Friday, April 24

காயல் -திரை விமர்சனம்

ஜெ ஸ்டுடியோ தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் ,லிங்கேஷ்,அனுமோல், காயத்ரி, ரமேஷ் திலக்,ஸ்வாகதா, ஐசக் மற்றும் பலர் நடிப்பில் தமயந்தி எழுதி இயக்கி உள்ள படம் காயல்.இந்த படத்துக்கு இசை ஜஸ்டின் கெனன்யா- ஒளிப்பதிவு கார்த்திக் சுப்ரமணியம் -படத்தொகுப்பு பிரவீன் பாஸ்கர்.

ஐசக் அனு மோல் தம்பதியரின் ஒரே மகள் காயத்ரி சங்கர், படத்தின் துவக்க காட்சியிலேயே , காயத்ரி சங்கர் தற்கொலை செய்து கொண்டு விட்டதாக கிடைக்கும் செய்தி அறிந்து விரைந்து செல்லும் ஐசக்கும் அனுமோலும் தங்களது செல்ல மகளின் உடலைப் பார்த்து அதிர்ச்சியும் ,துக்கமும் அடைகிறார்கள் .இதற்கு பின்பாக கதை கடந்த காலத்தை நோக்கி பின்னோக்கி செல்கிறது .அதில் தனது பெற்றோரின் மீது அன்பும் பாசமும் கொண்ட மகளாக காயத்ரி சங்கர் இருக்கிறார், அவரும் லிங்கேஷு,,ம் மனதார ஒருவரை ஒருவர் நேசிக்கின்றனர் மகளின் காதலை அறிந்த தந்தை ஐசக் அதற்கு எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவர்களது காதலை ஏற்றுக் கொள்கிறார். ஆனால் அதற்கு மாறாக தாய் அனுமோல் மகளைக் காதலிக்கும் லிங்கேஷின் சாதியை காரணமாக சொல்லி மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதோடு நிற்காமல் தன் மகளுக்கு தன்னுடைய சகோதரன் மகனை திருமணமும் செய்து வைத்து விடுகிறார் அனுமோல். இப்படிப்பட்ட சூழ்நிலையில் காயத்ரியின் மரணம் நிகழ்கிறது, இதற்கு பின் என்ன நடந்தது ?இறந்து போன காயத்ரியின் மரணமானது கொலையா ?அல்லது தற்கொலையா ? அதற்குப்பின் ஐசக், அனுமோல் என்னவானார்கள்? போன்றவற்றை எடுத்து சொல்லும் வகையில் பயணிக்கிறது படத்தின் மீதி கதை.

செல்ல மகள் மீது பாசமும் நேசமும் கொண்ட தந்தை கதாபாத்திரத்தில் ஐசக் நிறைவான நடிப்பை வழங்கி, அவர் ஏற்றிருந்த கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளார் .அதே போல மகள் மீது பாசம் இருந்தாலும் மாற்று சாதியில் இருந்து தனக்கு மருமகன் வந்து விடக்கூடாது என்பதை குறிக்கோளாக கொண்டு வாழும் தாயாக அனுமோல் சிறப்பாக நடித்துள்ளார். கதையின் மைய நாயகியாக வரும் காயத்ரி சங்கர் தன்னுடைய கதாபாத்திரத்துக்கு பொருத்தமான வகையில் ,அளவான  நடிப்பை வெளிப்படுத்தி,பாசமும் காதலும் கொண்ட பெண்ணாக நன்கு நடித்துள்ளார். அதேபோல நாயகனாக தன் இயல்பான நடிப்பை கொடுத்துள்ள லிங்கேஷ், மேலும் ரமேஷ் திலக், ஸ்வாகதா கிருஷ்ணா போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் குறைவில்லாத நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள்.

உணர்வுகளை பேசும் காட்சிகளில் அதற்கு இணக்கமான பின்னணிஇசையினை நன்கு வழங்கி உள்ளார் இசையமைப்பாளர் ஜஸ்டின் கனன்யா அதேபோல பாடல்களும் ரசிக்கும்படி உள்ளன .ஒளிப்பதிவாளர் கார்த்திக் சுப்பிரமணியத்தின் கைவண்ணத்தில் வெளிப்புற காட்சிகள் நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளன. காட்சிகளின் தொடர்புகளை இணக்கமாக தொகுத்து , இயல்பான கதை நகர்வுக்கு வழிவகுத்துள்ளார் பட தொகுப்பாளர் பிரவீன் பாஸ்கர்.

தமிழ் சினிமாவின் சாதிய பாகுபாடுகள் குறித்து நிறைய படங்கள், நிறைய காலகட்டங்களில் வந்திருந்தாலும் அவைகளில் இருந்து மாறுபட்ட வகையில் கதாபாத்திரங்களை உருவாக்கி ,அவர்களது பார்வையில் பயணிக்கும் திரைக்கதையுடன் வித்தியாசமான படைப்பாக இயக்குனர் தமயந்தி படத்தை உருவாக்கி இருக்கிறார். அக்காலம் தொட்டு, இன்றைய நவீன நாகரிக வாழ்வியல் சூழலிலும் ,சாதி வன்முறை மற்றும் பிரிவினைவாத எண்ணங்கள் சமூகத்தில் ஆழமாக வேரூன்றிதான் உள்ளன, ஆனால் அவைகளுக்கு முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே காரணம் என்று சித்தரிக்கும் வகையில் முந்தைய படங்கள் வந்துள்ளன, ஆனால் அதற்கு மாறாக பெண்களிடமும் அத்தகைய பிரிவினைவாத எண்ணங்கள் ஏராளமாகவே உள்ளன ,அந்த சாதிய உணர்வுகளை அவர்கள் தங்களுக்கு பிந்தைய தலைமுறைக்கும் கொண்டு செல்வதில் முக்கிய பங்கினை வகிக்கின்றார்கள் என்ற கருத்தினை பதிவு செய்யும் வகையில் இயக்குனர் இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

Spread the love