிங்கத்தை கைப்பற்ற நடக்கும் போரில் சரத்குமார் கொல்லப்பட, தந்தையின் மரணத்திற்கு பழிவாங்க திண்ணன் களத்தில் குதிக்கிறான் ,அதற்குப் பிறகு அந்தப் போரில் திண்ணன் வெற்றி பெற்றாரா ? இறை நம்பிக்கையே இல்லாமல் இருந்த திண்ணன் எப்படி சிவ பக்தனாக மாறினான்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதையின் மையக் கதாபாத்திரமான திண்ணனாக விஷ்ணுமஞ்சு நடித்துள்ளார் ,அவரது தோற்றமும், உடல் மொழியும் திண்ணன் கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருந்தி போகிறது ,மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான கதாபாத்திரத்தில் நிறைய மெனக்கடல்களுடன் தன்னுடைய சிறந்த நடிப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார். நெமிலி கதாபாத்திரத்தில், ப்ரீத்தி முகுந்தனின் அழகும் ,நடிப்பும் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது . ருத்ராவாக தோன்றி உள்ள பிரபாஸின் திரை நேரம் சிறிய அளவு என்றாலும் கொடுக்கப்பட்ட நேரத்தில் நிறைவாக அவர் நடித்துள்ளார்.

சிவனை வழிபட்டு வரும் மகாதேவ சாஸ்திரியாக மோகன் பாபுவும் , இறைவன் சிவனாக அக்ஷய குமாரும், பார்வதி தேவியாக காஜலும், கௌரவ வேடத்தில் மோகன்லாலும் ,அவரவர் கதாபாத்திரங்களில் தனிப்பட்ட தங்களுடைய அனுபவ நடிப்பு வெளிப்படும் வகையில் நன்கு நடித்துள்ளார்கள். மேலும் குறிப்பாக நடன நாதராக சரத்குமாரும், மற்றும் மதுபாலா,தேவராஜ், ஐஸ்வர்யா என பல நட்சத்திரங்கள் படம் முழுவதும் குறைவில்லாத நடிப்பை நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.

நேர்த்தியான திரைக்கதைக்கு, இணக்கமான அளவிற்கு தொழில்நுட்ப ரீதியாக படம் சிறப்பாக அமைந்துள்ளது .ஷெல்டன் சாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இசையமைப்பாளர் ஸ்டீபன் தேவாசியின் பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கு ஏற்றதொரு பின்புலத்தை பொருத்தமான முறையில் வழங்கி இருக்கிறது.

புராண கதையை எடுத்துக்கொண்டு ,அதில் திரைப்படத்திற்கு ஏற்ற வகையில் வர்த்தக ரீதியான விஷயங்களையும் கலந்து ,நேர்த்தியான திரைக்கதை காட்சிகளுடன் படமாக்கி உள்ளார் இயக்குனர் முகேஷ் குமார் சிங்.

பொதுவாக புராண ,வரலாற்று படங்களில் நீளம் சற்று அதிகமாக இருப்பது தவிர்க்க முடியாதது தான் இருப்பினும், ,தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றபடி படத்தின் நீளத்தை குறைத்து இருந்தால் ,அது இன்னமும் படத்தின் வேகத்திற்கு விறுவிறுப்பை கொடுத்திருக்கும்.

மொத்தத்தில் கண்ணப்பாவை ,ஆன்மீகத்தில் பற்று கொண்டவர்கள் மட்டுமின்றி அனைவரும் பார்த்து ரசிக்கலாம்.

Spread the love