Friday, February 13

‘லவ் டுடே’ திரை விமர்சனம்

அந்த காலத்தில் உன்னுடைய நண்பன் யார் என்று சொல்லு? உன்னை பற்றி சொல்லுகிறேன் என்று சொல்லுவார்கள், இன்றைய காலகட்டத்தில் உன்னுடைய மொபைல் போனை கொடு உன்னை பற்றி சொல்லுகிறேன் என்று சொல்லுவார்கள், இந்த கருத்தை பிரதிபலிக்கும் கதைதான் பிரதீப்பின் லவ் டுடே.

கதையின் நாயகன் பிரதீப்பும், கதையின் நாயகி இவானாவும் காதலிக்கிறார்கள்.இவர்களது காதலை அறியும் இவனாவின் அப்பாவான சத்யராஜுக்குத் தெரிந்தவுடன் அவர் காதலர்களுக்கு ஒரு நிபந்தனை வைக்கிறார்அந்த நிபந்தனை,காதலர்கள் இருவரும் அவர்களது மொபைல் போன்களை ஒருநாள் மாற்றி வைத்துக் கொள்ளும்படியும், அதற்குப் பின்னும் அவர்களின் காதல் தொடர்ந்தால், அவர்கள் திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்கிறார்.அதன்படியே போனை மாற்றிக்கொள்ளும் காதலர்கள் ஒருவர் மற்றவரின் போனை பார்க்க, ஒருவரை பற்றி மற்றவர் அறிந்துகொள்ளுகிறார்கள் .இதனால் அவர்களது காதல் என்னவானது ?சத்யராஜின் நிபந்தனையால் ஒருவரை பற்றி மற்றொவர் தெரிந்துகொண்டதுதான் என்ன ?அதனால் இருவருக்கும் ஏற்பட்ட சிக்கல்கள் என்ன ?கடைசியில் காதலர்கள் இணைந்தார்களா? இது போன்ற கேள்விகளுக்கு விடை தருகிறது படத்தின் எஞ்சிய கதை.

தன்னுடைய முதல் படமான கோமாளி படத்திலேயே தனக்கென தனி முத்திரையுடன் வெற்றி பெற்ற இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தில் அவரே நாயகனாகவும் நடித்து அதிலும் தன் தனித்திறமையினை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுகளை பெறுகிறார். தமிழ் சினிமாவுக்கு மீண்டும் ஒரு வெற்றிப்பட டைரக்டர் மற்றும் ஹீரோ காம்பினேஷன் கிடைத்துவிட்டது என்றே சொல்லாம்.

தன் நடிப்பாலும் அழகாலும் நாயகி இவானா ரசிகர்களை கவர்கிறார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை தன்னுடைய ஸ்டைலில் நடித்து அசத்தும் சத்யராஜ் இந்த படத்திலும் இவானாவிற்கு, அப்பாவாக மிகவும் இயல்பாக நடித்துள்ளார், நாயகன் பிரதீப்பிற்கு, அம்மாவாக நடித்துள்ள ராதிகா சரத்குமார் இன்றைய அம்மாக்களை பிரதிபலிப்பவராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்

பிரதீப் இயக்கத்தில் கோமாளியில் அசத்திய யோகி பாபுவிற்க்கு இந்த படத்திலும் நல்லதொரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது, அவரும் அதை நிறைவாய் செய்துள்ளார் மேலும் ரவீனா ,ஆதித்யா கதிர் போன்றவர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியுள்ளார்கள் .

யுவனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் கதையோட்டைத்திருக்கு பலமாய் அமைந்துள்ளது தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவும் ,ப்ரதீப் E ராகவின் படத்தொகுப்பும், இயக்குனருக்கு பெரிதும் துணை நின்றுள்ளன.

காதலுக்கு தோற்றமும் அது தரும் ஈர்ப்பும் மட்டும் முக்கியம் அல்ல, நம்பிக்கையும் அவசியம் என்பதை உணர்த்தும் இந்த படம் ,காதலில் இருப்பவர்களுக்கும் மட்டும் அல்ல, காதலிக்க ஆசைப்படுகிறவர்களுக்கும் ஒரு மெசேஜ் சொல்லும் படம் .

Spread the love