இளம் வயதில் பிரிந்து சென்ற தாய், தங்கையுடன் பாட்டி வீட்டில் விட்டு சென்ற தந்தை, என வாழும் செல்லதுரை(ஏகன்) பாட்டியின் மறைவுக்குப்பின் பெரியப்பா பெரியசாமியின் (யோகி பாபு) ஆதரவோடு உள்ளான். பெரியசாமி வைத்துள்ள கோழிக்கடையில் கறி வெட்டுபவராக வேலை செய்யும் செல்லதுரை தங்கை ஜெயசுதா (சத்யா) மீது அளவற்ற அன்பும் பாசமும் கொண்டுள்ளார் .கல்லூரிக்குச் செல்லும் தங்கைக்கு காதல் ஏற்படுகிறது. தங்கையும் அம்மாவைப் போலவே அவமானத்தை தந்து விடுவாரோ என்று கோபப்படுகிறான் செல்லதுரை. அதன் பிறகு,அவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது? தங்கையின் காதலை அண்ணன் ஏற்றுக் கொண்டாரா ?என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
செல்லதுரை என்னும் கதாபாத்திரத்தில் அன்பும் பொறுப்பும் கொண்ட பாசக்கார அண்னனாக, கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் ஏகன் நிறைவாக நடித்துள்ளார். பெரியசாமியாக முக்கியமான மைய கதாபாத்திரத்தில் நடித்துள்ள யோகி பாபு தன்னுடைய வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்ட நடிப்பை இப்படத்தில் கொடுத்துள்ளார் .தங்கையாக நடித்த சத்யா கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கதாநாயகியாக நடித்துள்ள பிரிகிடா சாகா வழக்கமான நாயகி கதாபாத்திரம் என்றாலும் குறை காண முடியாத நடிப்பை கொடுத்துள்ளார்
தேனி சுற்றுபுற அழகியலை நன்கு பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் அசோக் ராஜ்.’தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘இடி முழக்கம்’ தொடர்ந்து ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’யில் நான்காவது முறையாக இயக்குனர் சீனுராமசாமியுடன் இசை அமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன் இணைந்து பணியாற்றி உள்ளார் .இந்த படத்தில் அவரது பின்னணி இசை, கதையோடு பயணித்து காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது ,கவிப்பேரசு வைரமுத்துவின் வரிகளில் பாடல்கள் சிறப்பாக உள்ளன .
வாழ்க்கை என்னை கைவிட்டு விட்டது, இந்த வாழ்க்கையை வாழவே பிடிக்கவில்லை, இந்த வாழ்க்கையில் எனக்கென்று யாரும் இல்லை என்று யாராவது நினைத்தால் அவர்களுக்கு இந்த படத்தில் ஒரு செய்தி இருக்கிறது. இந்த பிரபஞ்சம் எந்த ஒரு தனி மனிதனையும் கைவிடுவதில்லை. ஏதேனும் ஒரு ரூபத்தில் வருகை தந்து உங்களை அரவணைத்து காக்கும் என்ற இயக்குனர் சீனுராமசாமியின் கூற்றை எடுத்துக்காட்டும் இந்த கோழிப்பண்ணை செல்லதுரை படமும் அவரது முந்தைய படங்களைப்போலவே எளிய நடுத்தர மக்களின் வாழ்வியலை சொல்லும் வகையில் சிறப்பாக உள்ளது.
