Tuesday, January 21

பிரபல வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம், உடல்நலக்குறைவால் காலமானார்.

தந்தனந்தோம் என்று சொல்லியே .. என்று கணீர் குரலில் வில்லிசை பாடி மக்களின் இதயங்களை வென்ற கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்கள் 1928 ம் வருடம் திருநெல்வேலி மாவட்டம் சத்திர புதுக்குளத்தில் பிறந்தவர் . சுப்பு ஆறுமுகம் அவர்கள் கடந்த 40 வருடங்களாக வில்லுப்பாட்டு கச்சேரியினை நடத்தி மக்களிடையே புகழ்பெற்று இருந்தவர். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் உதவியால் சென்னையில் முதன்முதலாக கல்கி எழுதிய காந்தியின் சுயசரிதையை வில்லுபாட்டாக பாடி மக்களின் அன்பை பெற்றார், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் 19 படங்கள் உட்பட நாகேஷின் 60 படங்களுக்கு நகைச்சுவை பகுதிகளை எழுதியுள்ளார்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் மறைவிற்குப் பின்னர் கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்கள்,பல பகுதிகளில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியினை நடத்தி வந்தார். திரு. சுப்பு ஆறுமுகம் அவர்கள் தமிழக அரசின் “கலைமாமணி” மற்றும் மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமியின் விருதையும் பெற்றவர் மத்திய அரசின் சார்பில் உயரிய விருதுககளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது கடந்த 2021 ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது.வயது முதிர்வின் காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சுப்பபு ஆறுமுகம் (93) இன்று காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு பிரபலங்கள், அரசியல் கட்சித்தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சுப்பு ஆறுமுகம் அவர்களின் மறைவுக்கு திரு . கமல்ஹாசன் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில் இனிய நண்பரை இழந்து விட்டேன்” என்றும் கவிப்பேரரசுவைரமுத்து அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “நல்லிசை பாடும் வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் மறைந்துற்றார். எப்போதும் சிரித்த முகம் சிரிக்க வைப்பதை நிறுத்திக்கொண்டது. கலைவாணர் பரம்பரையின் இறுதி நிழல் இவர்தான். கவிஞர் பாடலாசிரியர் கதாசிரியர் வில்லிசைக் கலைஞர் என்ற பன்முகம்கொண்ட நன்முகம் அடங்கிவிட்டது. குடும்பத்தார்க்கும் கலை நண்பர்களுக்கும் நெல்லை மண்ணுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்

இவரது கலைப்பணி என்றும் மக்களால் நினைவுகூறத்தக்கவையில் நீடித்து நிலைத்து நிற்கும்.

Spread the love