வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ஒரு படத்துக்கு வரவேற்பு கிடைப்பது என்பது மிகவும் அபூர்வம். 2019-ம் ஆண்டில் இந்த அபூர்வம் ‘கைதி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நிகழ்ந்தது. அக்டோபர் 25-ம் தேதி வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்டது.
வித்தியாசமான கதைக்களங்களைத் தொடர்ச்சியாக வெற்றிகரமாகத் தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் ‘கைதி’. கார்த்தியின் அசாத்திய நடிப்பில் உருவான இந்தப் படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இதில் நரேன், அர்ஜுன் தாஸ், பேபி மோனிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
முன்னணி நாயகனின் படத்தில் நாயகி கிடையாது, பாடல்கள் கிடையாது உள்ளிட்ட பல புதுமையான விஷயங்கள் இந்தப் படத்தில் கையாளப்பட்டது. கார்த்தியின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்த படம் ‘கைதி’ என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ‘கைதி’ மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இதன் அஜய் தேவ்கன் நடிப்பில் ‘போலா’ என்ற பெயரில் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. இதனை ட்ரீம் வாரியர் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனம், டி-சீரிஸ் நிறுவனம் மற்றும் அஜய் தேவ்கன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது.
தற்போது மேலும் ஒரு மைல்கல்லாக ரஷ்யாவில் பிரம்மாண்டமான முறையில் வெளியாகிறது ‘கைதி’. ‘உஸ்னிக்’ என்ற பெயரில் சுமார் 121 நகரங்களில் 297 திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ்த் திரைப்படம் ஒன்று ரஷ்யாவில் பிரம்மாண்டமான முறையில் வெளியாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக பல்வேறு விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளது. ‘உஸ்னிக்’ படத்தினை ரஷ்யாவில் 4 சீசன்ஸ் கிரியேஷன்ஸ் வெளியிடுகிறது.
100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்த ‘கைதி’ திரைப்படம், ரஷ்யாவிலும் பிரம்மாண்டமான முறையில் வெளியாவதால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது ட்ரீம் வாரியர் நிறுவனம்.