ஆஸ்கார் தகுதிப் பட்டியலில் இடம் பிடித்த ‘கெவி’ திரைப்படம்: 400 ஆண்டுக்கால வரலாற்றில் முதல்முறையாக வெள்ளகெவி கிராமத்திற்கு ரேஷன் கடை வந்ததை கொண்டாடும் படக்குழு!

சென்னை — 98-வது ஆஸ்கார் விருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் (Oscar Consideration Ballot) நுழைந்து உலக அரங்கில் கவனம் ஈர்த்துள்ள ‘கெவி’ (Gevi) திரைப்படத்தின் படக்குழு, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிஜ உலக வெற்றியைத் தங்களது ‘மலை கீதத்தின்’ (Hill Anthem) மூலம் கொண்டாடியுள்ளது. ஆர்டப் ட்ரையாங்கிள்ஸ் (Artuptriangles Film Kampany) தயாரிப்பில், தமிழ் தயாளன் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தின் மிக முக்கியமான இப்பாடலுக்கு, இசை ஜாம்பவான் ‘தேனிசைத் தென்றல்’ தேவா தனது கணீரென்ற குரலால் உயிர் கொடுத்துள்ளார்.
இப்பாடலின் வரிகளை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். பாடலைத் தொடர்ந்து, தேவா சார் பாடியுள்ள இப்பாடல் ஒரு மாபெரும் சமூக மாற்றத்தைக் கொண்டாடுகிறது. கொடைக்கானல் அருகே உள்ள வெள்ளகெவி கிராமத்தின் 400 ஆண்டுக்கால வரலாற்றில், முதல்முறையாக ஒரு அரசு ரேஷன் கடை கொண்டுவரப்பட்டதன் பின்னணியில் உள்ள எளிய மக்களின் போராட்டமே இப்பாடலின் மையக்கருப் பொருள் ஆகும்.

இதுகுறித்து திரைப்படத்தின் இயக்குநர் தமிழ் தயாளன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள அறிக்கை:
“எங்கள் நெஞ்சம் நன்றியால் நிறைந்திருக்கிறது. வெள்ளகெவி கிராம மக்களுக்கு ஒரு முறையான சாலை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதுதான் எங்களது உண்மையான, நீண்ட காலப் போராட்டமாக இருந்தது. அந்த உள்கட்டமைப்பு வசதிக்காக நாங்கள் இன்னமும் காத்துக் கொண்டிருக்கும் வேளையிலும், இந்த 400 ஆண்டுக்கால வரலாற்றில் முதல்முறையாக எங்கள் கிராமத்திற்கு ஒரு அரசு ரேஷன் கடையைக் கொண்டுவர முடிந்திருக்கிறது என்பதை ஒரு மைல்கல்லாகப் பார்த்து நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் சாலையை எதிர்பார்த்தோம், ஆனால் எங்களால் குறைந்தபட்சம் ஒரு ரேஷன் கடையையாவது எங்கள் மக்களுக்குக் கொண்டுவர முடிந்தது. இது நிச்சயமாகக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு வெற்றி! இந்த எளிய மலைவாழ் மக்களின் வாழ்வாதாரப் போராட்டம் இன்று ஆஸ்கார் தகுதிப் பட்டியல் மூலம் உலக மேடை வரை சென்றிருப்பதும், தேவா சார் மற்றும் வைரமுத்து சார் போன்ற மாபெரும் ஆளுமைகள் எங்கள் மக்களின் வலியையும் வெற்றியையும் தங்களது குரலாலும் வரிகளாலும் எதிரொலித்திருப்பதும், ஒரு படைப்பாளியாக எனக்குக் கிடைத்த பெருமைமிகு தருணம்.”
