Friday, April 17

துணிவு-விமர்சனம்

அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் ,நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பின் மூன்றாவதாக வெளிவந்துள்ள படம் துணிவு. காசு பணம் துட்டு money என்று மக்கள் தேடும் பணத்தின் தேவை, எப்படி அதே மக்களில் ஒருவனை ஏமாற்றம் செய்து ஏய்ப்பவனாகவும், மற்றொருவனை ஏமாறும் ஏமாளியாகவும் மாற்றும் தன்மை கொண்டுள்ளது என்பதை எடுத்து சொல்லுவதோடு ,கடன் அட்டைகள் ,பரஸ்பரநிதி திட்டங்கள், வங்கிகளில் நடக்கும் மோசடிகள் பற்றி எளிய மக்களும் உணர்ந்து விழிப்புணர்வு பெறும் வகையில் படமாக்கியுள்ள எச்.வினோத் இப்படம் மூலம் சொல்லும் மெசேஜ் வங்கிகள்பற்றிய புரிதலை மக்களிடம் வெளிக்காட்டியுள்ளது.

சென்னையின் முக்கிய பகுதியில் இயங்கி கொண்டிருக்கும் ஒரு வங்கியிலிருக்கும் கோடிகணக்கான பணத்தை கொள்ளையடிக்க கும்பல் திட்டம் தீட்டும் கும்பல் ஒன்று , துப்பாக்கி முனையில் வங்கியையும் ஊழியர்களையும், அங்கிருக்கும் வாடிக்கையாளர்களையும் தங்களது கட்டுபாட்ட்டுக்குள் கொண்டுவர, அங்கு வாடிக்கையாளர் போல வரும் அஜித் அந்த கும்பலையும், முழு வங்கியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்.அவரைப் பிடிக்க கமிஷனர் சமுத்ரக்கனி தலைமையில் காவல்துறை குழு களமிறங்குகிறது. பேச்சுவார்த்தையம் நடத்தப்படுகிறது அதில் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை திட்டத்தில் மாற்றம் செய்கிறார் அஜீத். அதேபோல் காவல் துறையும் இவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதுபோலவே, அவரை பிடிக்கவும் பிடிக்க முயற்சி செய்கிறது .அதே சமயம் அந்த வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை பற்றிய விபரமும் வெளியே தெரியாமல் இருக்க வங்கியினுடைய நிர்வாகமோ பெரும்பாடுபடுகிறது.இறுதியில் அஜீத் தப்பித்தாரா..? இல்லையா..? அவர் எதற்காக இந்தக் கொள்ளையில் ஈடுபட்டார்..? என்பதை எஞ்சிய திரைக்கதையில் வெளிப்படுத்தும் படம்தான் ‘துணிவு’

படத்தின் கதையின் நாயகனாய் ஒட்டு மொத்த கதையிலும் ஸ்கோர் செய்கிறார் அஜித். அவரின் ஆக் ஷன் காட்சிகள்,நடனம் ,வசன உச்சரிப்புகள் எல்லாமுமே அவரது ரசிகர்களையும் தாண்டி அனைத்து ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் உள்ளது

அஜித்தின் கூட்டணியில் அவருக்கு உற்ற துணையாக இருக்கும் மஞ்சு வாரியர் அவரது கேரியரில் புதிய பரிமாணத்தில் சிறப்பாக பரிமளிக்கும் வகையில் நன்கு நடித்துள்ளார் மற்றும் ஜான் கொக்கைன் வில்லத்தன த்திலும், காவல்துறை கதாபாத்திரங்களாய் சமுத்திரகனியும், மகாநிதி சங்கரும் நடித்துள்ளனர். மேலும் தர்ஷன்,பட்டிமன்ற பேச்சாளார் மோகன சுந்தரம்,பழைய ஜோக் தங்கதுரை ,பிரேம் ஆகியோரும் அவர்களுக்கு கொடுக்கபட்ட கதாபாத்திரங்களின் தன்மை உணர்ந்து நன்கு நடித்துள்ளார்கள்,

படத்தின் பாடல்களும், அதன் காட்சிகளும் கவரும் வகையில் உள்ளன .சுப்ரீம் சுந்தரின் அதிரடி ஆக்ஷன் சண்டைக் காட்சிகளும், நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் பின்னணி இசையும் வினோத்தின் முழு நீள ஆக்ஷன் கதைகளத்துக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

வெற்று விளம்பர வார்த்தைகளை நம்பியும் ,சரியான பின் விபரங்களை தெரிந்துகொள்ளாமலும் மியூச்சுவல் பண்ட்களில் பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு இந்தப் படம் விழிப்புணர்வை தந்துள்ளது என்பதால் இந்த படம் பாராட்டுக்குரியது.

காத்திருந்த ரசிகர்களுக்கும், ஆக்ஷன் பட அபிமானிகளுக்கும் ஏற்றதொரு நிறைவான, இந்த படத்தில் மக்களுக்கு தேவையான கருத்தையும் பகிர்ந்து, வினோத் அளித்துள்ள இந்த பொங்கல் திரைவிருந்து நிச்சயம் அனைவரையும் கவரும்.

Spread the love