Wednesday, April 22

டூரிஸ்ட் ஃபேமிலி – திரை விமர்சனம்.

கோடை விடுமுறையை பொறுத்த வரைக்கும் பல பேர் தங்கள் கிட்டே இருக்கிற பொருளாதாரத்துடைய அடிப்படையில ஏதாவது ஒரு சுற்றுலா தளத்துக்கு போயிட்டு, குடும்பமா சந்தோஷமா, மன நிம்மதியோடு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆயிட்டு வருவாங்க, இந்த சூழ்நிலையில் இந்த கோடை விடுமுறைக்கு திரையரங்குல எந்த படம் குடும்பத்தோடு போய் பார்க்கலாம் என்று நினைக்கிறவங்களுக்கு நான் இருக்கிறேன் என்று சொல்லி வெளிவந்திருக்கும் திரைப்படம் இந்த டூரிஸ்ட் ஃபேமிலி.
இலங்கையுடைய பொருளாதார சூழ்நிலை பிரச்சனையினால விலைவாசி அதிகரிக்க, அங்கு வாழ முடியாமல் சட்டத்திற்கு புறம்பா ஒரு படகுல ஏறி தன்னுடைய குடும்பத்தோட சசிகுமாரும் அவருடைய மனைவியும் இரண்டு பசங்களும் அகதியாக ராமேஸ்வரம் வராங்க யாருக்கும் தெரியாம வந்தவங்கள போலீஸ் கான்ஸ்டபிளா இருக்கிற ரமேஷ்திலக் பார்க்க ,விசாரணைக்காக இவங்க நாலு பேரையும் போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போறாரு, போற வழியில பிழைக்கிறதுக்காக தான் இங்க வந்திருக்கோம் ,வேற எந்த இருக்கு காரணத்துக்காகவும் இந்தியாவுக்கு நாங்க யாரும் வரலன்னு சொல்றாரு சசிகுமார். ரமேஷ் திலக் அவங்க மேல இரக்கப்பட்டு ஸ்டேஷனுக்கு கூப்பிட்டு போகாம நடுவழியிலேயே இறக்கி விடுகிறார்.அதுக்கு பிறகு சிம்ரன் உடைய அண்ணன் யோகி பாபு மூலமா சென்னையில் ஒரு வீட்ட பாக்குறாங்க, அதோட மட்டுமில்லாமல் சசிகுமாருக்கும் ஒரு வேலை தேடும் முயற்சியும் பண்றாங்க, யோகி பாபு போலியான ஆதார் கார்டு ரெடி பண்ணி தர்றாரு ,அது மூலமா சசிக்குமாருடைய இளைய மகன் ஒரு ஸ்கூல்ல படிக்கிறாரு,யோகி பாபு ,சசிகுமாருக்கு டிரைவிங் லைசன்ஸ்யும் ரெடி பண்ணி தர ,சசிகுமார் டிரைவர் வேலைக்கு போரராரு, அதே காம்பவுண்ட்ல இருக்கிறவங்க கிட்ட சிம்ரன் கொஞ்சம், கொஞ்சமா பேசவும் பழகவும் ஆரம்பிக்கிறாங்க, இப்படிப்பட்ட சூழ்நிலையில் ராமேஸ்வரத்தில் இருக்கிற ஒரு குப்பைத்தொட்டியில் வெடிகுண்டு ஒண்ணு வெடிக்குது ,வெடிகுண்டை வைச்சது யாரு அப்படின்னு கண்டுபிடிக்க போலீஸ் முயற்சி செய்யறாங்க அதனை இலங்கையில் இருந்து அகதிகளாக வந்திருக்கும் சசிகுமாரின் குடும்பம் தான் செய்திருக்கும் என்று காவல்துறையினர் சந்தேகித்து அந்த குடும்பத்தை தேடத் தொடங்குறாங்க, அதுக்கு பிறகு ,சசிகுமார் மற்றும் அவருடைய குடும்பத்தையும் போலீஸ் கைது பண்ணாங்களா ?இல்லையா ?அந்த வெடி விபத்துக்கு காரணம் யாரு? அதன் பிறகு சசிகுமாரின் குடும்பம் என்னவானது ?அப்படிங்கிறது தான் படத்துடைய மீதி கதை.

நண்பனா, காதலனா, கணவனா, சகோதரனா, ஆக்ரோஷமான ஹீரோவா, அமைதியான கதாபாத்திரமா என மன உணர்வுகளை இயல்பா வெளிப்படுத்தும் பல கதாபாத்திரங்களை இதுவரை ஏற்று நடித்திருந்த சசிகுமார், முதல்முறையாக இலங்கை தமிழ் பேசுகிற ஒரு குடும்பத் தலைவனாக நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க இலங்கைத் தமிழை, அந்த வட்டார வழக்கை முழுமையாக பேசவில்லை என்றாலும் அந்த மொழியின் பின்புலத்தின் மூலம் ஒரு சராசரி மனிதனுடைய ஆசையையும், ஆதங்கத்தையும் ,மனிதாபிமானத்தையும் மனித நேயத்தையும் மிக அழகாக தன்னுடைய நடிப்பின் மூலம் இயல்பா வெளிப்படுத்தி டூரிஸ்ட் ஃபேமிலியை வழிநடத்தி இருக்கிறார்.மேலும் நல்லவனாக மட்டும் தான் தன்னால நடிக்க முடியும் என்று சொல்லாமல் ஒரு முழு நீள நகைச்சுவை படத்திலும் சிறப்பாக தன்னால் நடிக்க முடியும் என்று தன் நடிப்பின் மூலமாக சொல்லாமல் சொல்லி இருக்கிறார் சசிகுமார், அதோடு மட்டுமில்லாமல் இவருக்கு ஏத்த மாதிரி இவரை தேடி மட்டுமே, இவருக்கே உரித்தான கதாபாத்திரங்கள் எப்படி அமையுது என்ற ஆச்சரியமும் நமக்கு ஏற்படுகிறது. இது போன்ற பல வித்தியாசமான கதாபாத்திரங்கள் மேலும் அவருக்கு அமைய வாழ்த்துக்களை முன்னதாகவே சொல்லலாம்.
இதுபோன்ற கதாபாத்திரங்கள் சிம்ரனுக்கு புதுசு இல்லை என்றாலும், இது போன்ற கதாபாத்திரத்தில் சிம்ரன் ஏற்கனவே ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு, பல விதமான பரிமாண நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய நகைச்சுவை கலந்த கதாப்பாத்திரத்தில் சிம்ரனை பார்க்கும்போது புதுசாக இருந்தது. மேலும் சசிகுமார் உடைய பெரிய பையனாக நடித்திருக்கும் மிதுன் ஜெய்சங்கர் தன்னுடைய அப்பா மேல இருக்கிற கோபமும் அந்த கோவத்திற்கான காரணத்தை சொல்லும்போது எந்தவிதமான தயக்கமும் , பயமும் நடிப்பில் இல்லாமல் அழகா தன்னுடைய நடிப்பை  வெளிப்படுத்தி இருக்கிறார்.சிம்ரனுக்கு அண்ணனா யோகி பாபு சில காட்சிகள் மட்டுமே வந்திருந்தாலும் கூட தன்னுடைய வழக்கமான பாணியில சிம்ரனை மட்டுமில்லாமல் ,பலரையும் கிண்டல் செய்து நம்மள ரசிக்க வச்சதோட, இன்னமும் கொஞ்சம் காட்சிகள் அவருக்கு கொடுத்திருக்கலாமோ என்ற ஏக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறார்.

சசிகுமாரின் இளைய மகனா வர கமலேஷ் ஜெகன்,படத்தோட நகைச்சுவை காட்சிகளுக்கு முக்கியமான பங்களிப்பை கொடுத்து இருக்காரு. சீரியஸான காட்சிகள்ல சிரிப்பலையும் ஏற்படுத்தியிருக்கிறார். எம் எஸ் பாஸ்கர் உடைய நடிப்பு ஆர்ப்பாட்டம் இல்லாமல் அளவா, அழகா வழக்கம் போலவே பாராட்டுதலுக்குரிய வகையில இருக்கு, மேலும் ரமேஷ் திலக், இளங்கோ குமாரவேல் .ஸ்ரீஜா ரவி இவங்களும் தத்தம் கதாபாத்திரங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி,டூரிஸ்ட் ஃபேமிலியோடு பயணம் செஞ்சு படத்துக்கு பலமும் சேர்த்து இருக்காங்க.

அரவிந்த் விஸ்வநாதன் உடைய ஒளிப்பதிவு கதையை விட்டு விலகாமல் காட்சிகளை அழகா பதிவு செஞ்சிருக்கு,ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும் ,பின்னணி இசையும் படத்தோடவே பயணம் செஞ்சிருக்கு.

முளு நீள நகைசுவை படங்கள் எடுக்குறவங்களும் உண்டு, மெசேஜ் சொல்லுற படங்கள் எடுக்குறவங்களும் உண்டு, ஆனா ,சரிவிகிதத்துல தேவையான விஷயங்களை அழகா திரைக்கதையில இணைச்சி தனது முதல் படத்திலேயே வெற்றிக்கொடி நாட்டி இருக்கற இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்துக்கு மனசார பாரட்டுகளை சொல்லாம்.

இந்த கோடை விடுமுறைக்கு சந்தோஷமாக குடும்பத்துடன் சென்று, இந்த டூரிஸ்ட் ஃபேமிலியை பார்த்து ரசிக்கலாம்.

Spread the love