Friday, April 24

லவ் மேரேஜ் -திரை விமர்சனம்

அறிமுக இயக்குநர் ஷண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம்பிரபு,சுஷ்மிதா பட் மற்றும் பலரின் நடிப்பில் உருவாக்கி உள்ள திரைப்படம் Love Marriage.

கதையின் நாயகன் விக்ரம் பிரபுவுக்கு 33 வயதானாலும் இன்னமும் திருமணம் ஆகவில்லை, அவருடைய வயது ,தொழில் போன்ற பல காரணங்களினால் அவரது திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது ,இறுதியாக ஒரு வரன் கிடைக்கிறது, அந்தப் பெண்ணை நிச்சயம் செய்ய மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்கு ஊர் விட்டு ஊர் செல்கிறார்கள்,ஆனால் எதிர்பாராத விதமாக கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் போடப்படும் ஊரடங்கினால் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிலேயே தங்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் , மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிலேயே தங்கி இருக்க கூடிய சூழ்நிலையில் மணமகள் வீட்டை விட்டு சென்று விடுகிறார், இதனால் ஏற்படும் குழப்பங்கள் விக்ரம் பிரபுவின் திருமண ஆசைக்கு தடங்கலாக வருகிறது, மணமகள் எதற்காக வீட்டை விட்டு வெளியேறினார் ?பல வருடங்களாக திருமணத்திற்காக காத்திருந்த விக்ரம் பிரபுவின் திருமண கனவு நனவாகியதா? இல்லையா? என்னும் பல வினாக்களுக்கு விடையைச் சொல்கிறது படத்தின் மீதி கதை.

கதையின் நாயகனாக ராமச்சந்திரன் என்னும் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ளார் ,கல்யாண கனவுகளுடன் ஏங்கித் தவிக்கும் கதாபாத்திரத்தில் தன்னுடைய இயல்பான நடிப்பினை சிறப்புற வெளிப்படுத்தி உள்ளார், கதையின் நாயகி அம்பிகாவாக நடித்துள்ள சுஷ்மிதா , கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பினை நல்ல முறையில் வெளிப்படுத்தியுள்ளார், மேலும் சுஷ்மிதாவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ள மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள் தாஸ், கஜராஜ் போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் குறைவில்லாத நடிப்பினை வழங்கி ,தங்களுடைய கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளார்கள்.

திருமண வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் இருக்கும் இளைஞர்களின் மன உணர்வினை அழகாக வெளிப்படுத்தும் கதைக்கு, பொருத்தமான காட்சிகளை, திரைக்கதையாக அமைத்து ,கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நட்சத்திரங்களை தேர்வு செய்து, உறவுகளுக்கிடையே உள்ள உணர்ச்சிப் போராட்டங்களை சித்தரிக்கும் வகையில் நல்லதொரு படத்தை இயக்குனர் சண்முகப்பிரியன் உருவாக்கியுள்ளார்..

ஷான் ரோல்டன் இசையில் பாடல்களும், குடும்பக்கதைக்கேற்ற பின்னணி இசையும் ரசிக்கும்படி உள்ளது.,இயக்குனரின் கதையோட்டத்திற்கு இணக்கமாக, ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபரின் படப்பதிவு நன்றாக அமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு காரணங்களால் திருமணம் ஆகாத, திருமண வயதை கடந்தவர்களுக்கு மட்டுமின்றி திருமணத்திற்காக காத்திருக்கின்ற அனைத்து ஆண்களும், பெண்களுக்கான கதையாக ,இந்த லவ் மேரேஜ் அமைந்து, குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய பேமிலி என்டர்டைய்னர் மூவியாக உள்ளது.

Spread the love