யார் குற்றவாளி என்ற கேள்வியைத் தாண்டி, உண்மை எது என்ற குழப்பத்தை உருவாக்கும் ‘கிட்டி’ ஒரு சுவாரஸ்யமான திரில்லர்.
“நான் இரண்டு கொலைகளைச் செய்துவிட்டேன்…” என்று காவல் நிலையத்தில் சரணடையும் விஜய்யின் வாக்குமூலத்துடன் தொடங்குகிறது ‘கிட்டி’. தான் தீவிரமாக காதலித்த பூஜாவையும், தன்னை கொல்ல வந்த ஆளையும் கொன்றுவிட்டதாக விஜய் தெரிவிக்கிறான்.குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகும், விஜய் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஏதோ ஒரு முரண்பாடு இருப்பதை காவல் அதிகாரி யுகன் கவனிக்கிறார். அதனால், இது வெறும் இரட்டைக் கொலை வழக்கா அல்லது அதன் பின்னால் வேறு ஏதாவது மர்மம் இருக்கிறதா என்ற சந்தேகம் அவருக்குள் எழுகிறது. அந்த சந்தேகமே விசாரணையை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்துகிறது.விசாரணை தீவிரமடையும்போது, விஜய்யின் கடந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்திற்கு வருகிறது. அவனது நண்பன் ஆட்டோ ஓட்டுநர் ராஜா மற்றும் மருத்துவர் அரவிந்த்ராஜ் மூலம் விஜய்க்கு இருக்கும் விசித்திரமான மனநிலை பற்றிய தகவல்கள் தெரியவருகின்றன.யாராவது ஒரு சம்பவத்தை “நீதான் செய்தாய்” என்று தொடர்ந்து கூறினால், ஒரு கட்டத்தில் அதை உண்மையிலேயே தான் செய்ததாக விஜய் நம்பத் தொடங்குவதே அந்த மனநிலையின் தன்மை. இதனால், விஜய் அளிக்கும் வாக்குமூலம் உண்மையா, அவனது நினைவுகள் உண்மையைச் சொல்கிறதா, அல்லது அவன் வேறொருவரின் வார்த்தைகளை நம்பி பேசுகிறானா என்ற கேள்விகள் தொடர்ந்து எழுகின்றன.இதற்கிடையில், விஜய் காதலித்ததாகக் கூறும் பூஜா யார்? அவர்களுக்குள் உண்மையில் என்ன நடந்தது? விஜய் கூறும் இரண்டு கொலைகளுக்கும் உண்மையான தொடர்பு என்ன? என்ற கேள்விகளுக்கான பதில்களை நோக்கி மீதி திரைக்கதை பயணிக்கிறது.

கதையின் மையக் கதாபாத்திரமாக விஜய் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அசோக்,மாறுபட்ட உணர்வுகளை இயல்பான முறையில் நன்கு வெளிப்படுத்தியிருப்பது அவரது கதாபாத்திரத்துக்கு வலிமை சேர்க்கிறது.காவல் அதிகாரி யுகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள யுவனும், விசாரணையின் தீவிரத்தை தனது உடல்மொழி மற்றும் நடிப்பின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.சங்கவி, நிஷா, சிமு அத்வானி ஆகியோரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் குறைவில்லாத நடிப்பை வழங்கியுள்ளனர். அரவிந்த்ராஜ், ஒய்.ஜி. மகேந்திரன் போன்ற மூத்த கலைஞர்கள் தங்களது அனுபவமான நடிப்பின் மூலம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளனர்.
ஒரு சஸ்பென்ஸ் திரில்லரின் வெற்றி, கதையின் மர்மத்தை மட்டும் சார்ந்தது அல்ல; அந்த மர்மத்தை ரசிகர்களின் மனநிலைக்கும் ,கண்களுக்கும் கடத்தும் திரைமொழியிலும் இருக்கிறது.அந்த வகையில் ஒளிப்பதிவாளர் வி.எஸ். வேலனின் கேமரா கோணங்கள், கதையின் பதற்றமான சூழலுக்கு ஏற்ற வகையில் காட்சிகளை நன்கு பதிவு செய்துள்ளன. அதே போல ,காட்சிகளின் மனநிலையை வலுப்படுத்தும் வகையில் காதர் வழங்கியுள்ள பின்னணி இசையும் குறிப்பிடத்தக்கது.கார்த்திக் பாண்டியனின் படத்தொகுப்பு, திரைக்கதையின் வேகத்திற்கு ஏற்ற வகையில் காட்சிகளை நகர்த்த உதவுகிறது. குறிப்பாக விசாரணை தொடர்பான பகுதிகளில் தேவையான வேகத்தை தக்கவைத்திருப்பது படத்தின் சஸ்பென்ஸ் தன்மைக்கு துணை நிற்கிறது.
இயக்குனர் நெடுமாறன் மோகன்தாஸ், ஒரு கொலை வழக்கை மட்டும் மையமாகக் கொள்ளாமல், அதனுடன் வித்தியாசமான மனநிலையையும் இணைத்து திரைக்கதையை உருவாக்கியுள்ளார்.கதாபாத்திரங்களின் பின்னணிக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதற்கேற்ற கலைஞர்களை தேர்வு செய்திருப்பதும் படத்தின் பலமாக உள்ளது.வலுவான தொழில்நுட்பக் கூட்டணியுடன், சஸ்பென்ஸ் திரில்லர் களத்தில் தனக்கான ஒரு வித்தியாசமான கதைக்களத்தை உருவாக்க முயன்றிருக்கிறார் இயக்குனர்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒருவன் உண்மையில் குற்றவாளியா என்பதைவிட, “அவன் சொல்வது உண்மையா?” என்ற கேள்வியை முன்வைப்பதுதான் ‘கிட்டி’யின் சுவாரஸ்யமான அம்சம்.வித்தியாசமான கதைக்களத்தில் ஒரு சஸ்பென்ஸ் திரில்லரை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கான படமாக இப்படம் அமைந்துள்ளது.
