ஆன்மீகம்… குடும்ப பாசம்… மர்மங்கள்… இவற்றை ஒரே கதைக்குள் இணைத்து, ஒரு தந்தையின் உணர்வுப்பூர்வமான பயணமாக சொல்ல முயற்சிக்கிறது ‘இருமுடி கட்டு’.

வருடம் முழுவதும் முரட்டுத்தனமாகவும் குடிப்பழக்கத்துடனும் வாழும் ஒரு மனிதர்… ஆனால், ஐயப்பனை தரிசிக்க விரதம் தொடங்கியதும் முற்றிலும் வேறொரு மனிதராக மாறுகிறார். பக்தி, குடும்பம், மகள் மீதான பாசம் என அவரது வாழ்க்கை ஒரு பக்கம் நகர, மறுபக்கம் அவரைச் சுற்றி நடக்கும் மர்ம மரணங்கள் கதைக்கு திரில்லர் சாயலைக் கொடுக்கின்றன. இந்த இரு உலகங்களையும் இணைத்து உருவாகியிருக்கும் படம்தான் ‘இருமுடி கட்டு’.
திரிநாத் என்ற கதாபாத்திரத்தில் ரவி தேஜா, மனைவி காவிரி மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். குடிப்பழக்கம் கொண்ட முரட்டுத்தனமான மனிதராக இருந்தாலும், வருடந்தோறும் ஐயப்பனுக்காக விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.விரத காலங்களில் குடிப்பழக்கத்தை முற்றிலும் கைவிட்டு, ஆன்மீகத்தில் முழு கவனம் செலுத்தும் திருநாத், குடும்பத்தின் மீது குறிப்பாக தனது மகள் மீது அளவற்ற பாசம் கொண்டவராகவும் இருக்கிறார்.இந்நிலையில், ஒருவருடன் ஏற்படும் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட நபர் மரணமடைய, அந்த மரணத்துடன் திரிநாத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.இதற்கிடையில் அப்பகுதியில் பள்ளி மாணவிகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இந்த தொடர் மரணங்களுக்குப் பின்னால் இருப்பது யார்? அதன் பின் என்ன நடந்தது ? என்பதற்கான பதில்களை நோக்கி கதை நகர்கிறது.

திரிநாத் என்னும் கதாபாத்திரத்தில் ரவி தேஜா வழக்கமான தனது ஆக்ஷன் பாணியிலிருந்து விலகி, மாறுபட்ட பாணியில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.முரட்டுத்தனமான நபர் , பாசமான தந்தை, தீவிரமான ஆன்மீகவாதி என ஒரே கதாபாத்திரத்திற்குள் இருக்கும் பல்வேறு உணர்வுகளை தனது நடிப்பின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக மகளுடன் இடம்பெறும் காட்சிகளில் அவரது நடிப்பு ,கதைக்கு உணர்வுப்பூர்வமான வலிமையை சேர்க்கிறது.
மகளாக நடித்திருக்கும் பேபி நக்ஷத்திராவும் இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் கவனம் ஈர்க்கிறார். தந்தை–மகள் பாசக்காட்சிகளில் அவரது நடிப்பு கதையின் சென்டிமெண்ட் பகுதிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.காவிரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், கதைக்கு தேவையான பக்குவமான நடிப்பை வழங்கியிருக்கிறார். மேலும் ரமேஷ் இந்திரா, அஜய் கோஷ், சாய் குமார் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
‘மஜிலி’, ‘டக் ஜெகதீஷ்’, ‘குஷி’ போன்ற படங்களின் மூலம் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கியிருக்கும் இயக்குநர் சிவா நிர்வாணா, இந்த முறை ரவி தேஜாவுடன் இணைந்து, ஆன்மீகப் பின்னணியில் ஒரு குடும்பக் கதையை உருவாக்கியிருக்கிறார்,.ஐயப்ப பக்தி, குடும்ப உறவுகள், தந்தை–மகள் பாசம், மர்ம மரணங்கள் என வெவ்வேறு அம்சங்களை ஒரே கதைக்குள் இணைக்க முயற்சித்திருப்பது படத்தின் முக்கிய பலம்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் கேட்பதற்கும், காட்சிகளுடன் ரசிப்பதற்கும் இனிமையாக அமைந்துள்ளன. அதேபோல் பின்னணி இசை, கதையின் உணர்வுகளுக்கும் ஏற்ற வகையில் பயணித்து, பல இடங்களில் கதை நகர்வுக்கு துணை நிற்கிறது.
விஷ்ணு சர்மாவின் ஒளிப்பதிவு ஆன்மீக காட்சிகளுக்கும் குடும்ப உணர்வுகளுக்கும் தேவையான அழகிய காட்சியமைப்பை வழங்குகிறது. பிரவீன் பிடியின் படத்தொகுப்பு கதையின் ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.
மொத்தத்தில் ,ஆன்மீகத்தையும்… குடும்ப பாசத்தையும்… மர்மத்தையும் ஒரே திரை பயணத்தில் ரசிக்க விரும்புபவர்களுக்கு இந்த ‘இருமுடி கட்டு’ ஒரு சரியான தேர்வு!
