Saturday, October 3

‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ – திரைப்பட விமர்சனம்

ஒரு ஆம்புலன்ஸ் டிரைவரின் வாழ்க்கையில், அவன் மட்டுமே பார்க்கக்கூடிய ஒரு சிறுமி திடீரென வந்தால் என்ன ஆகும்? அதுவும் அந்தச் சிறுமி தனது பெற்றோரைத் தேடிக்கொண்டிருந்தால்… இந்த வித்தியாசமான சூழலை மையமாக வைத்து பயணிக்கிறது ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’.

கதையின் நாயகனான ஃபஹத் பாசில், சூரி என்ற ஆம்புலன்ஸ் டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒருவருக்கு 25 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் சிக்கித் தவிக்கும் சூரியின் வாழ்க்கையில், எதிர்பாராத விதமாக ஒரு மேஜிக் பொருள் கிடைக்கிறது.அதிலிருந்து திவ்யா என்ற சிறுமி சாரா தோன்றுகிறாள். ஆனால், சாராவை சூரியால் மட்டுமே பார்க்க முடிகிறது. தனது பெற்றோரைத் தேடிக்கொண்டிருக்கும் சாரா, அவர்களைக் கண்டுபிடிக்க சூரியின் உதவியை நாடுகிறாள். ஏற்கனவே பல பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் சூரி, இந்தப் புதிய பொறுப்பை எப்படி எதிர்கொள்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

சூரி கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில், தனது வழக்கமான இயல்பான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்தை சிறப்பாக முன்னெடுத்துச் செல்கிறார். நகைச்சுவை, பதற்றம், உணர்வு என வெவ்வேறு தருணங்களுக்கு ஏற்ற வகையில் தனது நடிப்பை மாற்றிக்கொண்டு கதையின் மையமாக பயணிக்கிறார்.அவருக்கு இணையான முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிறுமி சாரா பாலேக்கரும் தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். ஃபஹத் பாசிலும் சாரா பாலேக்கரும் இணைந்து வரும் காட்சிகள் படத்தின் முக்கிய ஈர்ப்பாக அமைகின்றன.மேலும் மகேஷ் மஞ்ச்ரேகர், சௌரப் சச்தேவா, வெங்கடேஷ் காகுமானு, திவ்யா பிள்ளை, எஸ்.எஸ். ஷஷாங்க் உள்ளிட்டோரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் பிராட் பிரான்சிஸ், நேர்த்தியான கேமரா கோணங்கள் மற்றும் ஒளியமைப்பின் மூலம் கதையின் கற்பனைத் தன்மைக்கும், உணர்வுகளுக்கும் ஏற்ற வகையில் காட்சிகளை அழகாக பதிவு செய்துள்ளார்.கால பைரவாவின் இசையில் பாடல்கள் இனிமையாக அமைந்துள்ளன. அதேபோல், காட்சிகளின் தன்மைக்கு ஏற்ற பின்னணி இசையும் படம் முழுவதும் இதமான முறையில் பயணிக்கிறது.

இயக்குனர் ஷஷாங்க் யேலேட்டி, மேஜிக், கற்பனை, நகைச்சுவை, உணர்வு என பல அம்சங்களை ஒன்றாக இணைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார்.ஒரு ஆம்புலன்ஸ் டிரைவரின் பிரச்சினைகளுக்குள், அவனால் மட்டுமே பார்க்கக்கூடிய ஒரு சிறுமி நுழைவது என்ற ஒற்றை வரிக் கருவியைச் சுற்றி திரைக்கதையை அமைத்து, அதை அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையிலான பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார்.

கற்பனையும் பொழுதுபோக்கும் கலந்த, குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு எளிமையான பயணமாக அமைந்துள்ளது ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’.

Spread the love