வைகறை மேகங்களில் உதித்திட்ட கதிரவன் ,பொன்மாலை பொழுதில் புறப்பட்ட பூபாளம் என திகழும் கவிப்பேரசு வைரமுத்து அவர்கள் எழுத்திலக்கிய துறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவதையொட்டி ‘வைரமுத்து இலக்கியம் 50’ எனும் பொன்விழா இலட்சினையை சமீபத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அவர்கள் வெளியிட்டார்.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் 1972இல் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ இராண்டாம் ஆண்டு மாணவராக பயின்று கொண்டிருந்த காலத்தில் அவரது முதல் கவிதை நூலான ‘வைகறை மேகங்கள்’வெளிவந்தது, அந்த நூலுக்கு கவியரசு கண்ணதாசன் அணிந்துரை வழங்கியிருந்தார். வைகறை மேகங்களில் துவங்கிய அவரது இலக்கியப்பணி இந்த 50 ஆண்டுகளில் 38 நூல்களையும், 7500 பாடல்களையும் வழங்கியிருக்கிறது. கவிப்பேரரசு அவர்களின்இலக்கியப் பொன்விழா இந்த ஆண்டுமுழுவதும் நம் நாட்டிலும் பிற நாடுகலிலும் சிறப்பாக கொண்டாடப்படஉள்ளது .
கவிப்பேரரசுவின் படைப்புகள்
வைகறை மேகங்கள் ,திருத்தி எழுதிய தீர்ப்புகள் ,இன்னொரு தேசியகீதம் ,எனது பழைய பனையோலைகள், கவிராஜன் கதை .இரத்த தானம்,இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல,தமிழுக்கு நிறமுண்டு,பெய்யெனப் பெய்யும் மழை ,”எல்லா நதிகளிலும் எங்கள் ஓடங்கள்” ,கொடி மரத்தின் வேர்கள்,‘இதுவரை நான்’ (சுயசரிதை) கருவாச்சி காவியம் , வைரமுத்து கவிதைகள், மூன்றாம் உலகப்போர் , தண்ணீர் தேசம் , கொஞ்சம் தேநீர் நிறைய வானம் , வைரமுத்து சிறுகதைகள் , ‘தமிழாற்றுப்படை’ என நீண்ட பட்டியலுடன் தொடர்கிறது . இடைவிடாத இலக்கிய பணியோடு திரைத்தமிழுக்கும் தன் சீரிய பங்களிப்பை வாரி வழங்கிய கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பாடல்கள் என்றைக்கும் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும் .அந்த இனிய திரைப்படப்பாடல்களுக்ககாக , பாடலாசிரியருக்கென்று 7 முறை தேசிய விருது பெற்றதோடு மட்டுமல்ல சிறந்த பாடலாசிரியருக்கான தமிழ்நாடு அரசின் விருதினையும் 6 முறை பெற்றவர் .இந்த நீண்ட சாதனைகளை பெற்றவர் இவர் மட்டுமே என்பது குறிப்படத்தக்கது .
கவிப்பேரரசு அவர்கள் தேசிய விருது பெற்ற பாடல்கள்
(1985) அனைத்துப் பாடல்கள் (படம் முதல் மரியாதை)
(1992) பாடல்- சின்னச்சின்ன ஆசை (படம்: ரோஜா)
(1994) பாடல் -போறாளே பொன்னுத்தாயி (படம்: கருத்தம்மா),பாடல்- உயிரும் நீயே (படம்: பவித்ரா)
(1999) பாடல்- முதன் முறை கிள்ளிப் பார்த்தேன் (படம்: சங்கமம்)
(2002) பாடல் -நெஞ்சில் ஜில் ஜில் ஜில் (படம்: கன்னத்தில் முத்தமிட்டால்)
(2010) பாடல்- கள்ளிக்காட்டில் பிறந்த தாயே (படம்: தென்மேற்கு பருவக்காற்று)
(2016)பாடல் -எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று (படம்: தர்மதுரை)
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் இந்தியாவின் உயர்ந்த விருதுகளான ‘பத்மஸ்ரீ’ (2003)மற்றும் ‘பத்மபூஷண்’ (2014)விருதுகளும் ,தமிழக அரசின் கலைமாமணி விருதும் (1990) பெற்றவர் .மற்றும் கள்ளிக்காட்டு இதிகாசம்’ படைப்பிற்க்காக சாகித்ய அகாடமி’ விருதும் 2003ல் பெற்றவர் . இவரது ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ 23 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் படைப்புகள் பல இந்திய மொழிகளிலும் , ஆங்கிலம் , ரஷ்யன் போன்ற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. கவிப்பேரரசு அவர்களுக்கு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவை கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி அவரது இலக்கியப்பணியினை மேலும் சிறப்பித்திருக்கிறது.
1972முதல் இலக்கியப்பணியிலும், 1980ல் நிழல்கள் திரைப்படம் வாயிலாக திரையுலகிலும் கால்தடம் பதித்து அரைநூற்றாண்டாய் தமிழ்ப்பணி ஆற்றிவரும் கவிப்பேரரசுவின் இலக்கியப்பணிகள் மென்மேலும் பல்லாண்டுகாலம் தொடர்ந்து பல சாதனை மலர்களை அவர் வாசலில் மணம் வீச செய்யட்டும்.