இன்னமும் பள்ளிக்குச் செல்ல பல கிலோமீட்டர் கடக்க வேண்டிய குழந்தைகள்… கல்வி கனவுகளை சுமந்து வாழும் சிறார்கள் … இவை எல்லாம் கதைக்காக உருவாக்கப்பட்ட கற்பனை கதாபாத்திரங்கள் இல்லை …. அவை இன்னும் சில பகுதிகளில் வாழும் மக்களின் யதார்த்தமான வாழ்க்கையின் பதிவுதான் என்பதை சொல்லுகிறது இந்த ‘அருள்வான்’..

மலைக் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி கிருத்திகாவுக்கு கல்வி கற்க வேண்டும் என்பதே மிகப்பெரிய கனவு. ஆனால், வறுமை, போக்குவரத்து வசதியின்மை, அடிப்படை தேவைகள் கூட இல்லாத வாழ்க்கை ஆகியவை அந்தக் கனவிற்கு சுவராக நிற்கின்றன. தனக்காக மட்டுமல்லாமல், தன்னைப் போன்ற மலைவாழ் குழந்தைகளும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் போராடும் அவளது வாழ்க்கையில், மாவட்ட ஆட்சியராக வரும் முத்துவேல் (அருள்நிதி) நம்பிக்கையின் ஒளியாக மாறுகிறார். இந்த போராட்டம் வெற்றியை கண்டதா? அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் மாற்றமடைந்ததா? என்னும் கீவிகளுக்கு விசயனை சொல்லுகிறது இந்த ‘அருள்வான்’.
தொடர்ந்து புதிய பாணி கதைகளையும், அதில் தனக்கான கதாபாத்திரங்களையும், தேர்ந்தெடுத்து வரும் அருள்நிதி, இந்த முறையும் சமூக அக்கறை கொண்ட கதையில் பொறுப்புணர்வு மிக்க. மாவட்ட ஆட்சியர் முத்துவேலாக அளவான நடிப்பினை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார்
பழங்குடியின இளைஞராக நடித்துள்ள ஆரவ், தனது தோற்றம் மற்றும் உடல்மொழியில் கதாபாத்திரத்திற்கு உரிய நடிப்பை நன்கு கொடுத்துள்ளார் ,நாயகி ரம்யா பாண்டியன் கொடுக்கப்பட்ட காட்சிகளில் தன் நடிப்பை அளவான முறையில் பதிவு செய்துள்ளார் ,மற்றும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய கதாபாத்திரத்தில் சிறுமி கிருத்திகா ,தன்னுடைய யதார்த்தமான நடிப்பை அழகுற வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுகிறார். மேலும் காளி வெங்கட் ,ஜான் விஜய், விடிவி கணேஷ் போன்ற நடிகர்களும் தங்களுக்கான கதாபாத்திரங்களில் மிகை இல்லாத நடிப்பை நன்கு வழங்கியுள்ளார்கள் .மலையும் மலை சார்ந்த பகுதிகளையும் தன்னுடைய சிறப்பான கோணங்கள் மற்றும் ஒளி அமைப்புக்கள் மூலம் ஒளிப்பதிவாளர் எம் .சுகுமார் நேர்த்தியான முறையில் பதிவு செய்திருக்கிறார் .ஜிவி பிரகாஷின் பின்னணி இசை கதாபாத்திரங்களின் உணர்வுகளை மேலும் நன்கு வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்து,காட்சிகளுக்கு இணக்கமான பின்புலத்தை கொடுத்துள்ளது.
பழங்குடி மக்களின் வாழ்வியலை ,அவர்களுக்கு இன்னமும் எட்டாக்கனியாக இருக்கக்கூடிய கல்வி உள்ளிட்ட பிற அடிப்படை வசதிகள் பற்றிய விழிப்புணர்வை தருவது போன்ற விஷங்களை கதையோடு கலந்து திரை மொழியில் படமாக்கி உள்ளார் இயக்குனர் கணேஷ் விநாயகம்.
மொத்தத்தில் ‘அருள்வான்’ வெறும் திரைப்படம் அல்ல; கல்வி இன்னும் பலருக்கு கனவாகவே இருக்கும் உண்மையினை நம் கண்முன் நிறுத்தும் ஒரு பதிவு .
