சமத்துவ சமூக நீதி மக்கள் கழகத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் மாமன்னன் (வடிவேலு). அவர் சேலம் மாவட்டம் காசிபுரம் தனி தொகுதியின் ஆளும் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினராக உள்ளார், அவரது மகன் அதிவீரன் (உதயநிதி), அவர் அடிமுறை தற்காப்பு கலையின் ஆசானும், பன்றி வளர்ப்புத் தொழில் செய்பவருமாக உள்ளார், பதினைந்து ஆண்டுகளாக அதிவீரன் (உதயநிதி) தன் தந்தையுடன் மாமன்னன் (வடிவேலு)பேசாமல் இருக்கிறார். அதே கட்சியின் மாவட்டச் செயலாளராக ரத்னவேல் என்பவர் (பகத் பாசில்)உள்ளார், லீலா (கீர்த்தி சுரேஷ்) .அதிவீரன் இடத்தில் நடத்தும் இலவச பயிற்சி மையத்துக்கு சுந்தரம் கல்வி நிறுவனத்தை நடத்தி வரும் சுனில் (பகத் ஃபாசில் அண்ணன்) மூலமாக பிரச்சினை ஏற்படுகிறது , அந்த இடத்தை ஆட்களை வைத்து சுனில் உடைத்து நொறுக்குகிறார். இதன் பின் ஏற்படும் அரசியல் மாற்றங்களையும் , அரசியலில் கோலேச்சி நிற்கும் ஆதிக்க சமூகத்தினர் எப்படி எளிய சமூக மக்களுடைய உரிமைகளை அடக்கி ஆள முயல்கிறார்கள் என்பதையும் எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது ‘மாமன்னன்’ படத்தின் எஞ்சிய திரைக்கதை.

அதிவீரன் என்னும் கதாபாத்திரத்தில் புதிய பரிமாணத்தில் தனது தந்தையின் உரிமைக்காக உரிமைக்குரல் எழுப்பும் இளவலாக, சிறப்பான நடிப்பை உதயநிதி வழங்கியுள்ளார் இந்த படமும் , இவரது கதாப்பாத்திரமும் உதயநிதியின் திரைப்பயணத்தில் ஆழமாய் பதிந்து என்றும் நிலைத்து நிற்கும்.

மாமன்னன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வைகைப்புயல் வடிவேலு அவரது முந்தைய படங்களில் நாம் பார்த்திராத புதிய வடிவேலுவாய், தனது பண்பட்ட நடிப்பை வாரி வழங்கியுள்ளார் இவருக்கும் இந்த படம் பேர் செல்லும் படமாக அமைந்து இருக்கும் , அரசியல்வாதி கதாபாத்திரத்தில் எதிர்மறை நாயகனாய் பகத் பாசில் நிறைவாக நடித்துள்ளார்.
லீலா என்னும் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், மற்றும் அழகம் பெருமாள், ரவீனா ரவி , லால்,விஜயகுமார், கீதா கைலாசம் போன்றோரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப இயல்பாக நடித்துள்ளார்கள்
வாழ்வியல் சூழலை வளமாக பதிவு செய்தும், அதனை செவ்வனே தொகுத்தும் உள்ள தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும், செல்வா ஆர்.கே-வின் படத்தொகுப்பும் ,இயக்குநரின் எண்ண ஓட்டத்துக்கேற்றவகையில் உடன் பயணித்துப்போகிறது , படவெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்த ‘ராசா கண்ணு’, ‘நெஞ்சமே நெஞ்சமே’ போன்ற பாடல்களையும், சிறப்பான பின்னணியிசையினையும் தந்துள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ‘மாமன்னனை ‘ இசைவடியிலும் சிறப்பாக்கியுள்ளார்
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் ஓங்கி ஒலித்து ,அவர்களின் உணர்வு போராட்டங்களை நிகழ்கால அரசியல் களத்துடன் இணைத்து கதையாக்கி, கதைக்கேற்ற காட்சி பின்புலங்கள், கதாபாத்திரங்களுக்கேற்ற பொருத்தமா,ன நட்சத்திர தேர்வு .நேர்த்தியான தொழில்நுட்ப கூட்டணி என்ற அம்சங்களை உள்ளடக்கி அதனை செவ்வனே திரைமொழியில் தந்துள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ் .
மாமன்னன்- மறுக்கப்பட்ட சமூக நீதிக்காக குரல் எழுப்பும் மக்களின் மைந்தன்.
