இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய். ஜி .மகேந்திரன், சரவண சுப்பையா , சத்யன்,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான்,கவிதா பாரதி, இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கூரன்’.
திரைக்கதை வசனம் -எஸ். ஏ. சந்திரசேகர், இயக்கம் – நிதின் வேமுபதி .ஒளிப்பதிவு- மார்டின் தன்ராஜ், இசை-சித்தார்த் விபின்,கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார்.
.
கொடைக்கானலில் ஜான்சி என்கிற நாய் தனது குட்டியுடன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது தன் கண்ணெதிரேயே ஒரு குடிகாரக் கும்பல் காரை விட்டு ஏற்றிக்கொன்று விட்டுப் பறந்து செல்கிறது. அந்தத் தாய் நாய் குரைத்துக் கொண்டே காரைத் துரத்திச் செல்கிறது . தனக்கான நீதி கேட்டு காவல் நிலையம் செல்கிறது, அங்கே அது துரத்தியடிக்கப்படுகிறது. இருந்தாலும் அங்கேயே படுத்துக் கொள்கிறது. அதன் பிறகு வழக்கறிஞர் எஸ். ஏ. சந்திரசேகர் வீட்டுக்குச் செல்கிறது.காவலாளி அங்கேயும் அதை விரட்டி அடிக்கவே, மீண்டும் மீண்டும் வந்து பார்க்கிறது.அதைக் கவனித்த எஸ் .ஏ. சி அது ஏதோ சொல்ல விரும்புகிறது என்று அதன் உணர்வுகளைக் கவனிக்கிறார் .அது வாயில்லா ஜீவன் என்றாலும் அது தனது கதையை அவர் உணரும்படிச் செய்கிறது.அதைத் தொடர்ந்து சென்று, குட்டியை இழந்த அதன் கோபத்தையும்,சோகத்தையும் புரிந்து கொள்கிறார்.தர்மராஜ் என்கிற புகழ் பெற்ற வழக்கறிஞராக இருக்கும் எஸ்.ஏ.சி , அந்த நாய்க்காக வாதாட வருகிறார். பல்லாண்டுகளாக நீதிமன்றத்தில் வாதாடாமல் இருந்தவர், அந்த நாய்க்காக களத்தில் இறங்குகிறார். அதன் குட்டியை இரக்கமில்லாமல் கொன்ற குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அந்த வழக்கை எடுத்துக் கொள்கிறார். அவர்களைக் கண்டுபிடிப்பதற்கும் அதை நீதிமன்றத்தில் நிரூபிப்பதற்கும் அவர் போராடுகிறார் .இறுதியில் அந்த வாயில்லா ஜீவனின் குரலுக்கு நீதி கிடைத்ததா? அதற்கு அவர் என்ன செய்கிறார்? என்கிற போராட்டத்தின் பயணம் தான் ‘கூரன்’ படத்தின் கதை..
திரைப்படங்களில் விலங்குகளை மையப்படுத்தி ஏராளமான கதைகள் வந்துள்ளன. பெரும்பாலும் மனித உணர்வுகளைப் புரிந்து கொண்டு விலங்குகள் செயல்படுவது போல் தான் இருக்கும். ஆனால் இதில் அந்த நாயின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு மனிதர்கள் செயல்படுவது போல் காட்சிகள் உள்ளன. எனவே இதனை வித்தியாசமான கதையாக உணரலாம்.

கூரன் படத்தில் வழக்கறிஞர் தர்மராஜ் என்கிற பாத்திரத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துள்ளார்.நடிகராக அவர் தோன்றிய படங்களில் இதைக் குறிப்பிடத்தக்க பாத்திரம் என்று கூறலாம்.அவரது உடல் மொழி, வசன உச்சரிப்பு, மிகையற்ற பாவனைகள் அந்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கின்றன.
படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் ஜென்ஸி மற்றும் பைரவா என்ற பெயர் கொண்ட நாய் படம் முழுவதும் அதன் பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் படி கேட்டு நன்கு நடித்துள்ளது.
காரை நாயின் மீது ஏற்றிக்கொன்ற ரஞ்சித் ராஜாவின் தந்தையாக கவிதா பாரதியும் ,அவருக்காக வாதாடும் வழக்கறிஞராக பாலாஜி சக்திவேலும் நடித்துள்ளார்கள்,மேலும் நீதிபதியாகயாக ஒய்.ஜி.மகேந்திரன், ஜார்ஜ் மரியான் ,சத்யன், இந்திரஜா ரோபோ சங்கர் போன்றவர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் குறைவின்றி நடித்துள்ளார்கள்.
கொடைக்கானல்,மலைப்பிரதேசத்தின் பின்புல காட்சிகளை . மார்டின் தன்ராஜ் தன் ஒளிப்பதிவில் அழகாக பதிவு செய்துள்ளார் . மாருதி.படத்தொகுப்புப் பணியை செய்ய அதனை மேற்பார்வை செய்துள்ளார் பீ. லெனின். ஒரு நாய் பற்றிய கதையாக இருந்தாலும் அதன் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் நன்றாகவே பின்னணி இசையைச் சேர்த்துள்ளார் சித்தார்த் விபின். அதுமட்டுமல்ல இனிமையான பாடல்களும் உண்டு.
மொத்தத்தில் விலங்குகளும் மனிதர்களைப் போன்றவை தான், அவற்றுக்கும் இந்த உலகில் வாழ்வதற்கு உரிமை உண்டு .தான் வாழ்வதற்காக மனிதன் அதை அழிக்கக்கூடாது, துன்புறுத்தக் கூடாது என்கிற கருத்தை சொல்லி இருக்கிறது இந்த படம் .
பெரிதாக லாஜிக் எல்லாமும் பார்க்காமல் பொழுபோக்குக்காக பார்க்கக்கூடியவன் இந்த கூரன் என்று சொல்லலாம்.
