ஒரு உளவாளியின் போராட்ட களத்துக்கு ரசிகர்களை மீண்டும் அழைத்துச் செல்கிறது கார்த்தியின் ‘சர்தார் 2’!
பல வருடங்களாக பிரிந்திருந்த தந்தையும் மகனும்…ஒரே நோக்கத்திற்காக மீண்டும் கைகோர்க்கும் தருணம்…அவர்களை சுற்றி நடக்கும் சர்வதேச சதி…நாட்டையே அழிக்கக்கூடிய ஒரு ரகசியம்…அந்த ரகசியத்தை கைப்பற்ற பலம் வாய்ந்த கூலிப்படை ஒன்று களமிறங்குகிறது.இதையெல்லாம் தாண்டி, தந்தையை தேடும் மகனின் பயணம் எங்கு செல்கிறது?நாட்டை காப்பாற்ற தந்தை – மகன் இணைந்து நடத்தும் அந்த அதிரடி சாகசம்தான் ‘சர்தார் 2’.
தான் கண்டுபிடித்த உளவாளியின் உயிர் பிரியும் முன்பாக சொன்ன ரகசியத்தை தொடர்ந்து செல்லும் கார்த்திக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்த அவரது தந்தை இன்னமும் உயிருடன்தான் உள்ளார் என்பது தெரிய வருகிறது.தந்தையை தேடும் கார்த்தி ,மேலும் சில ரகசியங்களை கண்டுபிடிக்கிறார்.இவற்றை அடைந்துவிடும் முயற்சியில் கூலிப்படையின் தலைவனான எஸ்.ஜே.சூர்யா மிகவும் தீவிரமாக உள்ளார் இதன் மூலம் நாட்டுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதனை கார்த்தி அறிந்து கொள்கிறார் இந்த நிலையில் தன் தந்தையை மீண்டும் சந்திக்கும் கார்த்தி அவருடன் சேர்ந்து நாட்டினை பாதுகாக்கும் பணியில் ஈடுபட ஆயத்தமாகிறார்கள் ,இறுதியில் அவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள் ? வில்லனின் திட்டங்களை எப்படி முறியடித்தார்கள் என்பதே சர்தார் 2 படத்தின் மீதி கதையாகும்.
தந்தை சர்தார் சந்திரபோஸ், மகன் விஜய் பிரகாஷ் என இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் கார்த்தி நடித்துள்ளார். இரண்டு வேடங்களுக்கும் தேவையான உடல் மொழி, தோற்றம் மற்றும் நடிப்பில் வித்தியாசத்தை காட்டி ரசிகர்களை கவர்கிறார்.குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் கார்த்தியின் வேகம் படத்திற்கு பலம் சேர்க்கிறது. அப்பா–மகன் என இரண்டு காலகட்டங்களில் பயணிக்கும் கதாபாத்திரங்களை தனது நடிப்பால் வேறுபடுத்திக் காட்டியிருப்பது சிறப்பு.
சர்வதேச கூலிப்படையின் தலைவனாக வரும் எஸ்.ஜே. சூர்யா, தனது வழக்கமான தனித்துவமான நடிப்பால் வில்லன் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். அவரது திரை ஆளுமையும், கார்த்தியுடன் மோதும் காட்சிகளும் படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக அமைகின்றன.மாளவிகா மோகனன் ஆக்ஷன் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். நாயகியாக நடித்துள்ள ஆஷிகா ரங்கநாத், அழகான தோற்றத்துடன் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பையும் வழங்கியுள்ளார்.மேலும் யோகி பாபு, ரஜிஷா விஜயன், நிழல்கள் ரவி, முனீஸ்காந்த், நாசர், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட நடிகர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை குறைவின்றி செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., தனது 100-வது திரைப்படமான இதில் பின்னணி இசை மூலம் காட்சிகளின் பரபரப்பை அதிகரிக்க முயற்சித்திருக்கிறார்.ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி. வில்லியம்ஸ், ஆக்ஷன் காட்சிகளையும் பிரம்மாண்டமான காட்சிகளையும் சிறப்பாக பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி, கதையின் முக்கிய அம்சங்களை இணைத்து காட்சிகளை கோர்வையாக தொகுத்துள்ளார்.
முதல் பாகத்தில் அணுக்கழிவு மற்றும் குடிநீரை வணிகமாக்குதல் போன்ற சமூகம் சார்ந்த அக்கறையுடன் கதையை சொன்ன இயக்குநர் பி.எஸ். மித்ரன் , முதல் பாகத்தைப் போலவே இந்த முறையும் ஒரு முக்கியமான சமூக மற்றும் உலகளாவிய பிரச்சினையை கதையின் மையமாக வைத்திருக்கிறார் .ஆயுதத்தின் ஆபத்து, உளவு அமைப்புகளின் செயல்பாடு மற்றும் சர்வதேச சதி என கதைக்களத்தை பெரிய அளவில் அவர் உருவாக்கியிருக்கிறார்.ஆனால், இரண்டாம் பாதியில் திரைக்கதையின் வேகத்தை இன்னும் அதிகரித்திருக்கலாம். சில இடங்களில் கதையின் நகர்வு சற்று வேகம் குறைவதாக தோன்றுகிறது. அந்த வேகம் கூடுதலாக இருந்திருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பான முழுமையான திரை அனுபவமாக அமைந்திருக்கும்.
மொத்தத்தில்…ஆக்ஷன் மற்றும் உளவு த்ரில்லர் ரசிகர்களுக்கான ‘சர்தார் 2’ – ஒரு விறுவிறுப்பான திரை வேட்டை!”
