Sunday, July 19

’அன்பே டயானா’ – திரைப்பட விமர்சனம்

“பெரிய ஹீரோயிசம் இல்லை… பரபரப்பான ஆக்‌ஷன் இல்லை… ஆனால், நம்மைச் சுற்றி தினமும் பார்க்கும் மனிதர்களின் வாழ்க்கை, இயல்பான காதல், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை இருந்தால் அதுவே ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக மாறும் என்பதை நிரூபிக்கிறது ‘அன்பே டயானா’.”

காதல் எப்போதும் ரசிக்கக்கூடியவை , அதிலும் நம்மைச் சுற்றி வாழும் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையோடு கலந்த காதல் கதைகள் எப்போதும் மனதிற்கு நெருக்கமாக இருக்கும். அந்த வரிசையில், பெரம்பூரின் மண்வாசனை, குடும்ப உறவுகளின் வெப்பம், நகைச்சுவை மற்றும் எதார்த்தமான காதலை இணைத்து ரசிக்க வைக்கும் படமாக வந்திருக்கிறது ‘அன்பே டயானா’.

சென்னை பெரம்பூரில் வசிக்கும் பாரி இளவழகன், கல்லூரி நாட்களில் இருந்தே ஆங்கிலோ இந்திய பெண்ணான ரம்யா ரங்கநாதனை ஒருதலையாக காதலித்து வருகிறார். ஆனால், ரம்யா அவரை நண்பராக மட்டுமே பார்க்கிறார். மறுபுறம், பாரியின் கண்டிப்பான அம்மா, தன் உறவுக்கார பெண்ணை மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்.காதலை வீட்டில் சொல்ல முடியாமல் பாரி தவிக்கிறார் . திருமண ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெறும் நேரத்தில், எதிர்பாராத விதமாக ரம்யா தனது காதலை வெளிப்படுத்துகிறார். இதன் பிறகு பாரியின் வாழ்க்கை எந்த திசையில் செல்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் பாரி இளவழகன் , நாம் அன்றாடம் சமூகத்தில் பார்க்கக்கூடிய சராசரி இளைஞர்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் கதாபாத்திரத்தில், மிகவும் இயல்பான நடிப்பினை அளவுடன் வெளிப்படுத்தி இருக்கிறார் ..நாயகியாக நடித்துள்ள ரம்யா ரங்கநாதன், ஆங்கிலோ இந்திய பெண்ணின் உடல்மொழி, சென்னை தமிழ் கலந்த ஆங்கில உச்சரிப்பு, குறும்பும் தைரியமும் கலந்த நடிப்பு என ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை கவர்கிறார்.

நாயகனின் அம்மாவாக ,சரளா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரோஜா, தனது அனுபவம் மிக்க நடிப்பால் கதாபாத்திரத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார். இந்தப் படத்திற்கு பிறகு ரோஜா அவர்கள் நிறைய படங்களில் இது போன்ற குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்

நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் சேத்தன், இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். சிறிய இடைவெளிக்குப்பின் செல் முருகன் திரையில் தன நடிப்புத்திறனை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் பரிதாபங்கள் கோபி, நிகிலா சங்கர், இஸ்மத் பானுஎன அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நன்கு நடித்துள்ளார்கள் .

ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட்,தன் கேமரா மூலம் காட்சிகளுக்கு புதிய பொலிவினை கொடுத்துள்ளார் பரத் சங்கரின் இசையில் பாடல்கள் அனைத்தும் பார்க்கவும் கேட்கவும் அருமை . பின்னணி இசையும் கதையுடன் பயணித்துள்ளது

கதை எழுதி இயக்கியதோடு, கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் பாரி இளவழகன் ,காதல் கதையில் இயல்பான கதாபாத்திரங்களை உருவாக்கி, அத்ற்கு பொருத்தமான நடிகர்களை நடிக்கவைத்து, ரசிகர்களுக்கு முழுநீள பொழுதுபோக்கு படத்தினை வழங்கியுள்ளார்.

மொத்தத்தில் . ‘அன்பே டயானா’ சிரிக்கவும், ரசிக்கவும், வைக்கும் ஒரு அழகான குடும்ப ரொமான்டிக் பொழுதுபோக்கு திரைப்படம்.”

Spread the love