எளிய மனிதர்களின் லட்சிய கனவாக இருப்பது அரசு பணி, அந்த பணிக்கான தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை ஏழு அத்தியாயங்களாக பதிவு செய்துள்ளது இந்த எக்ஸாம் தொடர்.

பணி மாறுதல் நிமித்தமாக புதிய பகுதிக்கு செல்லும் போலீஸ் டிஎஸ்பி ஆன அதிதி பாலன் பணிக்கு சேர வரும் வழியிலேயே கடத்தப்படுகிறார்.துஷாரா விஜயனால் நடத்தப்படும் இந்தக் கடத்தலுக்கு பின்பு, அதிதி பாலனுடைய பெயரிலேயே துஷாரா விஜயன் டி எஸ் பி யாக பதவி ஏற்று கொள்கிறார். அதற்குப் பின்னர் அங்கு நடக்க உள்ள அரசு தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை கண்டுபிடிக்கக்கூடிய தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் இதற்குப் பின்னணியில் இருப்பவர்கள் யார் ?அதற்குப் பின் என்ன நடந்தது ?இவைகளைப் பற்றி ஏழு அத்தியாயங்களாக சொல்லி இருக்கிறது எக்ஸாம் வெப் சீரீஸ்.

இந்த இணைய தொடரில் ஜான்சி என்னும் கதாபாத்திரத்தில் துஷாரா விஜயனும், மர மல்லி என்னும் கதாபாத்திரத்தில் அதிதி பாலனும் முக்கியமான மைய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இருவருமே தாங்கள் ஏற்றுள்ள கதாபாத்திரத்திற்கு முற்றிலும் பொருத்தமான நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்கள்.
90 காலகட்டத்தில் சாக்லேட் பாய் இமேஜுடன் பல படங்களில் நடித்திருந்த அப்பாஸ், இந்த வெப் சீரிஸ் மூலம் மீண்டும் மறு திரைப் பிரவேசம் நிகழ்த்தியுள்ளார் ,அவரைப் பொறுத்தவரையில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கக் கூடிய வகையில் நன்கு நடித்துள்ளார் .மேலும் வசந்தரா நரேன் மணி போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் குறைவில்லாத நடிப்பை வழங்கியுள்ளார்கள்.
சாம் சி.ஸ் -ன் பின்னனி இசை விறுவிறுப்பாக நகரும் காட்சிகளுக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது .அருண் அமரேந்திரனின் ஒளிப்பதிவு ,தொடரை சிறப்புற காட்சிப்படுத்துதலில் பெரும் பங்காற்றி உள்ளது .இணையத் தொடரை இயக்கியிருப்பவர் சற்குணம். எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த இளம் மற்றும் நடுத்தர வயதில் இருக்கும் இருபாலருக்கும் பெரும் நம்பிக்கையை தருவது அரசு தேர்வுகள்தான் ,ஆனால் அதிலேயே நடக்கும் முறைகேடுகளையும் ,மோசடிகளையும் சமூக கண்ணோட்டத்துடன் தொடராக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சற்குணம்.
மொத்தத்தில் இந்த எக்ஸாம் ரசிகர்களின் மனதில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிடும்.
