தண்டட்டி- சினிமா விமர்சனம்
தேனி மாவட்டம், கிடாரிபட்டியில் ஏற்படும் எந்தவொரு வம்பு தும்பு, வழக்கு, பிரச்னைகளுக்கும் அந்த ஊர்மக்கள் காவல் நிலையம் பக்கம் கூட எட்டிக்கூட பார்க்காது அந்த ஊருக்குள்ளேயே இருக்கும் பஞ்சாயத்திலேயே முறையிட்டு தீர்த்துக்கொள்ளுவதுதான் வழக்கமாக இருந்தது,அந்த ஊர் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒய்வு பெற வேண்டிய வயதில் பணிமாறுதலில் தலைமைக் காவலராக வந்திருப்பவர் சுப்பிரமணி (பசுபதி) .ஒருநாள் அந்த ஊரில் உள்ள தங்கப் பொண்ணு அப்பத்தா (ரோகிணி) காணாமல் போய்விடுகிறார், தங்கப் பொண்ணுவை கண்டுபிடித்துத் தரக் கோரி, அவரது நான்கு மகள்களும், பேரனும் காவல் நிலையத்திற்கு வருகிறார்கள், பசுபதியும் , அந்த அப்பத்தாவை தேடிக் கண்டு பிடிக்கிறார். ஆனால் தங்கப் பொண்ணு இறந்துவிடுகிறார். இறந்துபோன தங்கபொண்ணுவின் காதில் இருக்கும் தண்டட்டி மீது உறவினர்களின் கவனம் செல்கிறது இந்நிலையில் தங்கப் பொண்ணு அப்பத்தா காதில் இருந்த தண்டட்டி காணாமல் போகிறது, அந்த தண்டட்டியை களவாடியது யார் என்று தலைமைக் காவலர் சுப்பிரமணியால் கண்டுபிடிக்க முடிந்ததா ? என்பதை காமெடி கலந்த திருப்பங்களுடன் சொல்கிறது படத்தின் மீதி கதை.

படத்துக்கு படம் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களில் புது மெருகு ஏற்று நடிக்கும் பசுபதி இந்த படத்தில் கதையின் நாயகனாக சுப்ரமணியன் என்னும் தலைமைக் காவலர் கதாபாத்திரத்தில் நடிப்பில் பட்டையை கிளப்பியுள்ளார் தங்கப் பொண்ணு என்னும் அப்பத்தாவாக நடித்துள்ள ரோகிணிக்கு அவரது நடிப்பின் ஆர்வத்துக்கு முழுஉற்சாகம் கொடுக்கும் கதாபாத்திரம் கிடைத்துஇருப்பதால் அதை செவ்வனே சிறப்பாக வெளிகொணர்ந்துள்ளார் . மற்றும் விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் போன்றோரும் தங்களது கதாபாத்திரத்துக்கு பலம் சேர்க்கும் வகையில் நிறைவாக நடித்துள்ளார்கள் மேலும் குறிப்பிட்ட சொல்லும் வகையில் அந்த பகுதியின் மண் வாசனை மிளிரும் மூத்த கூடி பெண்மக்களும் நன்கு நடித்து நம் நெஞ்சங்களில் நிறைகிறார்கள்.

மண்வாசனை மிக்க இந்த படத்துக்கு அதன் இயற்கை தன்மை மாறாத வகையில் இசையமைத்துள்ளார் K.S.சுந்தரமூர்த்தி ,அழகிய வாழ்வியலை கண்களுக்கு விருந்தாக பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி . சிவா நந்தீஸ்வரனின் படத் தொகுப்பும் , வீரமணியின் கலை இயக்கமும் படத்தின் சிறப்பு தன்மைக்கு மேலும் வலு சேர்த்துள்ளன

படத்தின் கதாப்பாத்திரங்களுக்கேற்ற நட்சத்திர தேர்வு, யதார்த்தமான வாழ்வியலை பேசும் கதைக்களம் என சிறந்த அம்சங்களோடு முழு குடும்பமும் ஒன்றாக சேர்ந்து பார்க்கக்கூடிய வகையிலான அருமையான படத்தை இயக்குநர் ராம் சங்கையா தமிழ் சினிமாவுக்கு கொடுத்துள்ளார்.
கதையில் காணாமல் போகும் இந்த தண்டட்டி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துப்போகும்.
