Saturday, February 8

 லயோலா கல்லூரி கலை நிகழ்ச்சி

லயோலா கல்லூரி கலை நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா !

லயோலா கல்லூரியில் நடந்த கலை விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜீவா கலந்து கொண்டு பேசும்போது,

நீண்ட நாட்களுக்குப் பிறகு இவ்வளவு கூட்டத்தை பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த சில வருடங்களாக திரையரங்குகளில் கூட இவ்வளவு கூட்டம் இல்லை.
மேடையில் இருந்த அனைத்து பிரமுகர்களுக்கும் நன்றி. லயோலா கல்லூரியில் இருப்பது எப்போதுமே ஒரு மகிழ்ச்சியான தருணமே. பல ஆண்டுகளுக்கு முன் நான் இங்கு வந்துள்ளேன்.

எனது முதல் பட நேரத்தில் இங்கு வந்தேன். அப்போது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. காக்க காக்க படம் வெளியான சமயம் அது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ஆகிவிட்டன.

உங்களிடம் இவ்வளவு அழகான கட்டமைப்பு உள்ளது. நான் இங்கு உள்ள கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடியுள்ளேன். பல ஜாம்பவான்களையும் சாதனையாளர்களையும் உருவாக்கிய கல்லூரி இது. சூர்யா சார், விஜய் சார், விஷால், உதயநிதி போன்று பலரை உருவாக்கிய இந்த கல்லூரியில் என்னை ஒரு விருந்தினராக அழைத்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

நாசர் சாரை பார்த்தவுடன் நான் பேச வந்ததை மறந்துவிட்டேன். அவருடன் இணைந்து பணியாற்றியதற்கு பெருமைப் படுகிறேன். அவர் தான் எனக்கு வழிகாட்டி. என்னுடைய முதல் படத்திலேயே எனக்கு மாமனாராக நடித்திருந்தார். அப்போது நான் ஒரு தயாரிப்பாளரின் மகனாக தான் அறிமுகமானேன். அவர் என்னைப் பார்த்து “தயாரிப்பாளர் மகன் என்றால் நடிக்க வந்து விடுவீயா? என்றும், ஏன் நடிக்க வந்தீர்கள்” என்றும் கேட்டார். அந்த எளிமையான கேள்விக்கு என்னிடம் இதுநாள் வரை பதில் இல்லை.

நீங்கள் எந்தத் துறைக்குச் சென்றாலும் அனைவருக்கும் ஒரு வழிகாட்டி மற்றும் ஒரு குரு தேவை. அந்த வகையில் எனக்கு நிறைய குரு கிடைத்தார்கள். அந்த வகையில் என் முதல் குரு என்று சொன்னால் அது நாசர் சார் தான். இன்று இந்த மேடையை அவருடனும் பகிர்ந்து கொண்டிருப்பதற்கு நான் பெருமைப் படுகிறேன். நீங்கள் எனக்கு கற்பித்த அனைத்து சிறந்த பாடங்களுக்கும் நன்றி சார். இந்த இடத்தில் உங்களுக்கு நன்றி சொல்வது ஒரு சிறந்த வாய்ப்பாக எண்ணுகிறேன்.

நான் பொறியியல் கல்லூரி மாணவனாக பல படங்கள் நடித்திருக்கிறேன். நீதானே என் பொன் வசந்தம், நண்பன், போன்ற படங்கள். ” ஹொவ் டஸ் எ இண்டக்க்ஷன் மோட்டர் ஸ்டார்ட்ஸ்” காட்சி எல்லாம் இங்கு தான் நடித்தேன்.

நான் என்ஜினியர், டாக்டராக நடிப்பது அதிர்ஷ்டம் என்று சொல்வேன். ஆனால், நான்கு வருட அனுபவத்தைப் பெற்ற நீங்கள் என்னை விட அதிர்ஷ்டசாலிகள். நீங்கள் செய்ய வேண்டிய பணிகள், தேர்வுகள் இன்னும் பல இருக்கின்றது. அதனைத் தவிர நீங்கள் உருவாக்கும் நட்பு மற்றும் நினைவுகள் எப்போதும் மங்காது.

உத்வேகத்துடன் இருங்கள். பலரை ஊக்குவியுங்கள், நன்றாக இருங்கள், என்னிடம் பல மேற்கோள்கள் உள்ளன. அவற்றில் எனக்கு பிடித்த இரண்டினை படிக்கிறேன்.
” THERE IS NO COMPETITION, THAT IS VIEW AS A VIEW” இது தான் நான் பின்பற்றும் மந்திரம்.

மற்றொன்று ” USE YOUR ENERGY TO CREATE NOT TO DESTROY” . இறுதியாக ” STOP TRYING TO BE LIKED BY EVERYBODY, EVEN YOU DONT LIKE EVERYBODY “.

உங்களிடம் பணம் இருக்கிறது, உங்களிடம் நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால், நான் நினைக்கக் கூடிய மிகவும் மதிப்புமிக்க விஷயம் ஆற்றல். சிறந்த ஆற்றல் உள்ளவர் எதையும் சாதிக்க முடியும். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. கிரிக்கட்டர் சச்சின் சார் சொல்வது போல்,
என்னுடைய சிறந்த படங்கள் இன்னும் வரவிருக்கிறது. முந்தைய படங்களை விட வரவிருக்கும் படங்களில் உங்களை மேலும் மகிழ்விக்கவுள்ளேன். அதற்கும் உங்களின் ஆதரவு தேவை. நன்றி என்றார்.

லயோலா கல்லூரி கலை நிகழ்ச்சி விழாவில் நடிகர் சங்க தலைவர் நடிகர் நாசர் பேச்சு!!

இந்த விழாவிற்கு காரணமாக இருக்கின்ற அனைவருக்கும் நன்றி. ஏனென்றால், 2 வருடங்களாக வீட்டிற்குள்ளேயே இருந்தோம்.

இன்று இவ்வளவு பெரிய விழா குதூகலத்துடனும், உற்சாகத்துடனும் நடக்கிறது.

லயோலா கல்லூரிக்கும் எனக்கும் ஆழமான தொடர்பு இருக்கிறது. பள்ளி படிப்பு முடிஞ்சதும் எல்லோருக்கும் லயோலா கல்லூரியில் சேர வேண்டும் என்று தான் தோன்றும். ஆனால், அதற்கு அதிக மதிப்பெண் எடுக்க வேண்டுமே!
ஆகையால், அந்த கொடுப்பினை எனக்கில்லை.

மேலும், விஸ்காம் என்கிற பட்டபடிப்பு தமிழ் நாட்டில் மூளை முடுக்கிலும் இன்று இருக்கிறது.
ஆனால், அது முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது லயோலா கல்லூரியில் தான்.

நடிகர் சங்கத்தின் பொதுக்குழு இங்கு தான் நடைபெற்றது. எனக்கு பேச வராது. ஆனால், பேச ஆரம்பித்தால் பேசிக்கொண்டே இருப்பேன். ஆகையால், ஒரு பத்து கேள்விகள் கேளுங்கள். அதற்கு பதில் சொல்லிவிட்டு போய் விடுகிறேன். நான் பேசுவதைக் கேட்பது உங்களுக்கு பிடிக்கும். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக இந்த விழாவிற்காக ஆடி பாடி களைத்திருப்பீர்கள். ஆகையால், கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லி விட்டு செல்கிறேன்.

கேள்வி : 37 வருடமாக திரைத்துறையில் உள்ளீர்கள் அது எப்படி சாத்தியமாக உள்ளது?

எந்தத் துறையாக இருந்தாலும் சரி நாம் நினைத்தால் தான் ஓய்வு என்பது. இங்கிருக்கும் ஆசிரியர்களும் கிட்டதட்ட 40 ஆண்டுகள் கழித்து தான் ஓய்வு பெறுவார்கள். நான் இந்த துறையை ஒரு வேலையாக நினைத்து தான் வந்தேன்.
இன்றும் நடிப்பை ஒரு வேலையாக செய்து கொண்டிருக்கிறேன். மற்ற வேலைகளை விட எனக்கு சம்பளம் அதிகம் என்பதால் எனது முழு முயற்சியையும் வெளிப்படுத்துகிறேன்.

நிறைய குழந்தைகள் இந்த சினிமாத் துறைக்கு வருவதற்கு ஆசைப்படுகிறார்கள். இன்றைய காலத்தில் சினிமாத் துறை என்பது மற்ற துறைகளை விட மிகவும் ஈர்ப்பு மிக்க ஒரு துறையாக உள்ளது. நான் சினிமாவிற்கு வரும் பொழுது 1984ல் சினிமாவில் ஆவணப்படம், குறும்படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கு கிடையவே கிடையாது.

ஏனென்றால், அது ஒரு பெரிய செயல் முறை. பொருட்செலவு மிகவும் கடினம். ஒரு புகைப்படம் எடுத்தால் கூட அதை நெகடிவில் இருந்து ப்ரிண்ட் எடுத்து மாற்ற வேண்டும் என்பது போல் பல சவால்கள் இருந்தது. ஆனால், இப்போது அப்படி இல்லை. எந்த ஒரு குறைந்த விலை கேமராவில் கூட ஒரு படத்தை எடுக்க முடியும்.

இதில் இரண்டு விஷயங்கள் உள்ளது, ஒன்று நீங்கள் இதை வேலையாக நினைத்து சினிமாத் துறையில் பயணிக்கலாம். அல்லது, இதை ஆசையாக நினைத்தால் நீங்கள் இப்போது படிக்கும் படிப்பிற்கு ஏற்றவாறு ஒரு பணியில் அமர்ந்துவிட்டு நீங்கள் உங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்ளலாம். குறும்படம் எடுக்கலாம், ஆவணப்படம் எடுக்கலாம், அப்போதும் சாதிக்கலாம்.

இல்லையெனில், நீங்கள் எல்லாத்தையும் விட்டு விட்டு சினிமாவிற்கு வந்தீர்களேயானால் நான் பரந்த கைகளுடனும் பெரிய இதயத்துடனும் வரவேற்கிறேன். ஏனென்றால், இந்த துறைக்கு நிறைய திறமையாளர்கள் தேவை, புதிய யோசனைகள் தேவை.

சினிமாத் துறைக்கு வர ஆசைப்பட்டால் அதற்குண்டான படிப்பை படித்து விட்டு வாருங்கள். படித்தவர்கள் சினிமாவிற்கு வருவது வேறு. எனக்கு தலைவலி வந்துவிட்டது என்றால் நான் ஒரு வக்கீலிடம் சென்று மாத்திரை கொடுங்கள் என்று கேட்க முடியாது. மருத்துவரிடம் தான் சென்று பார்க்க வேண்டும். அதனால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறைக்கு ஏற்றவாறு படியுங்கள்.

கேள்வி : இதுவரை நீங்கள் எங்கும் குறிப்பிடாத கேள்வி!
தங்களின் பின்புலமாக உங்கள் மனைவி இருப்பதை பற்றி !!?

என் மனைவி தான் என் அலுவலகத்தை பார்த்துக் கொள்கிறார். அவர் சைக்காலஜி படித்தவர். இருப்பினும், எல்லாத்தையும் எனக்காக விட்டுவிட்டு என் அலுவலகத்தை பார்த்துக் கொள்கிறார். என் குழந்தைகளையும் பார்த்துக் கொள்கிறார். நான் சம்பாதித்ததை கொண்டு வருவதை விட, சம்பாதித்தாலும் அந்த பணத்தை தயாரிப்பதில் போட்டுவிட்டு பிரச்சனையைத் தான் கொண்டு வருவேன். அது அனைத்தையும் என் மனைவி கமிலா தான் தீர்த்து வைப்பார்.

ஆண்கள் அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். ஏனென்றால், ஒரு பொறுப்பை ஒரு பெண்ணிடம் கொடுத்தால் ஆணை விட மிக சிறப்பாக செய்வார்கள் என்று நான் கண்கூடாக பார்த்த அனுபவம். இங்கு இவ்வளவு பெண் குழந்தைகளை பார்க்கும் போது நம் நாடு முன்னேறிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. பெண்களுக்கு எவ்வித கவனச்சிதறலும் இருக்காது. அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை முடிப்பதற்காக தங்களின் உயிரையும் கொடுப்பார்கள்.

நான் ஏன் பெண்களை பற்றி பேசுகிறேன் என்றால், நான் சென்ற வாரம் தான் சண்டிகர் மாநிலத்திலிருந்து சென்னை வந்தேன். நான் வந்த விமானத்தை ஓட்டியது ஒரு பெண். அதே போல், வடபழனியை தாண்டும் வேளையில் ஆட்டோ ஓட்டும் ஒரு பெண்மணி ” என்னா சார் நல்லாருக்கீங்களா?” என்று கேட்டார்..
மிகவும் சந்தோஷமாக இருந்தது. இது பெண்களின் காலமாக மாறி விட்டது. ஆண்கள் சிறிது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

அனைத்து நிகழ்ச்சிகளும் மிகவும் நன்றாக இருந்தது. அதிலும் கடைசி மூன்று நிகழ்ச்சியும் ஆகச்சிறப்பாக இருந்தது. அதற்கு பின்னால் எவ்வளவு உழைப்பை இருந்தது. எவ்வளவு நேரம் செலவழிக்கப்பட்டது என்பதை என்னால் கணிக்க முடிந்தது.

முதல், இரண்டு , மூன்று என பரிசு பெறுவது முக்கியம் இல்லை. இதில் பங்களிப்பது தான் வழ்க்கையில் சிறந்த தருணம். நீங்கள் பயிற்சிக்காக செலவழித்த நேரம் தான் முக்கியம். போட்டி என்பது வேறு. நாம் செயல்முறையை ரசிப்போம்.

உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. மீண்டும் மீண்டும் நாம் இது போன்ற நிகழ்ச்சிகளில் சந்திப்போம். பொது இடங்களில் முகக் கவசம் அணியவில்லை என்றால் ரூ.500/- அபராதம் என்றார்கள். இங்கு இருக்கும் கூட்டத்திடம் ரூ.500/- வசூல் செய்தால் அது பெரிய தொகையாக இருக்கும். நம் அனைவரும் எப்போதும் பாதுகாப்பாக இருப்போம். அரசு சொல்லும் அறிவுறுத்தலை நாம் அனைவரும் கடைப்பிடிப்போம்.

நடிகர் ஜீவாவுடன் இந்த மேடையை பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி. ஒரு அப்பாவும் மகனும் ஒரு மேடையில் அமர்ந்திருப்பது போன்று தான் இது. ஜீவாவின் முதல் படத்தின் படப்பிடிப்பின் என்னை பார்க்க வந்தார். அவரை நான் வாழ்த்துவேன் என்று எதிர்பார்த்தார். ஆனால், நான் “தயாரிப்பாளரின் மகன் என்றால் நடிக்க வந்துவிடுவீர்களா?” என்று கேட்டேன் அவர் அதிர்ச்சி அடைந்து என்னைப் பார்த்தார்.

அதன் பின் நான் அவருக்கு சில அறிவுறுத்தலை சொன்னேன். சில புத்தகங்களை படிக்க சொன்னேன் அவர் அது எதையும் மதிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், அவர் அது அனைத்தையும் செய்தார். லயோலா கல்லூரி மாணவர்கள் கேள்வி படிப்பதை போல் அவர் படித்தார். இன்று அவர் ஒரு பெரிய நடிகனாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

Spread the love