Sunday, October 11

இ1- திரை விமர்சனம்

“ஒரே வீட்டுக்குள் நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவங்களின் மூலம் திரில்லரையும் சமூக விழிப்புணர்வையும் இணைக்கிறது ‘இ1’.

இரவு நேரம்… கணவர் ஊரில் இல்லாததால், தனது குழந்தையுடன் அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக இருக்கிறார் மோனிகா செலினா. எல்லாம் இயல்பாகச் சென்றுகொண்டிருக்கும் அந்த நேரத்தில், அவரது வீட்டுக் கதவைத் தாண்டி வரும் ஒரு நபர், அந்த இரவைப் பயங்கரமான அனுபவமாக மாற்றுகிறார்.அவர் சதா நாடார். ஒருவரைக் கொலை செய்துவிட்டு, அவரது சடலத்துடன் மோனிகாவின் வீட்டிற்குள் நுழைகிறார். வீட்டில் ஒரு கொலைகாரன், அருகில் ஒரு பிணம், மறுபுறம் குழந்தையுடன் அச்சத்தில் உறைந்துபோன ஒரு பெண்! வெளியேற முடியாமல் தவிக்கும் மோனிகாவுக்கு அந்த இரவு எப்படி முடியும் என்ற கேள்வி எழ, ஒவ்வொரு நிமிடமும் பதற்றம் அதிகரிக்கிறது.கொலை செய்யப்பட்டவர் யார்? அவரைக் கொலை செய்ததன் பின்னணி என்ன? பிணத்தை மோனிகாவின் வீட்டிற்குக் கொண்டு வந்ததற்கான காரணம் என்ன? எனப் பல மர்ம முடிச்சுகளுடன் அடுத்தடுத்த திருப்பங்களை நோக்கிப் பயணிக்கிறது ‘இ1’ படத்தின் கதை.

கதையின் நாயகனாகவும் இயக்குநராகவும் செயல்பட்டுள்ள சதா நாடார், தனது கதாபாத்திரத்தின் உணர்வுகளையும் அதன் தீவிரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் நடித்துள்ளார். குறிப்பாக, பதற்றத்தையும் மிரட்டலையும் வெளிப்படுத்தும் காட்சிகளில் அவரது நடிப்பு கவனம் பெறுகிறது.

குழந்தையுடன் தனியாக வீட்டில் இருக்கும் நிலையில், கொலைகாரனுடனும் ,பிணத்துடனும் சிக்கிக்கொண்ட பெண்ணின் பயம், பதற்றம், இயலாமை ஆகிய உணர்வுகளை மோனிகா செலினா சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். சுந்தரம், பாண்டி, பேபிஷிவ் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்பின் உட்புறங்களில் மின்சாரம் இல்லாத சூழலிலும் அதற்குத் தேவையான வகையில் ஒளி அமைப்புகளையும், நேர்த்தியான கோணங்களையும் ஒளிப்பதிவாளர் எம்.எஸ். மனோ குமார் உருவாக்கி, படத்தின் காட்சிகளை சிறப்பாக படப்பதிவு செய்துள்ளார் .இசையமைப்பாளர் இ. ஜே. ஜான்சனின் இசையில் பின்னணி இசை, காட்சிகளின் தன்மைக்கும் ,கதாபாத்திரங்களின் மன உணர்வுகளுக்கும் ஏற்ற வகையில் கதையோடு ஒன்றிணைந்து பயணித்துள்ளது. காட்சிகளின் விறுவிறுப்புக்கு எடிட்டர் பரணிசெல்வத்தின் பங்களிப்பும் பெரிதும் காரணமாக அமைந்துள்ளது .

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு எனப் பல பொறுப்புகளை ஏற்றுள்ள சதா நாடார் குமார் மற்றும் மோனிகா செலினா, ஒரே வீட்டுக்குள் நிகழும் சம்பவங்களை மையமாகக் கொண்டு திரில்லர் பாணியில் கதையை உருவாக்கியுள்ளனர்.கொலை, மிரட்டல், குழந்தையுடன் தனியாக இருக்கும் பெண்ணின் பாதுகாப்பற்ற நிலை என அடுத்தடுத்து எழும் சம்பவங்கள் கதையின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றன. அதேசமயம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த சமூக விழிப்புணர்வையும் படம் பதிவு செய்ய முயற்சித்துள்ளது.

நிறைவாக…

ஒரே வீட்டுக்குள் நடக்கும் மர்மமான சம்பவங்களையும், அதனால் உருவாகும் பதற்றத்தையும் மையமாகக் கொண்ட ‘இ1’, திரில்லர் அனுபவத்துடன் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் கவனம் செலுத்தும் படமாக அமைந்துள்ளது.

Spread the love