கணேஷ் சந்திரசேகர், ரஷ்ய நடிகை கெசன்யா மற்றும் பலர் நடித்துள்ள படம்.கதை எழுதி ,இயக்கி, தயாரித்து முதன்மைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் கணேஷ் சந்திரசேகர்.ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் இந்தப் படம் உருவாகி உள்ளது . ஆக்சன் ரியாக்சன் வெளியிடுகிறது.18-ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது.
ஒரு புதையல் வேட்டை சார்ந்த கதையாக உருவாகி உள்ள படம் செஞ்சி.
பிரான்சிலிருந்து பாண்டிச்சேரிக்கு வரும் சோபியா தனது மூதாதையர் வீட்டை அடைகிறாள்.வீட்டில் நுழையும் போதே ஒரு கெட்ட சகுனம் வருகிறது. ஆனால் அவள் அதைப்பற்றி கவலைப்படாமல் உள்ளே நுழைகிறாள்.அங்கே பழைய புராதன கலைப் பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை ரசித்து பார்க்கிறாள் .ஆனால் அங்கே ஏதோ ஒரு அமானுஷ்யம் அவளுக்குத் தட்டுப்படுகிறது. எவ்வளவு தைரியமாக இருந்தாலும் மனதிற்குள் ஒரு பயம் வருகிறது. அங்கே ஒரு ஓலைச்சுவடியைக் கண்டெடுக்கிறாள். அதில் ஏதோ ரகசியம் இருப்பதாகப் படவே தொல்பொருள் ஆராய்ச்சி செய்யும் ஜாக் ஆண்டர்சனை நாடுகிறாள். அவர் வந்து அதை உற்று நோக்கிய போது அதற்குள் ஏதோ ஒரு ரகசியம் புதைந்திருப்பதாகத் தோன்றுகிறது. அது பற்றி மேலும் அறிய விரும்பும்போது அதில் ஒரு புதையலுக்கான ரகசிய குறியீடுகள் உள்ளதாக அவருக்குத் தெரிகிறது.சோபியாவுடன் இணைந்து தேட ஆரம்பிக்கிறார்.ரகசிய குறிப்புகளை வைத்துக்கொண்டு கிடைத்த குறியீடுகளின் படி தேட ஆரம்பிக்கிறார்கள். புதையல் வேட்டைக்கான பாதையில் ஐந்து தடயங்கள் உள்ளதாகக் குறிப்புகள் கூறுகின்றன. ஐந்தையும் ஒவ்வொன்றாக அடைந்து ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று இறுதியில் அந்தப் புதையலை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் செஞ்சி படத்தின் கதை.
ஒரு புதையல் வேட்டை போல் இந்தக் கதை தொடங்குகிறது.படம் ஆரம்பித்த பத்து நிமிடத்திற்குள் ஒரு பரபரப்பு நம்மைத் தொற்றிக் கொள்கிறது .ஏதோ ஒரு ரகசியம், மனித அறிவுக்குக் கட்டுப்படாத ஒன்று இருப்பதாக நம்மை அழைத்துச் செல்கிறது.
இந்தப் படத்தில் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளராக இயக்குநர் கணேஷ் சந்திரசேகர் நடித்துள்ளார்.வசன உச்சரிப்பில் அவர் இன்னமும் தேறிவர வேண்டும்.ஒரே நேரத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் வசனம் வருவதைத் தவிர்த்திருக்கலாம். வெளிநாட்டிலிருந்து வரும் ஆங்கிலேயப் பெண்மணியாக ரஷ்ய நடிகை கெசன்யா நடித்துள்ளார். அவரது நடிப்பும் மிகச்சிறப்பாக உள்ளது, அவருடைய ,தோற்றத்திலும் உடல் மொழியிலும் வசன உச்சரிப்பிலும் அனுபவம் தெரிகிறது.
படத்தில் சுட்டித்தனம் செய்யும் அந்த ஐந்து சிறுவர்களும் மாஸ்டர். சாய் ஸ்ரீனிவாசன்,மாஸ்டர் தர்சன் குமார்,மாஸ்டர் விதேஷ் ஆனந்த் ,மாஸ்டர் சஞ்சய், பேபி தீக்ஷன்யா மனதில் பதிகிறார்கள்.படத்தில் மூன்று பாடல்கள் உள்ளது, அதில் தேடல் தேடு என்ற பாடல் படத்தின் ஆரம்பத்தில் டைட்டில் வரும் போது ஒலிக்கிறது.
வேண்டும் என்ற பாடல் பிறகு வருகிறது.தங்கப் புதையலைக் கண்டுபிடித்த பிறகு பாடும் இது தங்கம் என்கிற பாடல் சிறுவர்களைக் கவரும்.பாடல் காட்சிகளின் இசையைவிட பின்னணி இசையில் இசையமைப்பாளர் எல். வி. முத்து கணேஷ் பங்களிப்பு நன்றாக உள்ளது .
படத்தில் நடித்துள்ள நடிகர்களை விடவும் படத்துக்குப் பெரிதாகப் பலமாக அமைந்துள்ளது படத்தில் வரும் லோகேஷன்கள்தான். அங்கு சிறப்பாக காட்சிகளை பதிவு செய்துள்ள ஒளிப்பதிவாளர் ஹரிஸ் ஜிண்டேவுக்குப் பாராட்டு கூறலாம். நம் தென்னிந்தியப் பகுதியில் இதுவரை கேமரா நுழையாத பல இடங்களில் நுழைந்து படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள்.அதனால்தான் படத்தில் அந்த லொகேஷன் ஒரு கதாபாத்திரம் போலவே அமைந்து பார்ப்பவர்கள் மனதில் ஆக்கிரமிப்பு செய்து விடுகிறது. அப்படிப்பட்ட லொகேஷன்களைச் தேர்வு செய்து சரியாகப் பயன்படுத்திய இயக்குநரையும் பாராட்டலாம்.
தமிழ் சினிமாவின் வழக்கம்போல காதல் காட்சிகள், டூயட், நகைச்சுவை, சண்டைக் காட்சிகள் என்ற எந்த மசாலா அம்சமும் இல்லாமல் இப்படம் உருவாகி உள்ளது பெரிய ஆறுதல்.
நமது பழங்கால வரலாற்று உணர்வை வரவழைக்கும் முயற்சியாக உருவாக்கிய விதத்தில் செஞ்சி படம் வெற்றி பெற்றுள்ளது.குறைகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அந்த நிலக்காட்சிகளுக்காகவே படத்தை ரசிக்கலாம்.
வரலாற்று உணர்வை நினைவூட்டும் ஒரு வணிகப்படமாக ‘செஞ்சி’ அமைந்துள்ளது என்று கூறலாம்.