Tuesday, June 23

அங்கம்மாள் – திரைவிமர்சனம்

அங்கம்மாள் – திரைவிமர்சனம்

கதையின் நாயகி அங்கம்மாள் கணவனை இழந்த பிறகு ஒற்றை மனுஷியாய் உழைப்பினால் தன் குடும்பத்தை வழி நடத்தி வருப வருபவளுக்கு பரணி, சரண் என்னும் இரண்டு மகன்கள் உண்டு, முதுமையிலும் அயராது தன்னுடைய பழைய டிவிஎஸ் ஒன்றின் மூலமாக ஊர் முழுக்க பவனி வந்து உழைத்து வாழ வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் அவளுக்கு தன்னுடைய பேத்தி மீது கொள்ளை பிரியம் ,ஜாக்கெட் அணியும் பழக்கம் இல்லாத அங்கம்மாளின் இளைய மகனான டாக்டர் ஒரு தியேட்டர் அதிபரின் மகளை காதலிக்கிறான் ,,அவர்களது காதலுக்கு பெண் வீட்டாரின் சம்மதமும் கிடைத்து விடுகிறது காதலியின் வீட்டாரை தன் வீட்டிற்கு இளைய மகன் அழைத்து வரும் சூழலில் தன்னுடைய ரவிக்கை அணியாத அம்மாவை பற்றி காதலியின் வீட்டார் என்ன நினைப்பார்களோ என்று இளைய மகன் மிகவும் யோசிக்கின்றான். இதற்காக தன்னுடைய அண்ணியிடம் உதவி கேட்கிறான், மாமியார் மீது மிகுந்த பயம் கொண்ட அந்த அண்ணியும் மெதுவாக மாமியாரிடம் இது பற்றி பேசுகிறாள் ,இதன்பின் என்ன நடந்தது ?தன் மகனின் ஆசைக்காக ரவிக்கை அணிந்து கொள்ள அங்கம்மாள் சம்மதித்தாரா ?இல்லையா ?அவர்களது திருமணம் என்னவானது ?இதை எல்லாம் சொல்லுகிறது அங்கம்மாள் படத்தின் மீதி கதை .


இதற்கு முன்பாக எத்தனையோ படங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வந்த கீதா கைலாசம் இந்தப் படத்தில் படம் முழுவதும் பயணிக்கும் மைய கதாபாத்திரத்தில் அங்கம்மாளாக சிறப்பான தனது நடிப்பினை பதிவு செய்திருக்கிறார். அவருடைய உடல் மொழி, உரையாடல் மொழி இரண்டிலுமே தன்னுடைய பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி அங்கம்மாள் என்னும் அந்த கதாபாத்திரத்திற்கு தன்னுடைய முழு பங்களிப்பையும் கொடுத்துள்ளார் .மகன்களாக பரணி, சரண் இருவரும் இரு வேறுபட்ட பரிமாணங்களில் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வண்ணம் மிகை இல்லாத நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளார்கள். மற்றும் தென்றல், முல்லை யரசி போன்றவர்களும் அவரவர் பங்குக்கு குறைவில்லாத நடிப்பை நிறைவாக வழங்கியுள்ளார்கள் .

மண் சார்ந்த கதாபாத்திரங்களை சுமந்து பயணிக்கும் கதைக்கு ஏற்ற வகையில், அழகிய கிராமிய வாழ்வியலை செழுமையாக கேமராவில் பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் அஞ்சோய் சாமுவேல் .கதை நிகழும் காலத்திய அம்சங்களை படம் முழுவதும் பரிமளிக்க செய்து படம் பார்க்கும் ரசிகர்களை காலத்தினோடு பின்னோக்கி பயணிக்க வைத்திருக்கிறார் கலை இயக்குனர் கோபி கருணாநிதி. இசையமைப்பாளர் முகமது மக்பூர் மன்சூரின் பாடல்களும் ,பின்னணி இசையும் படக்காட்சிகளுக்கு அழகான ஒரு பின்புலத்தை கொடுத்து கதையோட்டத்தை ரசிக்க வைத்துள்ளது .

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கோடித்துணி என்னும் சிறுகதையை தழுவி இயக்குனர் விபின் ராதாகிருஷ்ணன் இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் ,சிறப்பான ஒரு சிறுகதையை எடுத்துக்கொண்டு அதற்கு பொருத்தமான படப்பிடிப்புத் தள,ங்களில் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற இணக்கமான நடிகர்களை நடிக்க வைத்து ,ஒரு அழகிய வாழ்வியலை படமாக்கி உள்ளார் இயக்குனர் .

அங்கம்மாள், தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நிச்சயம் சங்கமம் ஆவாள்.

Spread the love