இயக்குநர் எஸ். ஏ சந்திரசேகரன் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘மோகினிப்பட்டி’ பேண்டஸி திரில்லர் வெப் மூவி!

தன் உதவி இயக்குநர் இயக்கும் ‘மோகினிப் பட்டி’ என்கிற படத்தில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரன் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். இது ஒரு பேண்டஸி திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது. இப்படத்தை ஜெயவீரன் காமராஜ் இயக்கி உள்ளார்.

பண்ருட்டிக்காரரான இயக்குநர் ஜெயவீரன் காமராஜ், அடிப்படையில் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். ஒரு ஃபிலிம் அகாடமியில் சினிமா சார்ந்த படிப்பை முடித்துவிட்டு இயக்குநர் எஸ் .ஏ. சந்திரசேகரனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் .இவர் மனமெங்கும் அவள் ஞாபகம், அறியாமை ,நீரின்றி அமையாது உலகு போன்ற சுமார் பத்து குறும்படங்கள், இசை ஆல்பங்கள் என்று இயக்கியவர்.

படம் பற்றி இயக்குநர் ஜெய வீரன் காமராஜ் பேசும்போது,
“மோகினிப்பட்டி என்பது கற்பனையாக உருவாக்கப்பட்ட ஒரு கிராமம். அந்த ஊரில் ஒரு சாபம் உள்ளது. அதை அந்த ஊர்க்காரர்கள் மட்டுமே அறிவார்கள்.அதை முன்னிட்டு அவர்களிடம் ஒரு ரகசியக் கட்டுப்பாடு உள்ளது. அதன்படி அங்கு யாரும் காதலித்து திருமணம் செய்ய முடியாது. இப்படிப்பட்ட சூழலில் அங்கு நாயகனும் நாயகியும் காதலிக்கிறார்கள். ஊர்க் கட்டுப்பாடு குறுக்கே நிற்கிறது. அவர்கள் அந்தச் சாபத்தை எப்படி எதிர்கொண்டார்கள்? அந்த ஊர்ச் சம்பிரதாயத்தைச் சமாளித்தார்களா? வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா என்பது தான் படத்தின் கதை ”
என்று படத்தைப் பற்றி இயக்குநர் ஜெயவீரன் கூறுகிறார்.
