நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி ,பாரதிராஜா அனன்யா மற்றும் பலர் நடிக்கும் திரு.மாணிக்கம் திரைப்படம் .

கேரள மாநிலத்தில் உள்ள தனது கடையில் லாட்டரி டிக்கெட்டும் விற்பனை செய்யும் மாணிக்கம் (சமுத்திரக்கனி), தன் மனைவி (அனன்யா), மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் ஒரு சராசரி குடும்ப தலைவன். அவரது கடைக்கு வரும் பெரியவரான ஒருவர் (பாரதிராஜா), லாட்டரி சீட்டினை வாங்குகிறார் ஆனால் அந்த சமயத்தில் அவரிடம் பணம் இல்லாததால் மறுநாள் வந்து லாட்டரி டிக்கெட்டுக்கான தொகையினை கொடுத்து, லாட்டரி டிக்கெட்டினை பெற்று கொள்வதாக சொல்லி விட்டு சென்றுவிடுகிறார். ஆனால் அந்த சீட்டினை அவர் வாங்கவே வராத நிலையில், அந்த சீட்டுக்கு பரிசு கிடைத்துவிடுகிறது. அதன்பின் சமுத்திரக்கனி பரிசு விழுந்த லாட்டரி டிக்கெட்டை உரியவரிடம் ஒப்படைத்தாரா ? இல்லையா ?அதன் பின் அது குறித்து மாணிக்கத்தின் நிலைப்பாடு என்ன? என்பதே இப்படத்தின் கதை.
பொறுப்பான குடும்ப தலைவனாக ,நேர்மையில் மனிதரில் மாணிக்கமாக, கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப சிறப்பான நடிப்பை கொடுத்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார் சமுத்திரக்கனி.,அவருக்கு இணையாக, யதார்த்தமான நடிப்பை கொடுத்து, தன் கதாபாத்திரத்துக்கு பலம் சேர்த்துள்ளார் அனன்யா.மேலும் சமீபகாலங்களில் பல படங்களில், தன் முத்திரை நடிப்பை பதித்து வரும் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள், இந்த படத்திலும் வலுவான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து உள்ளார் .இவர்களுடன் தம்பி ராமையா, வடிவுக்கரசி, இளவரசு, சின்னி ஜெயந்த், சாம்ஸ் போன்றவர்களும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நன்கு நடித்துள்ளார்கள்.
இயக்குனர் நந்தா பெரியசாமி திரு.மாணிக்கம் திரைப்படத்தை சராசரி வாழ்வியலிலும் தனித்து ஒளிரும் மனிதர்களின் வாழ்க்கை பதிவை சிறந்த படமாக உருவாக்கம் செய்துள்ளார்.ஒளிப்பதிவாளர் சுகுமார் இந்த படத்தில் குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி, போன்ற எழில் கொஞ்சும் இயற்கையான பல இடங்களை கண்களுக்கு விருந்தாக பதிவு செய்துள்ளார்.இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகரின் இசை, இந்தப் படத்தின் காட்சிகளுக்கு உயிரோட்டம் தரும் வகையில் நிறைவான பின்னணி இசையை கொடுத்துள்ளது.
திரு மாணிக்கம் -திரை மாணிக்கம்.
