Wednesday, January 15

கலகத் தலைவன்- விமர்சனம்

கார்ப்ரேட் நிறுவனம்  ஒன்று அதிகமான  மைலேஜ் தரக்கூடிய டிரக்கை தயாரிக்கிறது.ஆனால் அது  மாசு கட்டுப்பாடு குறியீட்டை  அளவுகளை தாண்டி புகை வெளிவிடும்  என்று தெரிய வருவதால் அதற்கு அனுமதி கிடைக்காது  என்ற நிலை ஏற்படுகிறது இந்த ரகசியம் வெளியில் கசிந்து விட பங்குச்சந்தையில் இந்தக் கம்பெனியின் பங்குகள் மிகப்பெரிய சரிவைச் சந்திக்கின்றன. கம்பெனி தகவல் தரவுகள் வெளியானது எப்படி?  என்பதை கண்டுபிடிக்க ஒருவரை(ஆரவ்) நிறுவன அதிபர் நியமிக்கிறார்.கார்ப்ரேட் நிறுவனங்களின்  இந்த மோசடிகளை அம்பலப்படுத்த திரு (உதயநிதி) திட்டமிட்டு  ரகசியங்களை கைப்பற்றும் விவரம் அறிந்து அவரை  நெருங்குகிறார் .அதன் பின் என்ன நடந்தது ? திருமாறன் எதற்காக  வஜ்ராவை அழிக்க  போராடுகிறார்  என்ற பல கேள்விகளுக்கு விடை தருகிறது  படத்தின் மீதிக்கதை.

திருமாறன் என்னும்  பாத்திரத்தில் கதை நாயகனாய் நடித்துள்ள உதயநிதிக்கு, இந்தப் படத்தில் பல உணர்வுகளையும் வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது ,அவரும் அதை  சிறப்பாக பயன்படுத்தியுள்ளார்

கதாநாயகியாக நிதி அகர்வால் அழகு  பதுமையாய்  வந்து இளம் ரசிகர்களை கவர்கிறார் ,படத்தில் நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் பெரிதும் அசத்தியிருப்பது அர்ஜுனாக வரும் ஆரவ் தான்.தன்னுடைய மிரட்டாலான நடிப்பை  கம்பீரமாக வெளிப்படுத்தியுள்ளார், தொடர்ந்து பல படங்களில் இவரை  வில்லன்   கதாபாத்திரங்களில்  எதிர்பார்க்கலாம் .மற்றும் இந்த படத்தில் கலையரசனும் அழுத்தம் தரக்கூடிய கதாபாத்திரத்தில் தோன்றி நிறைவாக நடித்துள்ளார்.

படத்தின்  இயக்குனர் மகிழ் திருமேனி, அரசு நிறுவனங்கள் தனியார்மயமாவதால் ஏற்படக்கூடிய  ஆபத்துகள் பற்றியும் அதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றியும் ஆர்வம்  தரக்கூடிய  திருப்பங்களுடன் பயணிக்கும் திரைக்கதையுடன் படத்தை இயக்கியுள்ளார்.

தில்ராஜின்  ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்தின்   படத்தொகுப்பும், ஸ்ரீகாந்த் தேவா,அரோல் ரோலியின் பாடல் இசையும் ரீ ரிக்கார்டிங்கும் படத்தின் கதையோட்டத்துக்கு பெரிதும் உதவியுள்ளது.

இளம் ரசிகர்களை இந்த  கலகத் தலைவன் நிச்சயம்  கவர்வான் .

Spread the love