குடும்ப பாசம், நகைச்சுவை, சஸ்பென்ஸ் மற்றும் கொலை மர்மம் என அனைத்தையும் ஒரே கதைக்குள் கலந்து இயக்குநர் பாண்டியராஜ் ரசிகர்களுக்கு விருந்தாக வழங்கியிருக்கும் திரைப்படம் தான் ‘பரிமளா அண்ட் கோ’.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஜெயராம் – ஊர்வசி தம்பதியினர், தங்களது இரண்டு மகள்களுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். ஆனால் எப்போதும் இரண்டு மகள்களும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் ,இந்த நிலையில், ஜெயராமின் மகளுக்கு ரவுடியான சாண்டி தொடர்ந்து காதல் தொல்லை கொடுக்கிறார். நாளுக்கு நாள் அவரது அத்துமீறல்கள் அதிகரிக்கின்றன, இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க, “சாண்டியை கொலை செய்து விடலாமா?” என்ற அளவுக்கு குடும்பத்தினர் யோசிக்கின்றனர்.ஆனால் எதிர்பாராத விதமாக சாண்டி மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கை விசாரிக்க வரும் காவல்துறை அதிகாரி மிஷ்கின், ஜெயராம் குடும்பத்தின் மீது சந்தேகம் கொள்கிறார் .விசாரணை தீவிரமடைய, குடும்ப உறுப்பினர்களே ஒருவரை ஒருவர் சந்தேகிக்கத் தொடங்குகின்றனர். இறுதியில் சாண்டியை கொலை செய்தது யார்? அந்த கொலையின் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன? என்பதற்கான பதில்களை நயம்பட சொல்லுகிறது ‘பரிமளா அண்ட் கோ’.படத்தின் மீதிக்கதை .
ஜெயராம் மற்றும் ஊர்வசி இருவரும் தங்களது அனுபவமிக்க நடிப்பால் குடும்பத் தலைவன், தலைவி கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர். இயல்பான நடிப்பின் மூலம் பல காட்சிகளை தங்களது தோள்களில் தாங்கிச் செல்கிறார்கள்.
சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனந்திகா சனில்குமார் இருவரும் கதையின் ஓட்டத்திற்கு தேவையான பங்களிப்பை சரியாக வழங்கியுள்ளனர். குறிப்பாக சாண்டிக்கு படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் அமைந்துள்ளது. அவரும் தனது தனித்துவமான உடல்மொழி மற்றும் நகைச்சுவை கலந்த நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார்.

மிஷ்கின், வழக்கம்போல் தனது வித்தியாசமான பாணியிலான காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் ரசிகர்களை கவர்கிறார். யோகி பாபு, ஜி.கே.எம் தமிழ்குமரன், பூர்ணிமா ரவி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக கையாள்ந்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ், குடும்பக் கதைக்கு ஏற்ற வண்ணமயமான காட்சிகளை அழகாக பதிவு செய்துள்ளார். ஃபாக்ஸன் குழுவின் இசையில் பாடல்கள் கேட்க இனிமையாக இருப்பதோடு, பின்னணி இசையும் சஸ்பென்ஸ் மற்றும் நகைச்சுவை காட்சிகளுக்கு தேவையான பலத்தை வழங்குகிறது.
குடும்ப ரசிகர்களை மையமாகக் கொண்டு திரைப்படங்களை உருவாக்கும் இயக்குநர் பாண்டியராஜ், நகைச்சுவையுடன் சமூக கருத்தை கலந்து, அனுபவம் வாய்ந்த மற்றும் இளம் நடிகர்களை சரியாக பயன்படுத்தி இந்தப்படத்தினை இயக்கியுள்ளார். குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும் வகையில் ஒரு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படைப்பாக இந்த படத்தினை அவர் வழங்கியிருக்கிறார்.
மொத்தத்தில், ‘பரிமளா அண்ட் கோ’ சிரிப்பும், சஸ்பென்ஸும், குடும்ப உணர்வுகளும் கலந்த முழுநீள பேமிலி என்டர்டெய்னராக, ரசிகர்களை திருப்திப்படுத்தும் திரைப்படம்.
