Saturday, October 10

‘தாய்நிலம்’- திரைப்பட விமர்சனம்

போரில் இழந்தது உயிர்களை மட்டுமல்ல… ஒரு தலைமுறையின் குழந்தைப் பருவத்தையும், அவர்களின் எதிர்காலக் கனவுகளையும்தான்! போர்ச்சூழலில் மனைவியை இழந்த ஒரு தந்தை, தனது மகளையாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற போராட்டத்தை உணர்வுபூர்வமாகப் பதிவு செய்கிறது ‘தாய்நிலம்’.

இலங்கையில் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் தனது மனைவியை இழந்து தவிக்கும் அமர் ராமச்சந்திரன், தனது மகள் நேகாவையாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காகத் தமிழ்நாட்டில் வசிக்கும் தனது உறவினர்களிடம் மகளை ஒப்படைக்க முடிவு செய்கிறார்.பல தடைகளைக் கடந்து கடல் வழியாகத் தமிழ்நாட்டிற்கு வரும் அவர், மகளை உறவினர்களிடம் ஒப்படைக்க முயற்சி செய்கிறார். ஆனால், சில காரணங்களால் அந்த முயற்சி கைகூடாமல் போகிறது.இதனால் தந்தையும் மகளும் சாலையோரத்தில் வாழும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் அவர்களுக்கு அடைக்கலம் அளித்தாலும், வாழ்க்கையில் அடுத்தடுத்து பல இடையூறுகள் ஏற்படுகின்றன. அவற்றையெல்லாம் தாண்டி தந்தையும் மகளும் தங்களது வாழ்க்கையை மீட்டெடுத்தார்களா என்பதே படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக நடித்துள்ள அமர் ராமச்சந்திரன், போரால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத் தலைவனின் வலியையும், தனது மகளைக் காப்பாற்றப் போராடும் தந்தையின் தவிப்பையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார். தனது குடும்பத்தின் இழப்புகளைச் சுமந்துகொண்டு பயணிக்கும் கதாபாத்திரத்தின் மூலம், போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வலிகளைப் பிரதிபலிக்கிறார்.

மகள் நேகாவாக நடித்துள்ள சிறுமியும், சூழ்நிலைகளால் தனது குழந்தைப் பருவ மகிழ்ச்சியை இழக்கும் ஒரு குழந்தையின் உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார்.இவர்களுடன் பாலாசிங், தீபக் பிரபாகர், பத்மஜா, நிமிஷா நம்பியார், குரு தட்சணா, தளபதி ஆனந்த், சரவணன் சொக்கம்பட்டி உள்ளிட்டோரும் தங்களது கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளனர்.

அவுசேப்பச்சனின் பின்னணி இசை, கதாபாத்திரங்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குப் பெரிதும் துணை நிற்கிறது. கதையின் வலியையும், தந்தை மகளுக்கு இடையேயான பாசத்தையும் காட்சிகளின் உணர்வுகளோடு இணைக்கும் வகையில் இசை அமைந்துள்ளது.

ஒளிப்பதிவாளர் பிரசாந்த் பிரணவத்தின் நேர்த்தியான கேமரா கோணங்களும், ஒளியமைப்பும் படத்தின் உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கின்றன. கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் சூழலையும், அவர்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் திரையில் உயிரோட்டமாகப் பதிவு செய்துள்ளன.

இயக்குனர் அபிலாஷ் ஜி. தேவன், இலங்கைப் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் இழப்புகளையும் வலிகளையும் ஒரு குடும்பத்தின் வழியாகப் பதிவு செய்துள்ளார்.அவர் போர்ச்சூழலில் குடும்ப உறுப்பினர்களை இழப்பது, வாழ்வாதாரத்தை இழந்து அகதிகளாகப் பயணிப்பது, எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மையுடன் வாழ்வது எனப் பல்வேறு துயரங்களைத் திரைக்கதையின் வழியாக முன்வைக்கிறார்.குறிப்பாக, போர் மற்றும் இன வன்முறைகள் எளிய குடும்பங்களையும்,யாதும் அறியாத குழந்தைகளின் எதிர்காலத்தையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை உணர்வுபூர்வமாகப் பதிவு செய்திருப்பது படத்தின் முக்கிய அம்சமாகும்.

மொத்தத்தில் ,போரின் பாதிப்புகளையும், தந்தை மகளின் பாசத்தையும் மையமாகக் கொண்டு, மனிதநேயத்தையும் வாழ்வின் மீதான நம்பிக்கையையும் பேசும் உணர்வுபூர்வமான படமாக அமைந்துள்ளது ‘தாய்நிலம்’.

Spread the love