வெறும் 5 ஆயிரம் ரூபாய் வாடகைக்காக ஒரு வீட்டுக்குள் குடியேறுகிறார் ஜி.வி. பிரகாஷ்… ஆனால் அந்த வீட்டில் அவருக்காக காத்திருப்பது வாடகை வீடு அல்ல… ஒரு மர்ம உலகம்!

வீடு தேடி அலையும் ஜி.வி. பிரகாஷுக்கு, கயாடு லோஹர் ஒரு ரூம் ஷேரிங் வாய்ப்பை கொடுக்கிறார். அதுவும் மாத வாடகை வெறும் ரூ.5,000 மட்டுமே.கயாடு லோஹரின் அழகில் மயங்கிய ஜி.வி., வேறு எதையும் யோசிக்காமல் அந்த வீட்டில் குடியேறுகிறார்.ஆரம்பத்தில் எல்லாமே இயல்பாகத்தான் செல்கிறது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, தன்னை சுற்றி நடக்கும் சில விசித்திரமான சம்பவங்கள் ஜி.வி.யின் சந்தேகத்தை அதிகரிக்கிறது.இந்த வீட்டில் ஏதோ சரியில்லை…’என்ற எண்ணம் அவருக்குள் உருவாகும் நிலையில், கயாடு லோஹர் சாதாரண பெண் இல்லை என்பதும், அந்த வீட்டுக்குள் ஒரு அமானுஷ்ய மர்மம் இருப்பதும் அவருக்கு தெரிய வருகிறது.அதன்பிறகு அந்த வீட்டில் இருந்து தப்பிக்க நினைக்கும் ஜி.வி.க்கு என்ன நடந்தது? அந்த வீட்டிலிருந்து அவர் உயிருடன் வெளியேறினாரா? அல்லது அந்த அமானுஷ்யத்தின் பிடியில் சிக்கிக் கொண்டாரா?இதன் பின் என்ன நடந்தது ?என்பதுதான் ‘இம்மார்ட்டல்’ படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக வரும் ஜி.வி. பிரகாஷ், தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை இயல்பாக உள்வாங்கி நடித்திருக்கிறார்.பதற்றம், சந்தேகம், பயம் என கதையின் சூழ்நிலைக்கு ஏற்ப தனது நடிப்பை மாற்றிக் கொள்வது கதைக்கு பலம் சேர்க்கிறது.கதையின் நாயகியாக வரும் கயாடு லோஹர், தன்னுடைய தோற்றத்தாலும் நடிப்பாலும் கதாபாத்திரத்தின் மர்மத்தை அழகாக தாங்கி நிற்கிறார். குறிப்பாக அவரது கதாபாத்திரத்தை சுற்றி இருக்கும் suspense, படம் நகர நகர சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.லொள்ளு சபா மாறன், T.M. கார்த்திக், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பிற நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணனின் கேமரா, இயக்குனரின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப கதையுடன் பயணிக்கிறது.சாம் சி.எஸ். இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசைதான் படத்திற்கு கூடுதல் பலம்.குறிப்பாக சஸ்பென்ஸ் காட்சிகளில் பின்னணி இசை, அந்த தருணங்களுக்கான பதற்றத்தை சரியாக உருவாக்குகிறது.
இயக்குனர் மாரியப்பன் சின்னா, ஒரு எளிமையான கதையை எடுத்துக்கொண்டு அதை அமானுஷ்ய ,சஸ்பென்ஸ் த்ரில்லர் பாதையில் கொண்டு சென்றிருக்கிறார்.படத்தின் மிகப்பெரிய பலம், “அடுத்து என்ன நடக்கும்?” என்ற எதிர்பார்ப்பை உருவாக்கும் முயற்சிதான்.அதே நேரத்தில் முழுக்க சீரியஸான ஹாரார் படமாக இல்லாமல், பொழுதுபோக்கு அம்சங்களையும் கலந்து படத்தை உருவாக்கியிருக்கிறார்.
கதையின் ஒவ்வொரு திருப்பத்திலும் சந்தேகத்தை உருவாக்கி,இறுதிவரை அந்த மர்மத்தின் பின்னால் என்ன இருக்கிறது என்ற கேள்வியை நம்முடன் பயணிக்க வைக்கிறது ‘இம்மார்ட்டல்’.
