Friday, December 6

சிபி சத்யராஜ் நடிக்கும் மாயோன்”யு’ சான்றிதழ் பெற்றுள்ளது

தமிழ் திரை உலகில் வலுவான கதைகளை மையப்படுத்தி சிறந்த திரைப்படங்களை உருவாக்கி வெளியிடுவதில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் அவர்களின் டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் முன்னணி நிறுவனமாக வலம் வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் அடுத்ததாக ‘மாயோன்’ எனும் புதிய திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராக இருக்கிறார்கள்.

‘மாயோன்’ படத்தின் டீசர் வெளியாகி, அதில் இடம்பெற்ற புதிரான புராண இதிகாச கதையால், ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதைத்தொடர்ந்து இரண்டு மயக்கும் மெட்டுகளுடனான பாடல்கள் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. தயாரிப்பு நிறுவனத்தின் முந்தைய தயாரிப்பான சைக்கோ திரைப்படம் ஏ சான்றிதழ் பெற்றிருந்தது, அதிலிருந்து மாறுபட்டு, ‘மாயோன்’ படம் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது. இப்படம் சென்சாரில் எந்த ஒரு காட்சியும் வெட்டப்படாமல் முழுப்படமும் அப்படியே தணிக்கை பெற்று, பாரட்டுக்களை குவித்துள்ளது. இதற்காக மத்திய தணிக்கை வாரியத்திற்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

மேலும் பார்வைத்திறன் சவால் உள்ள ரசிகர்கள் ரசிக்கும் வகையில் – அவர்களுக்கு சௌகரியமான முறையில் திரைப்படத்தை அவர்கள் உணரும் அனுபவத்தை வழங்க, ஆடியோ விளக்கத்துடன் இந்திய அளவில் முதல் முறையாக ‘மாயோன்’ திரைப்படத்தின் டீஸர் வெளியானது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக பெரிய திரையில் முழு அனுபவத்தை பெறுவதற்காக தற்போது படக்குழு ‘ஆடியோ விளக்க’ பாணியிலான திரைப்பட பதிப்பில் ஈடுபட்டுள்ளது.

நடிகர் சிபி சத்யராஜ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் ஒரு புராண திரில்லர் திரைப்படம்’ மாயோன்’. இதன் கதை ஒரு பழமையான கோவிலின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் ‘மாயோன்’ படத்தின் திரைக்கதையை எழுத, மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா தெய்வீக பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார்.

மாயோனுக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் தேதி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love