படம் பார்க்கும் ரசிகர்கள் தங்களை கதையின் நாயகன் மணிகண்டனுடன் இணைத்து பார்க்க வைக்கும் படம் ‘குடும்பஸ்தன்’
வரைகளை நிபுணராக பணியாற்றும் நவீன் (மணிகண்டன்) இந்தப் படத்தில் கதையின் நாயகன், அவர் தான் காதலிக்கும் வெண்ணிலாவை (சான்வே மேகனா) நண்பர்களின் உதவியோடு கரம் பிடித்து இல்வாழ்க்கையில் இணைகிறார்.அதன்பின் பெற்றோர்களுடனே வாழ துவங்கும் ,அவரது வாழ்க்கை ஒவ்வொரு நடுத்தர குடும்பத்து இளைஞர்களும் தூக்கி சுமக்கும் பாரங்களை ஏற்றுப் பயணிக்கும் வகையில் தொடர்கிறது .இருக்கிற குடும்பப் பிரச்சினைகள் பத்தாது என்று போதாக்குறைக்கு,அவரது அக்காவின் கணவர் எப்பொழுதும் நவீனின் குடும்பத்தை தாழ்த்திப் பேசிக் கொண்டிருப்பதையே தன் குணமாக கொண்டவர். பட்ட காலிலேயே படும் என்பது போல இந்த நெருக்கடியான நிலைமையில் அவருக்கு வேலையும் பறிபோய் விடுகிறது ,இருப்பினும் தனக்கு வேலை போன விஷயத்தை வீட்டில் சொல்வதற்கு பயந்து, அதனை மறைத்து, வெளியில் ஏராளமான அளவில் கடன் வாங்குகிறார் .அந்தக் கடன் சுமை மேலும் ,மேலும் வளர்ந்து பெரும் பாரமாக அவரது தோளில் இறங்குகிறது . இறுதியில் அவர் எப்படி அந்த இக்கட்டில் இருந்து வெளியே வந்தார் என்பதை எடுத்துச் சொல்வதே குடும்பஸ்தன் படத்தின் மீதி கதை.

கதையின் நாயகனாக நவீன் எனும் கதாபாத்திரத்தில் மணிகண்டன் நடித்துள்ளார். ‘ஜெய் பீம்’,குட் நைட் ,லவ்வர் என்ற புதிய பாணி பட கதைகளில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த மணிகண்டன், இந்த படத்தின் மூலமாகவும் தன் ரசிகர்களை மீண்டும் கவர்ந்துள்ளதோடு மட்டுமல்லாமல் புதிய ரசிகர்களையும் சேர்க்கும் அளவிற்கு சிறப்பாக நடித்துள்ளார். அவருக்கு இணையாக கதையின் நாயகியாக சான்வே மேகனா நடித்துள்ளார் ,அவருக்கு இப்படம் அறிமுக படமாக இருந்தாலும் தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து நடித்துள்ளார். படத்தின் மைய கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடித்துள்ளார்,நன்கு உருவாக்கப்பட்டிருக்கும் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற வளமான நடிப்பை கொடுத்து,அந்த கதாபாத்திரத்திற்கு அவர் பெரும் பலம் சேர்த்துள்ளார். மற்றும் நிவேதிதா, ஆர் சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன் ,ஜென்சன் திவாகர் போன்றவர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் குறைவின்றி நடித்துள்ளார்கள்.

வைசாக்கின் இசையில் பாடல்கள் கேட்கும் படி உள்ளது ,கதையின் காட்சிகளின் தன்மைக்கேற்ப பயணிக்கும் ,அவரது பின்னணி இசையும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் நன்கு உள்ளது. எளிய மனிதர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் கதாபாத்திரங்களைக் கொண்ட குடும்ப கதைக்கு ,தேவையான காட்சி அமைப்புகளை அமைத்து நன்கு படமாக்கி உள்ளார் ஒளிப்பதிவாளர் சுஜித் என் சுப்ரமணியம். .இன்றைய நடுத்தர குடும்பத்து கதாபாத்திரங்கள் சந்திக்கும் வாழ்வியல் சிக்கல்களையும்,, அதை எதிர்கொள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் மையமாக உள்ள இளைஞர்களின் போராட்டங்களையும் நகைச்சுவை மற்றும் எமோஷனும் கலந்த , யதார்த்தமான படமாக கொடுத்துள்ளார் அறிமுக இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி.
மொத்தத்தில் மொத்த குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து ஜாலியாக பார்த்து ரசிக்கலாம், இந்த குடும்பஸ்தனை.
