Sunday, September 13

’மண்டாடி’- திரைப்பட விமர்சனம்

“கடல் என்றாலே அலைகள்… போட்டி என்றாலே பரபரப்பு! அந்த இரண்டையும் ஒன்றாகக் கலந்து, நட்பு, பழிவாங்கல், உணர்வு மற்றும் அதிரடியை பாய்மரப் படகின் வேகத்தில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சிதான் ‘மண்டாடி’!”

ராமநாதபுரத்தின் கடற்கரையில் அலைகள் மட்டும் மோதுவதில்லை… மனிதர்களின் ஆசை, கோபம், பகை மற்றும் வெற்றிக்கான வெறியும் மோதுகிறது. அந்த மோதலின் மையமாக ஒரு பாய்மரப் படகு போட்டியை வைத்து விறுவிறுப்பான கதையை நகர்த்துகிறது ‘மண்டாடி’.அந்த ஊரில் நடைபெறும் பாய்மரப் படகு போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது மிதுனின் ஆசை. ஆனால், அந்த வாய்ப்பை சுகாஸ் மறுக்கிறார். இந்த மறுப்பு மிதுனை கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்ல, சுகாசின் மகனை கொல்லும் அளவுக்கு அவர் துணிகிறார். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைய, அதன்பின் மிதுன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு தப்பி ஓடுகிறார்.

சுகாஸும் அவரது ஆட்களும் மிதுனை கொல்ல துரத்தும் நிலையில், பாதுகாப்பு தேடி சென்னை வரும் மிதுன், சூரியிடம் தஞ்சம் அடைகிறார். மிதுனுக்கு அடைக்கலம் கொடுக்கும் சூரி, அவரை மட்டும் காப்பாற்றுவதோடு நின்றுவிடவில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்பு தான் விட்டு வந்த அந்த ஊருக்கே மீண்டும் திரும்புகிறார்.

கடந்த காலத்தில் அந்த ஊரை விட்டு வெளியேறிய சூரி, மீண்டும் அங்கு வருவதற்கு பின்னால் என்ன காரணம்? ஊரின் இளைஞர்களை ஒன்றிணைத்து புதிய அணியை உருவாக்கி, அவர்களை பாய்மரப் படகு போட்டிக்குத் தயார்படுத்துவதன் நோக்கம் என்ன?

சூரியின் வருகையும் அவரது முயற்சியும் சுகாசுக்கு புதிய சவாலாக மாறுகிறது. சூரியின் அணியை எப்படியாவது தடுக்க சுகாஸ் தீட்டும் திட்டங்கள், அதற்கு சூரி கொடுக்கும் பதில்கள் என கதைக்களம் பரபரப்பாக நகர்கிறது.இறுதியில் பாய்மரப் படகு போட்டியில் வெற்றிக் கரையை அடைவது யார்? சூரியின் கடந்த காலத்தில் மறைந்திருக்கும் ரகசியம் என்ன? இருபது ஆண்டுகளுக்கு முன்பு அவர் அந்த ஊரை விட்டு வெளியேறியதற்கான உண்மையான காரணம் என்ன? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை விறுவிறுப்பான திரைக்கதையுடன் சொல்கிறது ‘மண்டாடி’ யின் மீதி கதை.

கதையின் நாயகனாக முத்து காளி என்னும் கதாபாத்திரத்தில் சூரி சிறப்பான நடிப்பினை வழங்கியிருக்கிறார் தொடர்ந்து வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்து கொண்டிருக்கும் சூரிக்கு இந்த திரைப்படம் மேலும் ஒரு வெற்றியை தருவதோடு ,ஒரு மாஸ் நடிகருக்கான அந்தஸ்தையும் பெற்று தரத்தான் போகிறது. இந்தப் படத்தில் அவர் ஏற்றுள்ள கதாபாத்திரத்திற்காக அவர் மேற்கொண்டுள்ள உடல் மெனக்கிடல், உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்த விதம் மிகவும் பாராட்டக்கூடியது .மற்றும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து இருக்கக்கூடிய சுஹாஸ் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் சிறப்பான நடிப்பை படம் முழுவதும் பதிவு செய்திருக்கிறார் .நாயகியாக நடித்திருக்க கூடிய மகிமா நம்பியார் தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார். மேலும் சத்யராஜ் தன்னுடைய அனுபவ ந டிப்பினை தன்னுடைய கதாபாத்திரத்தில் பதித்திருக்கிறார் .மற்றும் மிதுன் ஜெய்சங்கர், பால சரவணன் ரவீந்திர விஜய் ,ஸ்டண்ட் சிவா, கிரிஷ் ஹாசன் போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் சிறப்பான முறையில் தங்களது நடிப்பினை படம் முழுவதும் பதிவு செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரின் இசை வடிவத்தில் பாடல்கள் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மிகவும் ரசிக்கும்படி உள்ளன, அதேபோல் பின்னணி இசை திரையில் ஒளிரும் காட்சிகளுக்கு இணக்கமான பின்புலத்தினை தரும் வகையில் சிறப்புற அமைக்கப்பட்டுள்ளது .படத்தில் இடம் பெறும் படகு போட்டி காட்சிகளை நேர்த்தியான கோணங்கள் மூலம் நிறைவான முறையில் அழகுற படமாக்கி உள்ளார் ஒளிப்பதிவாளர் எஸ். ஆர். கதிர். காட்சிகளின் வேகத்துக்கும் விறுவிறுப்புக்கும் குறிப்பாக படகு போட்டி நடக்கும் காட்சிகளுக்கு பக்க பலமாக அமைந்துள்ளது படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவின் பங்களிப்பு. படத்தில் மேலும் குறிப்பிட்டுச் சொல்லத் தக்க வகையில் பாராட்டினை பெறுபவர்கள் சண்டை பயிற்சியாளர்கள் பீட்டர்ஹெயின் ,திலீப் சுப்பராயன், மகேஷ் மேத்யூ என்னும் அந்த மூன்று சண்டை பயிற்சியாளர்களின் அளப்பரிய ஆற்றல் திரையில் சண்டை காட்சிகளுக்கு மிகப்பெரிய பங்களிப்பினை வழங்கி இருக்கிறது. கடலும், கடல் சார்ந்த கதைக்களமும் கொண்ட மீனவர்களின் வாழ்க்கைச் சூழலை அடிப்படையாகக் கொண்டு தமிழ் சினிமாவில் ஏராளமான படங்கள் இதற்கு முன்பு வந்துள்ளன, அத்தகைய படங்களில் இருந்து சற்று மாறுபட்ட கடல் சார்ந்த வாழ்வியலை ,இந்த ’மண்டாடி’ சிறப்பாக திரைமொழியில் பதிவு செய்துள்ளதற்கு இயக்குனர் மதிமாறன் புகழேந்தியின் பட உருவாக்கம் தான் காரணமாக அமைந்துள்ளது.

“கடலின் அலை போல ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும், திரையில் வரும் பாய்மரப் படகு போட்டியின் வேகம் ,வித்தியாசமான கடல் சார்ந்த வாழ்வியல், மாஸ் காட்டும் சூரி, விறுவிறுப்பான போட்டி காட்சிகள் என உற்சாகமான திரையனுபவத்தைத் தேடும் ரசிகர்களுக்கு ‘மண்டாடி’ நிச்சயம் ஒரு சுவாரஸ்யமான கடல் பயணம்!”

Spread the love