Saturday, April 25

சான்றிதழ் -விமர்சனம்

கருவறை என்றொரு கிராமம் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கிறது ,அங்குள்ள மக்கள் தங்களது கிராமத்துக்கென்று தனிபட்ட சட்டதிட்டங்களை வரையறுத்துக்கொண்டு கண்ணியமாகவும், அனைவரும் ஒன்றுப்பட்டும் வாழ்ந்து வருகிறார்கள். அந்த கிராமத்தின் தனிப்பட்ட சிறப்பியல்களை அறிந்த மத்திய அரசு கருவறை கிராமத்துக்கு சிறந்த கிராமத்திற்கான விருதை அறிவிக்கிறது , ஆனால் அந்த கிராம மக்களோ அந்த உயரிய அரசு விருதினை வாங்க மறுக்கிறார்கள். இதனால், கோபமடையும் அமைச்சர் அந்த கிராமத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அரசு வழங்கும் விருதை வாங்க அந்த கிராம மக்கள் மறுப்பதற்கான பின்னணி காரணம் என்ன? என்பதையும் அந்த கருவறை கிராமத்தை அப்படி மாற்றியதற்கு காரணகர்த்தவான வெள்ளைச்சாமி என்பவரது தியாகத்தையும், திரையில் மீதி கதையாய் விவரிக்கிறது ‘சான்றிதழ்’ படத்தின் கதை.

வெள்ளச்சாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹரி, தான் ஏற்று கொண்ட கதாபாத்திரத்தின் தன்மைக்கு குறைவின்றி நன்கு நடித்துள்ளார், மற்றும் ரோஷன் பஷீர் , ஆஷிகா அசோகன்,ராதரவி,கௌசல்யா ,ரவிமரியா மனோபாலா  , ஆதித்யா கதிர் ஆகியோர் தத்தம் கதாபாத்திரங்களுக்கேற்ற வண்ணம் குறை சொல்ல முடியாத நடிப்பை வழங்கியுள்ளார்கள்.

ஒவ்வொரு ஊரும் இந்த கிராமத்தை போல மாறினால் நன்றாக இருக்கும் என்ற ஒரு அடிப்படை கருத்தை மையமாக கொண்டு இந்த படத்தை சிறந்த படமாக இயக்கியுள்ளார் ஜெயச்சந்திரன்(JVR) . கிராமத்து காட்சிகளை அழகாக பதிவு செய்துள்ள ஒளிப்பதிவாளர் எஸ்.எஸ்.ரவிமாறன் சிவனும் படத்தொகுப்பாளர் ஜெ.எப்.காஸ்ட்ரோவும் இயக்குனருக்கு உறுதுணையாக நின்று படத்துக்கு வலு சேர்த்துள்ளார்கள் , இசையமைப்பாளர் பிஜு ஜேக்கப்பின் இசையில் பாடல்களும், குறிப்பாக என் உறவா நீ கிடைச்சா போதும்…. என்ற அழகிய மெல்லிய காதல் பாடலும் ,மேலும் காட்சிகளை பேசவைக்கும் பின்னணி இசையும் நன்கு அமைக்கப்பட்டுள்ளன.

படத்தின் முதல் பகுதியை போன்றே படத்தின் இரண்டாம் பகுதியும் படமாக உருவாக்கப்பட்டிருந்தால் ரசிகர்களிடம் சிறப்பு சான்றிதழை படம் பெற்று இருக்கும் .

Spread the love