Wednesday, April 22

‘தீயவர் குலை நடுங்க’ -திரை விமர்சனம்

‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படத்தில் பிரவீன் ராஜா, ராம் குமார், தங்கதுரை, பேபி அனிகா, பிரியதர்ஷினி,  G.K. ரெட்டி, P.L. தேனப்பன், வேலா ராமமூர்த்தி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார்.

எழுத்தாளர் ஒருவர் முகமூடி மனிதன் ஒருவனால் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார், இந்தக் கொலை வழக்கினை இன்ஸ்பெக்டர்அர்ஜுன் விசாரணை செய்கிறார். மற்றொருபுறம் சிறப்பு குழந்தைகள் பயிலக்கூடிய ஒரு பள்ளியில் ஆசிரியராக ஐஸ்வர்யா ராஜேஷ் பணிபுரிந்து வருகிறார்.இவர் திருமண வலைதளம் ஒன்றின் வாயிலாக பெண் தேடும் பிரவீன் ராஜாவினை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருவரும் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள்.

கொலைக்கான காரணத்தையும் ,கொலையாளியையும் தேடி  தீவிர விசாரணையில் ஈடுபடும் அர்ஜுன், பிரவீண்ராஜாவின் அடுக்குமாடி குடியிருப்பில் தன் விசாரணையை தொடர்கிறார் ,அங்கு நடக்கக்கூடிய சம்பவத்திற்கும், கொலைகளுக்கும் ஒரு தொடர்பு இருப்பதை அவர் யூகித்து,மேலும் தன் விசாரணை வளையத்தை விரிவுபடுத்துகிறார். நடைபெற்ற கொலைகளுக்கும், அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கும் ,ஐஸ்வர்யா ராஜேஷ்-க்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா ? உண்மை குற்றவாளி யார் ?என்னும் முடிச்சுக்களுக்கு விடைகளை அவிழ்க்கிறது ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் மீதி கதை.

தன்னுடைய உடல் மொழியாலும் ,நடிப்பாலும் காவல்துறை அதிகாரி மகுடபதி என்னும் கதாபாத்திரத்திற்கு முற்றிலும் பொருந்திப் போய் அந்த கதாபாத்திரத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளார் ஆக்சன் கிங் அர்ஜுன் .ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் தான் ஏற்று உள்ள கதாபாத்திரத்தின் மூலம் அவரது ரசிகர்களையும் திரை ரசிகர்களையும் அவர் வெகுவாக கவர்ந்துள்ளார் என்று சொல்லலாம் .மீரா என்னும் கதாபாத்திரத்தில் சிறப்பு குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். தன்னுடைய முந்தைய படங்களை போலவே இந்த படத்திலும் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் ,இந்த படத்தின் வாயிலாக புதிய பரிமாணத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். மற்றும் பிரவீன் ராஜா தங்கதுரை, ராம்குமார் ,தேனப்பன் போன்றோரும் வெவ்வேறு கதாபாத்திரங்களில் குறைவில்லாத நடிப்பினை வழங்கி இருக்கிறார்கள் .

அடுக்குமாடி குடியிருப்பு காட்சிகளிலும் ,ஆக்ஷன் காட்சிகளிலும் சிறப்பான கோணங்களை அமைத்து ,கதையோட்டத்திற்கு பெரும் பங்களிப்பினை நன்றாக வழங்கி உள்ளார் ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யூ. விறுவிறுப்பான திரைக்கதைக்கு உறுதுணையாக பணியாற்றியுள்ளார் படத் தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர்.அதேபோல திரைக்கதையின் வேகத்திற்கு ஏற்ப நகரும் காட்சிகளுக்கு பக்கபலமாக அமைந்துள்ளது இசையமைப்பாளர் பரத் ஆசிவகனின் பின்னணி இசை.

சட்டத்தையும், நியாயத்தையும்,தாண்டி தர்மமே இருக்கும் ,அந்த தர்மமே ஜெயிக்கும் என்னும் கருத்தை மையமாகக் கொண்ட கதைக்கு, விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து, ஒரு ஆக்சன் புலனாய்வு த்ரில்லராக அறிமுக இயக்குனர் தினேஷ் லட்சுமணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

மொத்தத்தில் ’தீயவர் குலை நடுங்க’ முழுமையான ஒரு ஆக்சன் இன்வஸ்டிகேட் விஷ்வல் ட்ரீட்.

Spread the love