Friday, August 21

மொத ராத்திரி – திரைப்பட விமர்சனம் 

ஒரு திருமணம்… ஒரு எதிர்பாராத உண்மை… அந்த உண்மையை ஏற்றுக்கொள்ளும் ஒரு மனிதன்… அதன் பிறகு நடக்கும் உணர்வுப் போராட்டம் – இதுதான் ‘மொத ராத்திரி’ படத்தின் மையக்கதை.

ஐந்து வருடங்களுக்குப் பிறகு துபாயில் இருந்து சொந்த ஊர் திரும்புகிறார் ரிஷிகாந்த். அவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்கிறார்கள். திருமணத்தில் ஆர்வம் இல்லாத அவர், குடும்பத்தினரின் வற்புறுத்தலால் சம்மதிக்கிறார். இதையடுத்து அனிஷ்மா அனில்குமாருடன் அவரது திருமணமும் நடைபெறுகிறது.ஆனால், திருமணம் முடிந்து முதலிரவு அறைக்குள் செல்லும் நேரத்தில்தான் ரிஷிகாந்தின் வாழ்க்கையை மட்டுமல்ல, அந்த இரவின் அர்த்தத்தையே மாற்றும் ஒரு உண்மை தெரிய வருகிறது.தன்னை திருமணம் செய்திருக்கும் அனிஷ்மா ஏற்கனவே வேறொருவரை காதலித்து வருகிறார். குடும்பத்தினரின் கட்டாயத்தால் இந்தத் திருமணத்திற்கு அவர் சம்மதித்திருக்கிறார் என்பதை அறியும் ரிஷிகாந்த், எதிர்பாராத விதமாக ஒரு முடிவெடுக்கிறார்.தன்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்று நினைக்கும் அவர், அனிஷ்மாவை அவரது காதலருடன் சேர்த்து வைக்க முடிவு செய்கிறார்.ஆனால், நல்ல எண்ணத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு அத்தனை எளிதாக நிறைவேறுகிறதா? அதனால் திருமண வீட்டில் உருவாகும் பிரச்சனைகள் என்ன? என்பதுதான் ‘மொத ராத்திரி’ படத்தின் மீதிக்கதை.

ஒரு திருமண வீட்டை கதைக்களமாக்கி உள்ள இயக்குநர் ராஜா கருப்புசாமி, அந்த திருமண வீட்டின் சந்தோஷம், பதற்றம், எதிர்பார்ப்பு, உறவுகளுக்குள் ஏற்படும் உரசல்கள் என ஒவ்வொரு தருணத்தையும் இயல்பான அணுகுமுறையுடன் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.பல இடங்களில் சிரிக்க வைக்கும் காட்சிகளுக்குள் மனிதர்களின் மனநிலையையும் உறவுகளின் உண்மையையும் பேச வைத்திருப்பது படத்தின் முக்கிய பலமாக உள்ளது .வழக்கமான கமர்ஷியல் சினிமாவின் பாதையைத் தவிர்த்து, ஒரு திருமண வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்களின் வழியாக மனிதர்களின் மனதை படமாக்கியுள்ளார் இயக்குநர் ராஜா கருப்புசாமி.

 

நாயகனாக நடித்திருக்கும் ரிஷிகாந்த், மருது என்னும் கதாபாத்திரத்தை மிகையில்லாமல் உள்வாங்கி நடித்திருக்கிறார்.குறிப்பாக, சில காட்சிகளில் வசனங்களைவிட அவரது முகபாவனைகளே கதாபாத்திரத்தின் மனநிலையை வெளிப்படுத்துகின்றன. எதிர்பாராத உண்மையை தெரிந்துகொள்ளும் தருணம் முதல், அனிஷ்மாவின் வாழ்க்கையைப் பற்றி அவர் எடுக்கும் முடிவு வரை கதாபாத்திரத்தின் மனப்போராட்டத்தை அளவான நடிப்பின் மூலம் அவர் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

‘சிறை’ படத்திற்குப் பிறகு அனிஷ்மா அனில்குமாருக்கு இந்த படத்திலும் மீண்டும் அழுத்தமான கதாபாத்திரம் கிடைத்துள்ளது .முதல் பாதியில் அதிகம் பேசாமல் தனது கதாபாத்திரத்தை கடந்து செல்பவர், இரண்டாம் பாதியில் பல நேரங்களில் வசனங்களே இல்லாமல் தனது உணர்வுகளை செவ்வனே வெளிப்படுத்துகிறார்.மேலும் சேத்தன், பக்ஸ், சங்கீதா பாலன், பானுப்பிரியா, வர்ஷினி கார்மேகம், அப்துல் லீ, ஏ. வெங்கடேஷ் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி கதையின் ஓட்டத்துக்கு உறுதுணையாக நின்றுள்ளார்கள்

ஒளிப்பதிவாளர் சுரேந்தரன், கதையின் தன்மைக்கு ஏற்ற வகையில் காட்சிகளை இயல்பாக பதிவு செய்திருக்கிறார்.குறிப்பாக இரவு நேர காட்சிகளில் ஒளி மற்றும் காட்சியமைப்பை கையாண்டிருக்கும் விதம் படத்தின் மனநிலைக்கு பொருத்தமாக அமைந்துள்ளது.மற்றும் பரத் சங்கரின் இசையில் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் கதையின் போக்கோடும், கதாபாத்திரங்களின் உணர்வுகளோடும் பயணிக்கின்றன.அதைப்போல பின்னணி இசையிலும் கதையின் சூழலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது காட்சிகளின் உணர்வை அதிகரிக்கிறது.

மொத்தத்தில்,‘மொத ராத்திரி’ என்று தலைப்பு சொல்வது ஒரு இரவைப் பற்றி, ஆனால், அந்த ஒரு இரவுக்குள் மனிதர்களின் மனதில் இருக்கும் பல வருடக் குழப்பங்களையும், காதலையும், கட்டாயத்தையும், உறவுகளின் அழுத்தத்தையும் பேசுகிறது இந்தப் படம்.

Spread the love