Sunday, April 19

காதல் என்பது பொதுவுடமை -திரைப்பட விமர்சனம்

காதல் என்பது பொதுவுடமை திரைப்பட விமர்சனம்

வித்தியாசமான கதை களத்தில் கொண்டுள்ள இந்தப் படத்தின் கதையின் நாயகியாக உள்ள லிஜாமோல் ஜோஸ் காதல் வயப்படுகிறார் தன்னுடைய காதலைப் பற்றி அவரது அம்மா ரோகிணி இடம் கூற ,அதற்கு அவர் மகளிடம் காதலனை அழைத்து வரச் சொல்கிறார், அம்மாவின் விருப்பப்படி லிஜாமோல் ஜோசும் தன் மனதுக்கு பிடித்தவரை அழைத்து வருகிறார், ஆனால் அவர் அழைத்து வந்தவர் காதலர் அல்ல, காதலி …ஆம் அவர் தன்பால் ஈர்ப்பால் ஒரு பெண்ணை விரும்புகிறார்.. முற்போக்கு சிந்தனையுடையவராக ரோகிணி இருந்தாலும் தன்னுடைய ஆசை மகள் விருப்பத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறார் இறுதியில் என்ன நடந்தது என்பதே காதல் என்பது பொதுவுடமை படத்தின் மீதி கதை.

கதையின் நாயகியாக லிஜாமோல் ஜோஸ் இந்த படத்தில் நடித்துள்ளார். தன்னுடைய காதலில் உறுதியாக இருக்கும் இளம் பெண் கதாபாத்திரத்தில் ,தன்னுடைய துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளார். நாயகியின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரோகிணி தன்னுடைய அனுபவ நடிப்பினை நன்கு அழுத்தமாக பதிவு செய்து தன்னுடைய கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் பாசமுள்ள தாய் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். நாயகியின் தந்தையாக நீண்ட இடைவெளிக்கு பின் நடித்துள்ள வினித் ஒரு பாசமுள்ள தந்தையின் குணாதிசியங்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நிறைவாக நடித்துள்ளார். நாயகி மனதில் இடம் பிடித்த நாயகியாக வரும் அனுஷா பிரபுவும் குறைவில்லாத நடிப்பை நிறைவாக கொடுத்து கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்துள்ளார். மேலும் நண்பன் கதாபாத்திரத்தில் கலேசும் ரோகினியின் வீட்டில் பணிபுரிபவராக தீபாவும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நன்கு நடித்துள்ளார்கள்.

மெத்தப் படித்தவர்களே ஏற்றுக் கொள்ளாத, பேச தயங்கும் கதை கருவினை எடுத்துக்கொண்டு, கதாபாத்திரங்களின் மன உணர்வுகளின் வழியே அதை பயணிக்க வைத்து, சிறப்பான திரைக்கதை காட்சிகளின் வழியே படமாக்கி உள்ளார் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதா கிருஷ்ணன். ஒரு பெண்ணின் வாழ்வியலில் அவளது சொந்த குடும்பமும், அவள் சார்ந்துள்ள சமூகமும், அவளது ஆசைகளுக்கு எப்படி அங்கீகாரம் தருகின்றன என்ற கோணத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு தேவையான பட பதிவினை தன் காட்சிகள் வாயிலாக ஸ்ரீ சரவணனும், மன உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள காட்சிகளுக்கு இணக்கமான பின்புலத்தினை தரக்கூடிய இசையினை கண்ணன் நாராயணனும், காட்சிகளின் வேகத்திற்கும் நிதானத்திற்கும் பொருத்தமாக காட்சிகளை தொகுத்து இணைத்துள்ள எடிட்டர் டேனி சார்லசும் இயக்குனரின் தோளோடு தோள் என்று பணியாற்றி உள்ளார்கள்.

இன்றும் ஒரு ஆண், பெண் இடையிலான காதலுக்குள் பணம்,சாதி, அந்தஸ்து போன்ற பாகுபாடுகளும், சில இடங்களில் ஆணவக் கொலைகளும், நடத்துக்கிட்டு கிட்டுத்தான் இருக்கு, இந்த சூழ்நிலையில் மூன்றாம் பாலினத்தவர் மீதான பலரின் பார்வை வேறாக இருந்தாலும், இந்த படம் பார்த்த பிறகு சிலர் மனதளவில் அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டால் அது இந்த குழுவுக்கும், படத்தித்திற்கும் கிடைத்த வெற்றி ஆகும்.

Spread the love