Monday, June 24

 ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை 43-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா’

சென்னை, செப்டம்பர் – 11 : திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார் திரு. சிவகுமார். தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு, தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். இந்த ஆண்டுக்கான, ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 43-ம் ஆண்டு நிகழ்வு, சென்னை நுங்கம்பாக்கம் அலையன்ஸ் பிரான்சேஸ் ஆஃப் மெட்ராஸ் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ.2,50,000/- (இரண்டு லட்சம் ஐம்பதாயிரம் மட்டும்) பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும், ஏழைமாணவர்களுக்கான, ‘தாய்தமிழ் பள்ளிக்கு’ ஒரு லட்சம், மூத்த ஓவிய கலைஞர் ராமு அவர்களுக்கு ரூ.50,000/- வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், வரவேற்புரை முடிந்ததும் மாணவர்களுக்குப் பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பரிசு பெற்ற மாணவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டர். நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார், “1979-ஆம் ஆண்டு, மே மாதம் தொடங்கப்பட்ட ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’ தொடர்ந்து, ப்ளஸ் டூ தேர்வில் சிறந்த உயர்ந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. 30 ஆண்டுகள் என் பொறுப்பில் இயங்கிய அறக்கட்டளையை, அதற்குப் பிறகு அகரம் ஃபவுண்டேஷன் பொறுப்பேற்று சிறப்பாக கல்விப் பணி செய்து வருகிறது. சிறிய அளவில் ஏழை மாணவர்களுக்கு செய்த உதவியை, என்னுடைய பிள்ளைகள் இப்போது நல்ல முறையில் செய்து வருகிறார்கள். கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் படிக்க எவ்வளவு கஷ்டபடுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கல்வி ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை எந்தளவு உயர்த்தும் என்பதையும் நான் அனுபவபூர்வமா உணர்ந்திருக்கேன். என்னைப் போல ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து நன்றாகப் படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்வதில் மிகுந்த மனநிறைவு அடைகிறேன். தடைகளைத் தாண்டி பெற்ற முதல் வெற்றி இது. இன்னும் போக வேண்டிய பயணம் வெகுதூரம் உள்ளது. மாணவர்கள் தங்களுடைய கவனம் சிதறாமல், தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.’’என்று கூறினார்.

அகரம் ஃபவுன்டேஷன் பொருளாளர் நடிகர் கார்த்தி பேசியதாவது, அகரம் பவுண்டேஷன் கல்வி பணிகளுக்கான விதை 43 ஆண்டுகளுக்கு முன்னர் விதைக்கப்பட்டது. ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை 43 ஆண்டுகளாக இளம் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி வருவதன் தொடர்ச்சியே அகரம். நல்ல கல்வி அறிவும் நற்சிந்தனைகளும் சமூக பொறுப்புகளும் நிறைந்த இளம் வயதினரை உருவாக்குவதன் மூலம் சமூக குறைபாடுகளை காலப்போக்கில் களைய முடியும். இளம் மனங்களை கட்டமைப்பதில் கல்வி முக்கியப் பங்காற்றுகிறது என்பதை அகரம் பணிகளில் மூலம் அறிந்திருக்கிறோம். இளம் பருவத்தினரில் ஒரு சிலரது வாழ்க்கை கனவுகளை நனவாக்கும் முயற்சியாய் ஆரம்பிக்கப்பட்ட அகரம் விதைத் திட்டம் கடந்த 13 ஆண்டுகளில் 4750 மாணவ மாணவியர்க்கு கல்லூரி கல்வி வாய்ப்பை வழங்கி இருக்கிறது. சரியான சமமான கல்வி வாய்ப்பிற்கான ஒத்த கருத்துடைய மனிதர்கள், அமைப்புகளுடன் இணைந்து அகரம் பணிகளை முன்னெடுத்து வருகிறோம். அகரம் தொடங்கப்பட்ட பொழுதும்; விதைத் திட்டத்தின் பதிமூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இன்றைய பொழுதும் ஒவ்வொரு பணிகளில் உச்சபட்ச வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்கிறோம். கல்வியின் மூலம் நிரந்தர, நீடித்த மாற்றங்கள் உருவாக முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் செயல்பட்டு வருகிறது அகரம்.

2020-ஆம் ஆண்டு தொடங்கி கடந்த மூன்று கல்வி ஆண்டுகளிலும் நிகழ்ந்த அசாதாரண சூழல் விளிம்பு நிலை மக்களின் கல்வி வாய்ப்பை இன்னும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. ஊரடங்கு நடைமுறைகளால் வேலைக்கு சென்று தினக்கூலி பெறமுடியாத குடும்பங்களுக்கு இணைய வழி கல்வி கூடுதல் சுமையை உருவாக்கியது. 40 ஆண்டுகளாக எங்கள் தந்தை தொடர்ந்து நடத்தி வந்த இந்த குடும்ப விழாவை கடத்த இரண்டு ஆண்டுகள் நடத்திட இயலவில்லை. இருப்பினும், களங்களின் யதார்த்தமே அகரத்தின் பணிகளை தீர்மானிக்கிறது. அசாதாரண சூழலில் எளிய குடும்பங்கள் எதிர்கொண்ட சிரமங்களை சிறு அளவிலாவது குறைத்திடும் பணிகளை முன்னெடுத்திருந்தோம்.

1. பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ள 10, 11 மற்றும் 12 வகுப்பு பயின்று வந்த அரசு பள்ளிகளை சேர்ந்த 500 மாணவர்களை அடையாளம் கண்டு ரூ.10,000/- மதிப்புள்ள ‘ஸ்மார்ட் போன்’ டிசம்பர் 2020-இல் வழங்கினோம்.

2. தனியார் கல்வி நிறுவனங்களில் பயின்று வந்த, பொருளாதார இழப்பால் கல்வி கட்டணம் செலுத்த இயலாத மாணவர்களுக்கு, ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.10,000/- தலா ஒருவர் என 4000 குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு கல்வி கட்டணங்களை அவர்கள் பயின்ற கல்வி நிறுவனத்திற்கு செலுத்தினோம்.

3. 2020, 2021, 2022 ஆண்டுகளில் முறையே 556, 658, 560 மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான உயர் கல்வி வாய்ப்பை ஒத்த கருத்துடைய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து அகரம் விதைத் திட்டத்தின் வாயிலாக உருவாக்கினோம்.

ஊரடங்கு காலம், நோய் அச்சம் இயல்பு வாழ்வை புரட்டி போட்டிருந்த சூழலிலும் அகரம் தன்னார்வலர்கள் மேற்கண்ட பணிகளை தொடர்ந்திருந்தனர். அகரம் என்றாலே அதன் அர்பணிப்புமிக்க தன்னார்வலர்களே. அவர்கள் ஒவ்வொருவருக்கும் இத்தருணத்தில் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெருந்தொற்று நோய் காலத்தை அறிவியலின் துணை கொண்டு நாம் கடந்து வந்தாலும், கல்வியில் பாதிப்பு தொடர்ந்திருப்பதை அகரம் பணிகளில் கண்கூடாக பார்த்து வருகிறோம். மாணவர்களிடம் கவன சிதறல்கள் அதிகரித்து இருக்கிறது. மாணவர்களின் கல்வி தொடர்ச்சியில் பாதிப்புகள் இன்னும் தொடர்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் அகரம் விதை திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களில் நூறு மாணவர்களாவது முந்தைய கல்வி ஆண்டில் +2 முடித்தவர்களாக இருப்பார்கள். இந்த ஆண்டு வந்த விண்ணப்பங்களில், கடந்த ஆண்டே +2 முடித்தவர்கள் என்ற எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்திருக்கிறது. இது எங்களை அதீத கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை முடிந்து, கல்வி ஆண்டு தொடங்கி இருந்தாலும் கல்வி வாய்ப்புக்காக காத்திருக்கும் மாணவர்களை இன்றும் சந்தித்து வருகிறோம். அந்த மாணவ, மாணவிகள் தங்களை இந்த உலகிற்கு நிரூபிக்கவும், தங்களுக்கான ஒரு வாய்ப்பிற்காகவும் காத்திருக்கிறார்கள், கூடிய மட்டும் அவர்களின் கல்வி இடைவெளியை நிரப்பும் வழிமுறைகளை முயற்சித்து வருகிறோம்.

கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளாக, பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து இல்லம் தேடிக் கல்வி, பள்ளி மேலாண்மை குழு, நான் முதல்வன் போன்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான மேம்பாட்டு திட்டங்களில் அகரம் பங்கெடுத்து வருகிறது. கூடுதலாக பரிசார்த்த முயற்சியாக ‘அகரம் நமது பள்ளி பெல்லோஷிப் திட்டத்தை’ திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் ஒன்றிய மலை கிராம பள்ளிகளில் தொடங்கி இருக்கிறோம். ஒவ்வொரு கிராமங்களிலும் தொடக்கப்பள்ளியில் இருந்தாலும் ஓராசிரியர் பள்ளிகளாக நடத்தப்பட்டு வரும் நான்கு தொடக்கப் பள்ளிகள் தேவையின் (முன்னுரிமை) அடிப்படையில் தேர்ந்தெடுத்து, அகரம் முன்னாள் மாணவர்கள் தினசரி கற்பித்தல் பணிகளை தொடங்கி இருக்கிறார்கள். பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை உயர்த்தவும், இடை நிற்றலை குறைக்கவும், கிராம மக்களோடு இணைந்து பணியாற்ற தொடங்கி இருக்கிறார்கள். அகரம் முன்னாள் மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியை தருகிறது.

இணை திட்டம் :

எளிய மனிதர்களுக்கான கல்வி கனவை நிறைவேற்றுவதில் அருகமை பொதுப் (அரசுப்) பள்ளிகளுக்கு பெரும் பங்கு இருக்கிறது. சமூகத்தின் பல்வேறு தளங்களில் பணியாற்றும் நம்மில் பெரும்பாலானோர் பொதுப் பள்ளிகளில் படித்தவர்களாக இருக்கக்கூடும். இன்றும் பொதுப் பள்ளிகள் தான் விளிம்பு நிலை மக்கள் கல்வி பெற ஒரே ஆதாரமாக இருக்கிறது. பொதுப் பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து அந்தந்த பள்ளிகளின் மேம்பாட்டிற்காக பணியாற்ற ‘இணை’ அமைப்பு வாயிலாக கடந்த இரண்டு ஆண்டுகளாக செயலாற்றி வருகிறோம். “இணை”-யின் நோக்கம் என்பது ஒரு பள்ளிக்கு சமூகத்தின் மேல் உள்ள பொறுப்பையும், ஒரு சமூகத்திற்கு பள்ளியின் மேல் உள்ள உரிமையும் பொறுப்பையும் உணர்த்துவது ஆகும். பொதுப் பள்ளிகள் மீது அக்கறை கொண்டு இயங்க முன்வந்த பல தன்னார்வலர்களுடனும் இணைந்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலும், மதுரை மாவட்டத்திலும் முன்னோட்ட திட்டமாக (Pilot Project) பெற்ற அனுபவங்களை கொண்டு தமிழகம் முழுவதும் அகரம் விதை மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிக்கு எடுத்து செல்ல இருக்கிறார்கள். இந்த கல்வி ஆண்டில் 380 பள்ளிகளுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்த தயாராகி வருகிறார்கள். இருக்கும் வளங்களில் இருந்து அகரம் பணிகளின் எல்லையை வரையறை செய்கிறோம்.

அனைவரையும் உள்ளடக்கிய கல்வி என்ற சிந்தனையின் பால் ஆழ்ந்த நம்பிக்கை அகரத்திற்கு உண்டு. சமூகப் பணிகளில் மிக முக்கியமானது கல்விப் பணி. மாற்றங்களை வேறு யாரோ கொண்டு வருவார்கள் என்று இருந்துவிடாமல், நம்மால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்கும் போது தான், சமூகத்தில் உண்மையான மாற்றங்கள் உருவாகும். கல்வி எத்தனை முக்கியமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். தமிழ்நாடு அரசு மாநில கல்வி கொள்கை வடிவமைப்பு குழு அமைத்திருக்கிறது. கல்வி கொள்கை வடிவமைப்பு குழு பொதுமக்களிடம் இருந்து, கல்வி தொடர்பான கருத்துக்களை, ஆலோசனைகளை அக்டோபர் மாதம் 15-ஆம் தேதிக்குள் பகிர கேட்டிருக்கிறார்கள். கல்வியின் மீதும் எதிர்கால சமூகத்தின் மீதும் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் stateeducationpolicy@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆலோசனைகளை அனுப்பிட கேட்டு கொள்கிறேன்.

மாணவரது கல்வி வளர்ச்சிக்கெனவும், வாழ்வின் அடுத்த பரிமாணத்தை நோக்கி அவர்களை அழைத்துச் செல்வதற்கும் அகரம் கடினமான, சவாலான பணிகளை முன்னெடுத்து வருகிறது. தன்னார்வலர்கள் பொறுப்பேற்று நடத்தும் அகரம் பணிகளுக்கு உந்து சக்தியாக பொருளாதாரத்தை வழங்கி உடன் நிற்கும் நன்கொடையாளர்கள், விதைத் திட்ட மாணவர்களின் கல்வி வாய்பிற்க்காக தொடர்ந்து ஆதரவு கரம் வழங்கி அரவணைத்துக் கொள்ளும் கல்வி நிறுவனங்கள் ஒவ்வொன்றிருக்கும் நன்றிகள். ஊர் கூடி தேர் இழுப்பது போன்று தான் அகரம் பணிகள். எளிய குடும்பங்களின் கல்வி மேம்பாட்டிற்காக, ஒன்றிணைந்திருப்பது முன்னெப்போதையும் விட இன்று அவசியமானதாக இருக்கிறது. இணைந்திருப்போம். என்று கூறினார்.

விழா நிகழ்வை அகரம் உதவியுடன் அண்ணாமலை பல்கலைக்கழத்தில் இளங்கலை வேளாண் அறிவியல் படித்து வரும் தன்ராஜ், சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்துவரும் ஸ்ரீமதி தொகுத்து வழங்கினர். பேராசிரியர் கல்யாணி, அகரம் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Spread the love