“ஒரு கிரிக்கெட் ரசிகனின் கனவு… அது வெறும் போட்டியைப் பார்ப்பதல்ல; தன் ஹீரோவை ஒருமுறையாவது நேரில் பார்ப்பதுதான்!”இந்த உணர்வை மையமாக வைத்து உருவாகியிருக்கும் தமிழ் ஒரிஜினல் வெப் சீரிஸ்தான் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’. கிரிக்கெட்டை வெறும் விளையாட்டாக அல்ல, வாழ்க்கையின் ஒரு அங்கமாக நேசிக்கும் ரசிகர்களின் மனநிலையை மிக இயல்பாகவும், உணர்வுபூர்வமாகவும் பதிவு செய்கிறது இந்த தொடர்.

கதையின் மையத்தில் இருப்பவர்கள் கிராமத்தைச் சேர்ந்த மூன்று நண்பர்கள் – சின்னா, ஷகில், சிவா. அவர்களின் ஒரே இலக்கு, தாங்கள் உயிராக நேசிக்கும் கிரிக்கெட் நட்சத்திரத்தை நேரில் சந்திப்பது. இந்தச் சிறிய கனவை நோக்கி அவர்கள் மேற்கொள்ளும் பயணம்தான் ஆறு அத்தியாயங்களாக விரிகிறது.
முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள வைபவ் முருகேசன், வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக் ஆகிய மூவரும் மிக இயல்பான நடிப்பை வழங்கியுள்ளனர். சமகால ,சாமானிய இளைஞர்களை நம் கண் முன்னே பிரதிபலிக்கும் வகையில் இவர்களது கதாபாத்திரமும் அதை அவர்கள் ஏற்று சிறப்பாக நடித்திருந்த விதமும் சிறப்பாக இருந்தது. மேலும் லாவண்யா அன்பழகன், நான் கடவுள் ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, ஹலோ கந்தசாமி போன்றோரும் அவரவர் கதாபாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப நன்கு நடித்திருந்தார்கள்.

அழகியல் காட்சிகளை நம் கண்கள் ரசிக்கத்தக்க வகையில் நேர்த்தியான முறையில் காட்சி பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் பி எம் ராஜ்குமார். கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், கதையில் காட்சிகள் நகரும் வேகத்தினையும் பார்க்கும் ரசிகர்கள் ரசித்து உணரத் தக்க வகையில் இசையமைப்பாளர் பரத் தனசேகரின் பின்னணி இசை தொடர் முழுவதும் வியாபித்திருந்தது.
இயக்குநர் சவிர் சுதாகர், கிரிக்கெட்டை வெறும் விளையாட்டாக மட்டும் காட்டாமல், ரசிகர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒரு உணர்வாக சித்தரித்திருக்கிறார். கதாபாத்திரங்களின் பயணம், அவர்கள் சந்திக்கும் சவால்கள், அவர்களின் கனவுகள் ,ஒரு கிரிக்கெட் வீரரை கடவுளாகக் கொண்டாடும் மனப்பாங்கு என அனைத்தையும் சீரான திரைக்கதையுடன் நகர்த்தியிருப்பது அவரது திறமையை நன்கு வெளிப்படுத்துகிறது.
மொத்தத்தில் ,இந்த ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ வெறும் கிரிக்கெட் வெப் சீரிஸ் மட்டும் அல்ல. அது நட்பைப் பற்றியும், நண்பர்களின் கனவுகளைப் பற்றியும், ரசிகர்களின் மனதில் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைப் பற்றியும் பேசும் ஒரு உணர்வுப்பூர்வமான பயணத்தின் பதிவு. இன்னும் சுருக்கமாகவும் சுவாரசியமாகவும் சொல்றதுன்னா, விளையாட்டையும், வெப் சீரிஸையும் விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் இந்த மம்பட்டியான் ஸ்டார்ஸ்.
