Tuesday, December 3

பிரபலங்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்ட பிரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் படைப்பு ‘அம்மு’

ப்ரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் படைப்பான ‘அம்மு’ திரைப்படம், பிரபலங்களுக்காக ஹைதராபாத்தில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இதன் போது பட குழுவினரும், திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

ப்ரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் படைப்பான ‘அம்மு’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டதிலிருந்து, இப்படத்தை பார்ப்பதற்காக சந்தாதாரர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி பிரைம் வீடியோவில் திரையிட திட்டமிடப்பட்ட நிலையில், படத்தின் தயாரிப்பாளர்கள் ஹைதராபாத்தில் பிரத்யேக திரையிடலுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த பிரிமியர் காட்சிக்கு ‘அம்மு’ படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

ஹைதராபாத்தில் உள்ள கச்சிபௌலியில் அமைந்திருக்கும் ஏ எம் பி சினிமாஸ் எனும் திரையரங்க வளாகத்திற்குள் ப்ரைம் வீடியோ, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமேசான் பிரைம் வீடியோவின் ஒரிஜினல் திரைப்படமான ‘அம்மு’ திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் நடிகை நிஹாரிகா கொனிடேலா, தேவ கட்டா, சரத் மாரார், ராஜ் கந்துகுரி, சுவாதி ஆகியோருடன் பட குழுவினைச் சேர்ந்த நடிகர் நவீன் சந்திரா, இயக்குநரும், தயாரிப்பாளருமான கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவை போல் எழும் ஒரு பெண்ணின் கதையை மையமாகக் கொண்ட ‘அம்மு’ படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவரது போலீஸ் கணவன் ரவி என்ற கதாபாத்திரத்தில் நவீன் சந்திரா நடித்திருக்கிறார்.

இந்த தம்பதியின் வாழ்வில் முதன்முறையாக ரவி, அம்முவை தாக்கிய போது, அவர் எதிர்பாராமல் நடைபெற்ற சம்பவம் என நினைத்தார். அதே தருணத்தில் திருமணம் பற்றிய தன்னுடைய கனவு தவிடு பொடியானதையும் உணர்ந்தார். அதன் பிறகு ரவி அடிப்பதும், தாக்குவதும் தொடர்கதை ஆனதால், இது துஷ்பிரயோகத்தின் முடிவில்லாத சுழற்சி என உணர்ந்து கொண்டார். அவரிடமிருந்து தப்ப வேண்டும் என்பதற்காக, இவளுக்கு நேர் எதிர் குணம் கொண்ட சிம்ஹா என்ற கூட்டாளியுடன் இணைந்து விடுதலை பெறுகிறார்.

சாருகேஷ் சேகர் எழுதி இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருக்கிறார். இதில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, நவீன் சந்திரா, சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர். அம்மு திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அக்டோபர் 19ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கிறது.

Spread the love