Sunday, August 30

அமரம் – திரைப்பட விமர்சனம்

ஒரு கொலை… ஒரு பழி… அந்தப் பழியை தீர்க்கப் புறப்படும் பெண்… ஆனால், இறுதியில் பழிவாங்கும் மனமே மாறிப்போனால்? மலைகளின் அழகுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் வலி, பழங்குடி மக்களின் வாழ்வியல், மனிதர்களுக்குள் இருக்கும் பகை மற்றும் பாசம் என பல உணர்வுகளை ஒன்றாகக் கலந்து உருவாகியிருக்கும் படம்தான் ‘அமரம்’.

மலை கிராமம் ஒன்றில் கூலிப்படையாக வாழ்ந்து வருகிறார் அருகன் (ராஜன் தேஜஸ்வர்). ஒரு கட்டத்தில், ஐரா அகர்வாலின் தந்தையை அருகன் கொலை செய்ய நேரிடுகிறது. தந்தையை இழந்த ஐரா, அவரை எப்படியாவது கண்டுபிடித்து பழிவாங்க வேண்டும் என்ற முடிவுடன் களமிறங்குகிறார்.

எம்.எல்.ஏ நாகிநீடு உதவியுடன் அருகனை தேடிச் செல்லும் ஐரா, இறுதியில் அவரை கண்டுபிடிக்கிறார். ஆனால், பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் சென்ற அவருக்குள் எதிர்பாராத மாற்றம் ஏற்படுகிறது. பழிவாங்கும் முடிவிலிருந்து மனம் மாறும் ஐராவுக்கு அதன்பிறகு ஆபத்து உருவாகிறது. ஆபத்தில் சிக்கிய ஐராவை காப்பாற்றுகிறார் அருகன். அதன் பிறகு இருவருக்குள்ளும் உருவாகும் உறவும், அந்த மலைப்பகுதியில் நடைபெறும் சம்பவங்களும்தான் படத்தின் மீதிக்கதை.


அருகன் கதாபாத்திரத்தில் ராஜன் தேஜஸ்வர் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அறிமுக நாயகன் என்ற எண்ணம் ஏற்படாத வகையில் கதாபாத்திரத்தின் முரட்டுத்தனம், வலி மற்றும் உணர்வுகளை தனது நடிப்பில் நன்கு வெளிப்படுத்தியுள்ளார்.

கதையின் நாயகியாக வரும் ஐரா அகர்வால், தந்தையின் மரணத்திற்கு காரணமானவரை பழிவாங்க வேண்டும் என்ற கோபத்துடன் பயணிக்கும் கதாபாத்திரத்தில் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக, பழிவாங்கும் எண்ணத்திலிருந்து மனம் மாறும் தருணங்களில் அவரது நடிப்பு கதாபாத்திரத்தின் உணர்வுகளை நன்கு வெளிப்படுத்துகிறது.

மேலும் ஜார்ஜ் மரியான், சாய் தீனா, நாகிநீடு , ஹரிஷ் பெராடி, கல்கி ராஜன் உள்ளிட்ட நடிகர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வானம் குறைவில்லாத நடிப்பை படத்தில் பதிவு செய்துள்ளார்கள்.

மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறையையும், இயற்கையையும், அந்த நிலப்பரப்பின் தன்மையையும் தனது ஒளிப்பதிவின் மூலம் அழகாக பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பரத்குமார்.

மிக்கி ஜெ .மேயர் இசையில் பாடல்கள் காட்சிகளோடு ஒன்றிணைந்து பயணிக்கின்றன. அதைவிட, கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் பின்னணி இசை பல காட்சிகளில் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் ஆர்.ஸ்ரீராமரின் படத்தொகுப்பு , இயக்குனரின் கதையோட்டத்துக்கு ஏற்ப காட்சிகளை கோர்வையாக தொகுத்துள்ளது .

மலைவாழ் மக்களின் வாழ்க்கை, அவர்களின் எண்ணங்கள், உறவுகள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள பிரச்சினைகளை கதையின் மையத்துடன் இணைத்து, சீரான திரைக்கதையாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர் திருஅருள் கிருஷ்ணா.

மலைகளின் இயற்கை அழகுக்கு நடுவே மனிதர்களின் கோபம், வலி, பாசம் மற்றும் மனமாற்றத்தை பதிவு செய்யும் இந்தப் படத்தில் , ஆக்‌ஷனுடன் உணர்வுகளையும் கலந்து சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குனருக்கு அதில் வெற்றியே கிடைத்துள்ளது என்று சொல்லலாம் .

மொத்தத்தில்…பழிவாங்கும் கதையுடன் மனித உணர்வுகளையும் கலந்து சொல்லப்பட்டிருக்கும் ‘அமரம்’, வித்தியாசமான களத்தில் ஒரு கதையை பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு ஏற்ற தேர்வு.

Spread the love