சென்னை, ஏப்ரல் 26, 2022:
இந்த வருடம் பிப்ரவரி மாதம் தனது பயணத்தை தொடங்கிய இந்தியாவின் முதல் என் எஃப் டி (NFT) திரைப்பட சந்தை தளமான ஆரக்கள் மூவிஸ், மிகக் குறுகிய காலத்தில் திரைத்துறையையும் தாண்டி கவனத்தை ஈர்த்து வருகிறது
.
திரைப்பட வர்த்தகம் நடைபெறும் முறையில் பெரும் தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், தொழில்நுட்ப வல்லுநர் செந்தில் நாயகம் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஜி கே திருநாவுக்கரசு ஆகியோர் இணைந்து இந்தியாவின் முதல் என்எஃப்டி திரைப்பட சந்தை தளமான ஆரக்கள் மூவீஸை நிறுவியுள்ளனர்.
என் எஃப் டி (NFT), அதாவாது நான் ஃபங்கபிள் டோக்கன் (non-fungible token) என்பது டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகவும் பாதுகாப்பான முறையில் கலை, இசை, விளையாட்டுப் பொருட்கள் மற்றும் வீடியோக்கள் போன்ற சொத்துகளை ஆன்லைனில் வாங்குவதற்கும், விற்பதற்கும், உரிமம் பெறுவதற்குமான முறையாகும். இதில் உரிமங்கள் பிரிவில் பெரிய அளவில் தடம் பதிக்க ஆரக்கள் மூவிஸ் தயாராகி வருகிறது.
பல்வேறு இந்திய மொழிகளை சேர்ந்த சுமார் 1000 படங்கள் ஆரக்கள் மூவிஸ் உடன் ஏற்கனவே இணைந்துள்ளன. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். ஆரக்கள் மூவீஸ் இந்திய திரைப்படங்களை சர்வதேச அளவில் இதுவரை சென்றடையாத சந்தைகளுக்கு எடுத்துச் செல்வதோடு, உலகளவிலான படங்களை வெளியீடு, டப்பிங் மற்றும் ரீமேக்கிற்காக இந்தியாவுக்கு கொண்டு வரும்.
இதன் மூலம், திரைப்படத் தயாரிப்பாளர்களின் வருவாய் அதிகரிப்பதோடு, இயக்குநர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை இன்னும் பெரியளவில் சென்றடைய முடியும்.
ஆரக்கள் மூவிஸ் ஏற்படுத்தி வரும் நம்பிக்கைக்கு சான்றாக, மத்திய அரசின் ஸ்டார்ட்அப் இந்தியா விதை நிதித் திட்டத்தின் கீழ் ரூ 25 லட்சம் பெற இந்நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசால் உயர்சிறப்பு மையமாக அடையாளம் காணப்பட்டுள்ள வேல் டெக் கல்வி குழுமத்தின் ஒரு அங்கமான வேல் டெக் தொழில்நுட்ப வர்த்தக வழிகாட்டி மையம் (Vel Tech Technology Business Incubator), ஆவடி, கடுமையான தேர்வு முறைக்கு பின்னர் ரூ 25 லட்சம் விதை நிதிக்கு ஆரக்கள் மூவிஸை தேர்ந்தெடுத்துள்ளது.
டாக்டர். எஸ். சாலிவாஹனன், துணைவேந்தர், வேல் டெக்; பேராசிரியர் முனைவர் இ.கண்ணன் – பதிவாளர்; டாக்டர். ராஜாராம் வெங்கடராமன் – உயர்சிறப்பு மையம் : தலைமை நிர்வாக அதிகாரி, வேல் டெக்; டாக்டர். பி. சந்திரகுமார் – டீன்- தொழில் உறவுகள் மற்றும் தொழில்நுட்ப வர்த்தக வழிகாட்டி மையம்; திருமதி ஷீபா ராணி, ஜி.டபுள்யூ- எஸ்ஐஎஸ்எஃப்எஸ் மேலாளர், வேல்டெக் டிபிஐ; ஆகியோர் விதை நிதிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக ஆரக்கள் மூவீஸை பாராட்டி, அதன் முயற்சிகளில் வெற்றிபெற வாழ்த்தினார்கள்.
அதோடு மட்டுமில்லாமல், தஞ்சாவூரை சேர்ந்த புகழ்பெற்ற கல்வி நிறுவனமான சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் அங்கமான சாஸ்த்ரா தொழில்நுட்ப வர்த்தக வழிகாட்டி மையத்தின் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவையும் ஆரக்கள் மூவிஸ் பெற்றுள்ளது.
ஸ்டார்ட்அப் இந்தியா விதை நிதித் திட்டத்தை (எஸ்ஐஎஸ்எஃப்எஸ்) ரூ. 945 கோடி செலவில் உருவாக்கியுள்ள தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி), ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் கருத்துருவாக்கம், தயாரிப்பு சோதனைகள், சந்தை நுழைவு மற்றும் வணிகமயமாக்கல் உள்ளிட்டவற்றுக்கான நிதி உதவியை வழங்குகிறது. நிதி, உள்கட்டமைப்பு, வழிகாட்டுதல், தொழில் இணைப்புகள், வளங்கள் மற்றும் பயிற்சி உள்ளிட்ட பரந்த அளவிலான ஆதரவை ஸ்டார்ட்-அப்களுக்கு இது வழங்குகிறது.
முதலீட்டாளர்களிடமிருந்து நிதியை திரட்ட அல்லது வணிக வங்கிகள், நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறக்கூடிய அளவிற்கு ஸ்டார்ட்அப்கள் முன்னேறுவதையும் தங்கள் இலக்கில் வெற்றபெற வழிகாட்டுவதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. Web3, NFT, Blockchain Technology, Metaverse மற்றும் AI போன்ற தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து வருவதால், இந்தத் துறைகளில் இந்தியாவை உலக அளவில் முன்னணியில் நிறுத்துவதற்கு ஸ்டார்ட்அப்களை ஆதரிப்பது அவசியம். Metaverse துறையிலும் ஆரக்கள் மூவிஸ் விரைவில் நுழைய உள்ளது குறிப்பிடத்தக்கது.