Friday, January 24

கார்த்தி கூடிய விரைவில் தேசிய விருது வாங்குவார்-விருமன் பட விழாவில்,இயக்குனர் இமயம் பாரதிராஜா பேச்சு

இது மதுரை மண். என் சொந்த மண். ரசனைக்குப் பெயர் போன மண். மதுரையில் ஒரு படம் ரசிக்கப்படுகிறது என்றால், உலகம் முழுவதும் ரசிக்கப்படும் என்று அர்த்தம். என் பெருமைக்குரிய இடம் மதுரை. மேடையில், நான் சம்பிரதாயத்திற்குத்தான் பேசுவேன். ஆனால், சில படங்கள் தான் மூச்சுமுட்ட அமுக்கி விடும். அதுமாதிரியான படம் தான் விருமன். இந்த படத்தின் சிறப்பம்சங்கள் நிறைய இருக்கிறது. இவர்கள் 4வது தலைமுறை பிள்ளைகள். சூர்யா, கார்த்தி என் வீட்டில் விளையாடிய பிள்ளைகள். இன்று அவர்களை நினைத்து பெருமையாக இருக்கிறது. உதவி இயக்குனராக இருந்தபோது, சிவக்குமார் திருமணமாகி வந்தார். அவருடைய பிள்ளைகள் இப்படி வருவார்கள் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. ஒழுக்கமுள்ள சிறந்த மனிதர் சிவகுமார். ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்தவர் சிவகுமார். வசதியாக இருந்தாலும், பள்ளிக்கு கார் கொடுத்து அனுப்ப மாட்டார்.

ஷங்கரைப் பார்த்து பிரமித்தவன் நான். ஷங்கருக்கு முன்பே இயக்குனராகிவிட்டேன். ஆனால், ஷங்கர் வந்தபோது பயந்தேன். நான் ஒரு வட்டத்திற்குள்ளேயே இருந்துவிட்டேன். சினிமாவை ஷங்கர் உலகத்தரத்திற்கு எடுத்துச் சென்று விட்டார். அவருடைய பெண் மருத்துவம் படித்திருக்கிறார். அவர் மகள் நடிக்கிறாரா? என்று ஆச்சரித்துடன் கேட்டேன். சிறப்பாக நடனமாடியிருக்கிறார். வருங்காலத்தில் மிகப் பெரிய நடிகையாக வலம் வருவார். தமிழ்நாட்டின் ஏஞ்சல் என்று போற்றப்படுவார். ஆனால், முகத்திற்குள் நடிகையைக் கொண்டு வந்திருக்கிறார். ஷங்கர் பெண் என்பதற்காக கூறவில்லை, அழகு இருந்தால் லட்சணம் இருக்காது, லட்சணம் இருந்தால் அழகு இருக்காது. ஆனால், அழகும் லட்சணமும் சேர்ந்து இருக்கிறார். இவை இருந்தாலே உயரத்திற்குச் சென்று விடுவார்.

நான் பார்த்து வளர்ந்த பையன் கார்த்தி. அவனுடைய நடனம் மெய்சிலிர்க்க வைத்தது. மிகச் சிறந்த நடிகன். அவன் கண் பேசகிறது, முகம் பேசுகிறது, முடி பேசுகிறது. பருத்தி வீரன் பார்த்தேன். ஷாக் ஆனேன்.

கார்த்திக் கூடிய விரைவில் தேசிய விருது வாங்குவார்.

சூர்யாவுடன் ஆயுத எழுத்து படத்தில் நடித்தேன். அதில் ஒரு காட்சியில் நடித்து முடித்ததும், Uncle super, keep it up like this என்று கூறினார். நான் எத்தனை பேருக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்திருக்கிறேன். ஆனால், சூர்யாவிடமிருந்து இதைக் கேட்ட பின்பு நான் இன்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று பயந்தேன்.

சினிமாத் துறையில் நிறைய தொந்தரவு கொடுத்தார்கள். ஆனால், ஜெய்பீம் என்று வந்து நின்றான். எது நடந்தாலும் நான் உன் பின்னால் இருக்கிறேன் என்று கூறினேன். அவர்கள் மிகப்பெரிய சொத்து. உங்களுக்கு தான் அவர்கள் நடிகர்கள். ஆனால், அதற்கும் மேல் சம்பாதித்ததை வைத்தே அறக்கட்டளை தொடங்கி ஏழை மாணவர்களுக்கு கல்வி அளித்து வருகிறான். சம்பாதிக்கும் தன்மை அனைவருக்கும் இருக்கிறது. ஆனால், கொடுக்கும் மனப்பான்மை மனிதனுக்கு வர வேண்டும் அது இவர்களுக்கு இருக்கிறது.

சிவகுமார் ஒழுக்கமானவர். அவர் குடும்பம் சிறந்த குடும்பம். இது மாதிரி பிள்ளைகள் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். அந்த காலத்தில் சேரன், சோழன், பாண்டியர்கள் இமயம் சென்று வென்று வருவார்கள். ஆனால், சூர்யா பம்பாய் சென்று வென்று வந்திருக்கிறார். சூர்யா கிடைக்க ஜோதிகா கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

இங்கு பேசிய வடிவுக்கரசி, இளவரசு போன்ற பலரை அறிமுகப்படுத்திய பெருமை இருந்தாலும், எனக்கு சூர்யா, கார்த்தி போல பிள்ளைகள் இல்லையென்ற வருத்தம் இருக்கிறது.

இந்த தங்கங்களை வைத்து படமெடுக்க ஆசை இருக்கிறது. தங்கம் சாதாரணமாக வராது. இருந்தாலும், அவர்கள் மெனக்கடும்படியான கதையை அடித்துக் கூறி எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்றார்.

Spread the love